தமிழ்நாடு அரசுப் பள்ளி SMC குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: EMIS தளத்தில் பதிய உத்தரவு...
💥சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிதாக தேர்வான உறுப்பினர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
💥தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.
💥இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
💥அதன்படி முதல்கட்டமாக 12,117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக மீதமுள்ள 11,924 தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் நேற்று மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவற்றில் அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோர்கள் எஸ்எம்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
💥இதேபோல், தலைவர், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய 24 பேர் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக மீதமுள்ள அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஆகஸ்ட் 24, 31-ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.
💥இந்நிலையில், எஸ்எம்சி குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உட்பட விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இது சார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.