இந்தி கற்றுக் கொள்ள என்னதான் பிரச்சனை?
What is the problem to learn Hindi?
"எதுக்கு சார் இந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்றீங்க" என்றபடியே வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு முகத்தை பார்த்தார் நண்பர்.
பொறுங்கள் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு ரெண்டு சப்பாத்தி என்றேன் சர்வரிடம்.
"அடுத்து என்ன சார்" என்றார் சர்வர்
நண்பர் ஒரு தோசையும், நான் மறுபடி ரெண்டு சப்பாத்தியும் சொன்னவுடன், அவர் ஆச்சரியத்துடன் "என்னங்க நீங்க, வெரைட்டியா டிபன் ஐட்டம் இருக்கும்போது மறுபடியும் சப்பாத்தியே கேக்குறீங்க" என்றார் ஒருவித அசூசையுடன்.
பொறுங்கள் சொல்கிறேன் என்றேன்.
அவர் என்னை விநோதமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் இருவரும் முதலில் கேட்டதை எடுத்து வந்து வைத்துவிட்டு சர்வர் நகர்ந்தவுடன் பொங்கலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
நண்பர் பதற்றத்துடன், "சார், அது நான் கேட்டது" என்றார்.
நான் நிதானமாக, ஓ... சரி பரவாயில்லை நீங்கள் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன்.
"அட, எனக்கு சப்பாத்தி பிடிக்காதுங்க" என்று சொல்லியபடியே வேண்டா வெறுப்புடன் சாப்பிட ஆரம்பித்தார்.
"அப்புறம் சார் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே. ஹிந்தி"... என்று முடிப்பதற்குள், கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன் என்றேன். அவர்
நக்கலாக சிரித்துக் கொண்டார்.
தோசையும் சப்பாத்தியும் வந்தது.
உள்ளே இறங்க மறுத்த சப்பாத்தியின் கடைசி பிட்டை இறக்க அவர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, தோசையை சாப்பிட ஆரம்பித்தேன்.
டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த காட்சியைப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்...
"அலோ உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள்தான் உங்கள் உணவை ஆர்டர் செய்துகொள்ள வேண்டும். உங்கள் உணவை என் தலையில் கட்ட நீங்கள் யார்?" என்று கொதித்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது!
அவரிடம் அமைதியாகச் சொன்னேன். நாளை காலையில் வெளியேறிவிடும் உணவை உங்கள் மீது திணித்ததற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருகிறதே, காலங்காலமாக பேசும் ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியை திணிப்பதை எப்படி இவ்வளவு மொன்னையாக அணுகுகிறீர்கள்?
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...
உங்கள் முன் இருக்கும் சப்பாத்திதான் இந்தி. நான் மைய அரசு. ஒரே ஒரு வித்தியாசம்தான். நானாவது உங்கள் உணவை சாப்பிடுவேன். மைய அரசுகள் அதை செய்ய மாட்டார்கள். சப்பாத்தியை தலையில் கட்டுவது மட்டும்தான் அவர்கள் வேலை, வாங்க போகலாம்.
இதுதான் விரும்பி படிப்பதற்கும்,
திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்...
பதிவு: ஆனந்த் ஆனந்த் பக்கத்திலிருந்து