எமிஸ் முதல் அப்பா வரை மொத்தம் 12 செயலிகள் - போனும், கையுமாக ஆசிரியர்கள் அவதி - நாளிதழ் செய்தி
A total of 12 apps from EMIS to APPA - Teachers Suffering by Phone and Hand - Daily News
கல்வித்துறையில் கற்பித்தலை தவிர ஆசிரியர்களிடம் என்ன வேலை வாங்குவது, தனியார் நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து என்னென்ன ஒப்பந்தங்களை வாரி வழங்கி, ஒதுக்கப்பட்ட நிதியை கரைப்பது என்ற மனநிலை தான் தற்போது மேலோங்கி கிடக்கிறது. வேறு எந்த துறையிலும் இல்லாத அளவில் இத்துறையில் தான் தனியார்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் (ஸ்கீம்ஸ்) அதிக எண்ணிக்கையில் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் என இத்துறையின் ஒட்டுமொத்த தகவல்களும் இடம் பெற்றுள்ள 'எமிஸ்' சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை உட்பட நாள் ஒன்றுக்கு 120க்கும் மேற்பட்ட பதிவேற்றங்கள் இத்தளத்தில் தினம் பதிவிடப்பட்டு வருகின்றன.
காலை வருகை பதிவை மேற்கொள்வதற்கு வசதியாக ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியில் 'டி.என்.எஸ்.இ.டி., வருகை பதிவு' ஆப் ஐ பதிவிறக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பின் டி.என்.எஸ்.இ.டி., ஸ்கூல், டி.என்.எஸ்.இ.டி., பேரன்ஸ், டி.என்.எஸ்.இ.டி., ஸ்டாப், எஸ்.எம்.சி., வருகை பதிவு, எஸ்.எம்.சி., உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி, டோபோக்கோ மானிட்டரிங், மதிய உணவு, காலை உணவு, மணற்கேணி என அடுத்தடுத்து 11 'ஆப்'களை ஆசிரியர்கள் தங்கள் அலைபேசிகளில் தற்போது வரை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'அப்பா' (அனைத்து பிள்ளைகள் பேரன்ட்ஸ் டிச்சர்ஸ் அசோசியேஷன்) என்ற 'ஆப்'ஐ 12வதாக அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ஆப்களையும் கண்காணிப்பதற்குள் ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
கற்பித்தலை தாண்டி இதுபோன்ற டேட்டா கலெக் ஷன் வேலைகளை தான் ஆசிரியர்கள் பிரதானமாக செய்துகொண்டுள்ளோம். மிகச் சிலரே அட்வான்ஸ் மாடல் அலைபேசிகளை வைத்துள்ளனர். 80 சதவீதம் ஆசிரியர்கள் சுமார் ரகங்களை தான் வைத்துள்ளனர். ஏற்கனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், வர்த்தக, வங்கி ரீதியாக பல சொந்த தேவைக்காக பல ஆப்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம்.
அவற்றோடு கல்வித்துறை ஆப்களையும் பராமரிப்பது சவாலாக உள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 1 ஜி.பி., ரேம் கொண்ட 'டேப்' வழங்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ்' பிரச்னையால் அதில் இதுபோன்ற ஆப்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 'டேட்டா' தீர்ந்துவிடுவதால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. செலவு எங்கள் தலையில் விழுகிறது. மாணவர்களுக்கான கற்பித்தல் நேரம் பாதிக்காத வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.