ரூ.500 கோடி மதிப்பில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - (Hi-Tech Lab) ஹைடெக் லேப்’ - 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்கத் திட்டம்...
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில், அதிநவீன வசதிகளுடன்கூடிய உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 37,358 அரசுப் பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் நிதியுதவி மூலம் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாணவர்கள் இணைய வசதியுடன் கல்வி கற்கும் வகையில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் (ஹை-டெக் லேப்) அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.
முதல்கட்டமாக 6,029 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இவை அமைக்கப்பட்டன. தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "உயர் கல்விக்கு செல்லும்போது, அதற்கான நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் மற்றும் அலுவல் பணிகள் பெரும்பாலும் கணினி சார்ந்தவையாக உள்ளன.எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதற்கேற்ப, அரசுப் பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டுவருகின்றன. முதல்கட்டமாக 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப 10 முதல் 20 கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்குவதுடன், இணையவழி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக 6,966 நடுநிலைப் பள்ளிகளில், ரூ.500 கோடியில் ஹை-டெக் லேப் அமைக்கப்பட உள்ளன.
அவற்றில் கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ள 1,784 நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் ஹை-டெக் லேப் அமைக்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு பள்ளிக்கு தலா10 கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். இந்த ஆய்வகங்கள் அனைத்தும் ‘க்ளவுடு கம்ப்யூட்டிங்’ மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அவற்றை நேரடியாக ஆய்வு செய்யமுடியும். கற்றல், கற்பித்தல் வளங்களையும் பகிரலாம். மேலும், ஆய்வகத்தில் இணையதள பயன்பாட்டு வேகமும் அதிகரிக்கப்படும்.
பாடப் புத்தகங்களில் உள்ள க்யூஆர் கோடு வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி, கூடுதல் தகவல்களை அறியலாம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரந்தோறும் 2 பாட வேளைகள் கணினி பயிற்சிக்கு ஒதுக்கப்படும். வருங்காலத்தில் மாணவர்களுக்கான திறன் தேர்வுகள், பருவத் தேர்வுகளை கணினி வழியிலேயே நடத்தவும் பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.