சக ஆசிரியர்களை பழிவாங்க ‘போக்சோ’வில் மாணவிகளை பொய்ப் புகார் அளிக்கவைத்த தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது (The POCSO Act was passed on the HeadMaster who made the students file false complaints in 'POCSO' to take revenge on Teachers)...
சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் மாணவிகளை தவறாகப் பயன்படுத்திய மதுரை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் முயற்சியால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஒருவர், ஆகஸ்ட் 6-ல் ஊமச்சிகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கருப்பாயூரணி போலீஸ் சரகத்திலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சைல்டு லைன் (1098) எண்ணில் அழைத்தார். அவர் பணிபுரியும் பள்ளியின் புகார் பெட்டியில் தங்களது பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் எழுதிய கடிதங்கள் சிக்கியதாகவும், அதே பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் வம்பு செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் 3 ஆசிரியர்கள் மீது ‘ போக்சோ’ சட்டத்தில் கருப்பாயூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் சிக்கிய பெண் ஆசிரியர் ஒருவர் ,தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் புகார் ஒன்றை கொடுத்தார். ‘‘எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப் போக்கை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட அப்பொய் புகார் பற்றி விசாரிக்க வேண்டும்’ ’என அவர் வலியுறுத்தி இருந்தார்.
ஐஜி-யின் உத்தரவின்பேரில், மதுரை டிஐஜி ஆர்.பொன்னி, எஸ்பி சிவபிரசாத் மேற்பார்வையில் ஊமச்சிகுளம் பெண் காவல் ஆய்வாளர் விசாரித்தார். பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள், அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரிக்கப்பட்டது. விசாரணையில், “நாங்களாகவே அக்கடிதத்தை எழுதவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறி தான் அவ்வாறு எழுதினோம். உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களிடம் தவறாக நடக்கவில்லை’’ என சிறுமிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமிகள் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறுமிகளின் வாக்குமூலம், சாட்சிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மேற்கண்ட புகார் பொய் என தெரியவந்தது. மேலும், அப்பள்ளியில் ஆசிரியர்களுக்குள் விரோத போக்கு உள்ளதாகவும், அந்தப் பகையின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர் பொய்யான புகாரை உடற்கல்வி ஆசிரியர், 2 பெண் ஆசிரியர்கள் மீது சுமத்த பள்ளி மாணவிகளை பயன்படுத்தி இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். இதை ஏற்ற ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் 31-ல் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது. வழக்கு பதிவு முதல் தாமதமின்றி சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 80 நாளுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை சரியென தீர்ப்பு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறு செய்யாதவர்கள் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் இவ்வழக்கை தீர விசாரித்து விரைந்து உண்மையை வெளிக்கொண்டு வந்த மதுரை டிஐஜி பொன்னி, எஸ்பி சிவபிரசாத், ஊமச்சிகுளம் டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளர் அடங்கிய அதிகாரிகளை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பாராட்டினார்.
எஸ்.பி கூறுகையில், ‘‘தனது சுய லாபத்திற்கென மாணவிகளை துண்டிவிட்டு, பொய் புகார் கொடுக்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
சக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் அளிக்க, மாணவிகளை தூண்டிய சம்பவத்தில் தலைமை ஆசிரியர் மீதே போக்சோ சட்டம் பாய்ந்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மதுரை: ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கில் புகாரளிக்க மாணவிகளைத் தூண்டிய தலைமை ஆசிரியர் சரியான விசாரணை செய்த காவல்துறைக்கு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பாராட்டு...
---------------------------------------------------
மதுரையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொய்யாக போக்சோ வழக்குப்பதிவு செய்ய மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் மற்றும் ஊமச்சிகுளம் மகளிர் காவல்நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மீது சில மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் பெட்டியில் மாணவிகள் கடிதத்தை போட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து புகாருக்கு உள்ளான 3 ஆசிரியர்கள் மீதும் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புகாருக்குள்ளான பெண் ஆசிரியர் ஒருவர் தென்மண்டல ஐஜியிடம் ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப்போக்கில் பொய்புகாரை அளிக்க தலைமை ஆசிரியர் மாணவிகளைத் தூண்டியதாகவும், அதனடிப்படையில் பொய்ப்புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, புகாரளித்த சிறுமிகளை தனித்தனியே விசாரித்தபோது தாங்களாக அக்கடிதத்தை எழுதவில்லை என்றும் தலைமை ஆசிரியர் கூறி தான் அவ்வாறு செய்ததாகவும் எந்த ஆசிரியரும் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், குற்றம் செய்யாதவர்கள் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் துரித விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு காவல் துறை தென்மண்டலத் தலைவர் அஸ்ரா கார்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...