எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை பணியிட மாற்றம் செய்யும்படி கேட்க முடியாது,’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியை, அம்ரோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த 2013 முதல் 2017 வரையில் பணியாற்றி வந்தார். இந்த இடத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி முடித்ததை தொடர்ந்து, தன்னை கவுதம் புத்தாநகர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யும்படி அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தார். அதை அதிகாரிகள் நிராகரித்தனர். இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ‘மனுதாரர் முதன் முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டு வரையில் கவுதம் புத்தாநகர் கல்லூரியில் தான் தொடர்ந்து 13 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். ஏற்கனவே, பணியாற்றிய இடத்துக்கு தன்னை இடமாற்றம் செய்யும்படி அவர் கோர முடியாது. வேண்டுமானால், அவர் விரும்பும் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்ய கோரலாம்,’ என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பேராசிரியை மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த 6ம் தேதி இந்த அமர்வு அளித்த தீர்ப்பில், ‘எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை இடமாற்றம் செய்யும்படி நிர்பந்தம் செய்ய முடியாது. தேவைக்கு ஏற்றப்படி பணியிட மாற்றம் செய்வது, அதிகாரிகளின் முடிவை பொருத்தது,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.