தமிழகம் முழுவதும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன- திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி(Across Tamil Nadu, there is no opportunity for School Teachers to conduct 'Zero Counseling' as has been done for District Educational Officers. Policies on counseling for teachers are being prepared - Interview with Mahesh Poyyamozhi, Minister of School Education in Trichy)...
கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது உயிரிழந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பள்ளி வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை. மாறாக அவர்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் பார்ப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ்
கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்பொழுதும் போல தொடர்ந்து இயங்கும். நீட் தேர்வு சம்பந்தமாக ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அது சம்பந்தமாக துறை அமைச்சர் சுப்பிரமணியன் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளை எந்த விதத்திலும் குழப்பாமல் சட்டப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கென சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யும்.
நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம். ஆனால் அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.