அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
Sexual Harassment of Govt School Girls - Teacher Arrested in POCSO Act
சேலத்தில் ஏற்காடு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியின மாணவ மாணவிகள் பயிலும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் இளையகண்ணு என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கருமந்துறை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து பல மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் நெய்ய மலை பகுதியை சேர்ந்த இளைய கண்ணு என்பவர் 2019 முதல் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளி மலையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும் தனது தோழிகள் 4 பேரிடமும், ஆசிரியர் இளைய கண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது மாணவியரிடம் பாலியல் சீண்டல் இருந்தால் தெரிவிக்கலாம். உங்களது பெயர் வெளியில் வராமல் நாங்கள் பாதுகாப்போம் என்று கூறியதை அடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணுவின் மீது பாலியல் சீண்டல் குறித்து புகார்கள் தெரிவித்தனர்.
இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் மாணவிகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில், சென்னையில் நேற்று, இளையகண்ணுவை கைது செய்த போலீசார் ஏற்காடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு போக்சோ வழக்குகளில் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.