வீடு விற்பனை நிலவரம் அறிய வீட்டுவசதி வாரிய புதிய இணையதளம் அறிமுகம்...
வீட்டுவசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விவரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி திட்டங்கள் குறித்த விபரங்களை பொது மக்கள் அறிவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொது மக்கள் அணுகுகின்றனர்.
ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விவரங்களை அளிப்பதில்லை. இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக, ஒரு இணையதளம் துவக்கப்பட்டது. அதில் முழுமையான விபரங்கள், பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த இணையதளமும் முறையாக செயல்படாமல் முடங்கியது.
இதற்கு தீர்வாக, புதிய இணையதளம் ஏற்படுத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. அதன்படி, tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை, வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தார்.