கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம்...

 விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ்.


அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை.


அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெரிக் ரெட்மண்டைக் குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம்.


1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ்.


அதோ டிராக்கில் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் அரையிறுதிப் போட்டிக்கு வீரர்கள் தயாராகிறார்கள்.


ஆன் யுவர் மார்க்...


19 வயதிலேயே பிரிட்டனின் 400 மீட்டர் தடகளப் போட்டியின் சாதனை நேரத்தை முறியடித்த டெரிக் ரெட்மண்ட், 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் தான் யார் என்பதை நிரூபிக்க ஐந்தாவது ஓடுதளத்தில் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தார்.


கெட் செட்...


எல்லா போட்டிகளிலும் தன் மகனோடு பயணிக்கும் டெரிக்கின் தந்தை ஜிம், அப்போட்டியில் சுமார் 65,000 பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார்.


கோ... (துப்பாக்கி சத்தம்)


வீரர்கள் தங்களின் ஸ்டார்டிங் பிளாக்கில் இருந்து சீறிப் பாய்ந்தனர். ஓட்டத்தின் முதல் பகுதியிலேயே மெல்ல டெரிக் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.


போட்டியின் எல்லைக் கோட்டுக்கு இன்னும் சுமார் 175 மீட்டர்கள் மட்டுமே பாக்கி... அற்புதமாக ஓடிக் கொண்டிருந்த டெரிக் ரெட்மண்ட் திடீரென துள்ளிக் குதித்தார். அவரது வலது கால் தொடைப் பகுதியில் இருக்கும் ஹேம்ஸ்ட்ரிங்கில் பலத்த காயம் ஏற்பட்டது.


அதுவரை போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த டெரிக்கை, அந்த ஒரு நொடியில் அவரோடு ஓடிய மற்ற ஏழு வீரர்களும் முந்திக் கொண்டு சென்றனர். அவர் கண் முன்னே, அவரின் ஒலிம்பிக் கனவுக் கோட்டை சுக்கு நூறானது. அவரும் ஓடுதளத்திலேயே சுருண்டு உட்கார்ந்தார். போட்டி அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் குழு அவரை சூழத் தொடங்கியது.


விளையாட்டில் இறுதி வரை வாள் வீசுபவர்களைத் தான் உலகம் உச்சி முகரும். எல்லா வீரர்களும் கிட்டத்தட்ட பந்தய தூரத்தை கடக்கும் போது, மீண்டும் எழுந்து நொண்டி அடித்து பந்தய தூரத்தைக் கடக்கத் தொடங்கினார்.


கண்கள் முழுக்க கண்ணீர், ஹேம்ஸ்ட்ரிங் காயம் கொடுக்கும் மரண வலி... இருப்பினும் எல்லைக் கோட்டை நோக்கிய டெரிக்கின் ஓட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.


அவரை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் குழு வந்த போதும் போதும் "இல்லை நான் அந்த படுக்கையில் ஏறமாட்டேன். நான் இந்த போட்டியை நிறைவு செய்ய வேண்டும்" என மறுத்தார் என்கிறது இ.எஸ்.பிஎன் வலைதளம்.


ஒற்றைக் காலில் 175 மீட்டர் தூரத்தை மெல்ல வலியோடு தவ்வித் தவ்வி கடந்து கொண்டிருக்க, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அவரது தந்தை, மகனின் வேதனையை அறிந்து தாவி குதித்து, ஒலிம்பிக் 400 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்த ஓடுதளத்தை நோக்கி விரைந்தார்.


அதிகாரிகள் ஜிம்மை தடுக்க முயல, அவர்களை எல்லாம் தள்ளிவிட்டு, தன் மகனோடு கைகோர்த்தார். தன் மகனை அணைத்துக் பிடித்தவாறு மீத தூரத்தை கடக்க உதவினார் ஜிம் ரெட்மண்ட்.



தன் ஒலிம்பிக் கனவு மீண்டும் சிதைந்ததை எண்ணி, தன் தந்தையின் தோலில் சாய்ந்து கதறி அழுது கொண்டே பந்தய தூரத்தைக் கடந்தார் டெரிக். மீண்டும் என்றால் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்து கொண்டாரா?


ஆம், 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில் கடைசி நேரத்தில் டெரிக் ரெட்மண்டுக்கு குதிகாலில் Achilles tendon என்கிற பகுதியில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பந்தைய தூரத்தை தன் தந்தையின் உதவியோடு, சில நிமிடங்கள் கழித்து நிறைவு செய்த டெரிக் ரெட்மண்டின் போராடும் குணத்துக்காகவும், விளையாட்டின் அடிப்படை தத்துவமான Sportsmanship-க்காகவும் 65,000 ஒலிம்பிக் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.


1992 பார்சிலோனாவில் நடந்த இந்த சரித்திரப் புகழ் பெற்ற இந்த 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஸ்டீவ் லீவிஸ் முதலிடத்தைப் பிடித்தார்.


ஆனால் டெரிக் ரெட்மண்ட் பார்வையாளர்களின் இதயங்களிலும், விடாமுயற்சியின் குறியீடாக பல விளையாட்டு வீரர்களின் மனதிலும் ஒரு நீங்கா இடம் பிடித்தார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...