கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்...



 திருவள்ளூர் மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை மாற்றி வரும் நடப்பாண்டில், அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் வாகைசூட வேண்டுமென மாவட்ட கலெக்டர் கல்வித்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, அம்பத்துார், ஆவடி, பொன்னேரி என ஐந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 944 துவக்கப்பள்ளிகள், 265 நடுநிலைப்பள்ளிகள், 145 உயர்நிலைப்பள்ளிகள், 118 மேல்நிலைப்பள்ளிகள் என 1,472 அரசு பள்ளிகள் உள்ளன. சில தினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து அரசு உயர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு 2022-23ம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் 2023-24ம் ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.



கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:


கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை கொண்டு செயலாற்ற வேண்டும். எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் கல்வி நிலை உயர வேண்டும். நடப்பு கல்வியாண்டில் குறைந்தபட்சம் நம் மாவட்டத்தில் 25 மாணவர்கள் மருத்துவர்களாக அரசு மருத்துவக்கல்லுாரிகளில் சேரக்கூடிய நிலையில் அவர்களை ஆசிரியர்களாகிய நீங்கள் தயார்ப்படுத்த வேண்டும். அதேபோல் குறைந்தபட்சம் 250 மாணவர்களை முதல் 10 இடத்தில் முதன்மை நிலையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில் சேரக்கூடிய அளவிற்கு வெற்றி பெற வைக்க வேண்டும்.மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைத்து தலைமையாசிரியர்களும் கடினமாக உழைக்க வேண்டும். அதனடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதற்காக 10 பள்ளிகளுக்கு ஒரு உயர் அதிகாரி என 25 பள்ளிக்கல்வித்துறை அல்லாத உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி செயல்படுவார்கள். குறுகிய காலம் உள்ளதால் இடைநிற்றல் மாணவர்களை தேர்வெழுத வைத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற வகையில் மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். போதைப்பழக்கம் உள்ள மாணவர்கள் குறித்த விவரம் தெரிவித்தால் அம்மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்களை கொண்டு உடனடியாக ஆலோசனைகள் வழங்கப்படும். 100 சதவீதம் தேர்ச்சி என்ற நம் இலக்கை அடையும் வகையில் இந்த திட்டத்திற்கு வாகை சூடுவோம் என்ற இலச்சினையை அறிவித்துள்ளேன். இவ்வாறு கலெக்டர் பேசினார்.



தலைமையாசிரியர்கள் புலம்பல்

அரசு பள்ளிகளில் அலுவலக பணியாளர், உதவியாளர், உடற்பயிற்சி ஆசிரியர், காவலாளி, துப்புரவு பணியாளர்கள் போன்ற பணியாளர்களும் காலியாக உள்ளன. சில பள்ளிகளில் ஆசிரியர்களே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில பள்ளிகளில் துப்புரவு பணிகளை மாணவ, மாணவியரும் செய்து வருவது மாணவர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியாற்ற வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி மாணவர்களின் 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns