கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு.


"ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, அவர் படித்த ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி பேசினார். 'அமெரிக்காவில் 2 பேரை மிக உயர்ந்தவர்களாக பார்க்கிறார்கள். ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் ஆசிரியர். பிரான்சை பொருத்தமட்டில், நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய அந்த உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஜப்பானில் ஒரு ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் அனுமதியை பெற்றால்தான் முடியும். கொரியாவில் ஒரு அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளையும் உடையவர்கள்தான் ஆசிரியர்கள்' என்று புகழாரம் சூட்டினார்.


ஆக ஆசிரியர்களை எந்த சமுதாயம் போற்றுகிறதோ, அந்த சமுதாயம்தான் சிறந்த சமுதாயமாக இருக்கும், அந்த நாடுதான் வளர்ந்த நாடாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அத்தகைய ஆசிரியர் பணிக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், தகுதித் தேர்வில் தேறினால்தான் மட்டுமே முடியும் என்ற நடைமுறை இருக்கிறது. 2009ஆம் ஆண்டு இலவச கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமனம் பெறவேண்டுமானால், அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.


தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் அறிவிக்கைப்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக்கான 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பும், 6 முதல் 8-ம் வகுப்புக்கான ஆசிரியர்கள் பி.எட். பட்டப்படிப்பும் பெற்று இருக்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்த தேர்வுகளை எழுதியவர்களில், முதல் தாள் தேர்வில் 14 சதவீதம் பேரும், 2-ம் தாள் தேர்வில் 6 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு பெறாத நிலையில் என்ன செய்வோம்? என்று அந்த ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆசிரியர்களை பொறுத்தமட்டில், இந்த தகுதித் தேர்வு தேவையே இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஆசிரியர் கல்வியில் சேரும்போதே, பிளஸ்-2 அல்லது பட்டப்படிப்பு தேர்வுகளில் வெற்றி பெற்று, ஆசிரியர் கல்வியிலும் சேர்ந்து, அதிலும் பட்டயப்படிப்பு தேர்வு அல்லது பட்டப்படிப்பு தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் அரசு பள்ளிக்கூட பணியில் சேர வேண்டுமென்றால், மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இவ்வளவு தேர்வுகளை எழுதி தேர்வு பெறும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும். எனவே ஆசிரியர் தகுதி தேர்வு தேவையே இல்லை என்ற கொள்கை முடிவை மத்திய-மாநில அரசுகள் எடுத்து தகுதித் தேர்வுக்கு 'டாட்டா' சொல்ல வேண்டும் என்பதே ஆசிரியர்கள் கருத்தாக இருக்கிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...