அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் LLD - Doctor of Law என்னும் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு - தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகம்
Ambedkar Law University introduces LLD - Doctor of Law - a higher research degree - for the first time in Tamil Nadu
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வுப் படிப்புக்கு மேலாக எல்எல்டி எனும் மிக உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்தாண்டு முதல் எல்எல்டி (Doctor of law) என்ற மிக உயரிய ஆராய்ச்சி பட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதை தொடங்கி வைத்தார். வரும் கல்வியாண்டில் (2025-26) இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் https://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சட்டத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்கள் எல்எல்டி படிக்க தகுதியானவர்கள். முழு நேர படிப்பாகவும் அல்லது பகுதி நேரமாகவும் படிக்கலாம். பிஎச்டி பட்டம் பெற்று 5 ஆண்டுகள் கழிந்த பின்னரே எல்எல்டி படிப்பில் சேர முடியும். இதில் சேர விரும்பும் தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.2,500 செலுத்த வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2,000 செலுத்தினால் போதுமானது.
ஆய்வு குறித்த தகவல்கள் மற்றும் முந்தைய ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்புக்கு பதிவு கட்டணமாக ரூ.15,000, ஆண்டு கட்டணமாக ரூ.30,000 மற்றும் வைப்பு தொகையாக ரூ.10,000 செலுத்த வேண்டும். கூடுதல் அவகாசம் எடுத்துகொள்ளும் ஆய்வு மாணவர்கள் ரூ.20,000 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு உட்பட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.