கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்தது என்ன? 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?
What happened in Krishnagiri schoolgirl sexual harrasment case? How were the 3 teachers arrested?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக அவர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமையாசிரியரால் வெளிச்சத்துக்கு வந்த குற்றம்
அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராத நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். பிறகு, பள்ளி ஆசிரியர்களுடன் மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரையும் சந்தித்துள்ளார்.
அப்போது அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பதாகவும், அதில் ஈடுபட்டது அவரது பள்ளியின் ஆசிரியர்கள் என்றும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்குமாறு மாணவியின் தாயாரை அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்ததாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
"கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று இரவு, தகவல் கிடைத்தவுடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வராததால் பள்ளி சார்பில் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரிய வந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
அதோடு, பள்ளி ஆசிரியர்களுடைய வழிகாட்டுதலில் சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெர்வித்தார்.
அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு
இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தால் தலைமை ஆசிரியருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
"சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போக்சோ 5 (f), 6(1), BNS 329(3), உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் குற்றத்தை வெளிக் கொண்டு வரக் காரணமாக இருந்த தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட காவல் துறை எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.
ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
மாணவி வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
"குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட உள் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது வேறு எந்த மாணவரோ அல்லது ஆசிரியரோ எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ஆயினும், மூன்று ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு திரு.முனிராஜ் கூறினார். குற்றப் பத்திரிக்கை பெறப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்" என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் தெரிவித்தார்.
பொதுமக்கள் சாலை மறியல்
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன்பு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்களை இங்கு அழைத்து வந்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
போலீசார் விசாரணையில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 3 பேர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததை விசாரிக்க ஆசிரியர்கள் திங்கள்கிழமை அவரது வீட்டிற்குச் சென்றபோதுதான் குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் பள்ளிக் கல்வித் துறையினர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், கைதான ஆசிரியர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு மாதமாக மாணவியின் பெற்றோர் புகார் அளிக்காததது ஏன்?
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவியின் வீட்டுக்குச் சென்றபோது, மாணவியின் தாய், ஜனவரி முதல் வாரத்தில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் மூன்று ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மறுத்துள்ளார்.
"சிறுமிக்கு கருக் கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, குழந்தைகள் நல அலுவலர் கூறுகையில், "குழந்தைக்கு கருக்கலைப்பு செய்யபட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆட்சியரும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அச்சத்தால் புகார் அளிக்க முன்வரவில்லை," என்று தெரிவித்தார்.
அதோடு, தலைமை ஆசிரியரின் முன்னெடுப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அளித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர் புகார் அளிக்க முன் வந்தததாகவும் அவர் கூறினார்.
மேலும், "பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 24 மணிநேரமும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில் இந்தக் கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்றும், இது போன்ற பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.