கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தாகம் - நியாயமும் நிலைப்பாடும்

 

 

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தாகம் : நியாயமும் நிலைப்பாடும் - மு.சீனிவாசன் - தீக்கதிர் நாளிதழ் சிறப்புக் கட்டுரை


Government employees' thirst for pension - Justice and position


தமிழ்நாடு அரசின் 2025-26 பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme), சரண் விடுப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் நிறைவேற்றத்தை எதிர்பார்த்திருந்தனர்.


வாக்குறுதிகளும் ஏமாற்றமும்

தற்போதைய ஆட்சி 2021 தேர்தலில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் 309 முதல் 318 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அச்சடித்து வெளியிட்டனர். இந்த உறுதிமொழிகள் ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, இதனால் 11 தொகுதிகளில் அரசு ஊழியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக மாறின. கடந்த நான்கு ஆண்டுகளில் கொரோனா, வெள்ளம், புயல் என்று பல்வேறு காரணங்களால் கோரிக்கைகள் தள்ளிப்போடப்பட்டன. இந்த இடர்களின் போது அரசு ஊழியர்கள் அரசுக்கு உறுதுணையாக நின்றனர். கொரோனா காலத்தில் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறை ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றினர், பலர் உயிரிழந்தனர். ஆனால் இந்த இறுதி பட்ஜெட்டிலும் ஓய்வூதியத்திற்கு பதிலாக “ஒருங்கிணைந்த ஓய்வூதிய ஆய்வுக்குழு” மற்றும் சரண் விடுப்பு 01.04.2026 முதல் என்ற அறிவிப்பு ஊழியர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.


ஓய்வூதியம்: உரிமையா, கருணையா?

1950 முதல் 2003 வரை பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. இது அரசின் கருணைத் தொகை அல்ல; ஊழியர்களின் உரிமை. 1950 ஏப்ரல் 17 அன்று ஒன்றிய அரசின் முதலாவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் பங்களிப்பு சேமநலத்திட்டம் பொது சேமநல நிதி என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசின் பங்களிப்பு தொகையை அரசே பயன்படுத்திக் கொண்டு, அதற்குப் பதிலாக ஊழியர் ஓய்வு பெற்ற பின் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிதிச்சுமை குறைப்பு அல்ல, மாறாக அரசின் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதே ஆகும். 2003 முதல் இன்று வரை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 80,000 கோடி ரூபாய் அரசின் கைவசம் உள்ளது. அதன் வட்டி விகிதமே பழைய ஓய்வூதியச் செலவினத்தை ஈடுகட்டும். மேற்கு வங்காளம் இன்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கடைப்பிடிக்கிறது, பஞ்சாப், கோவா, ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மீண்டும் பழைய திட்டத்திற்கு மாறியுள்ளன.


சரண் விடுப்பின் அவசியம்

தமிழக அரசுத் துறையில் 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால் தற்போதைய ஊழியர்கள் கடும் பணிச்சுமையில் உள்ளனர். ஒவ்வொரு ஊழியரும் இரண்டு அல்லது மூன்று நபர்களின் வேலையை செய்ய வேண்டியுள்ளது. அலுவலக நேரத்திற்குப் பிறகும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகங்கள் முழு அளவில் இயங்குவது வழக்கமாகிவிட்டது. இதனால் பணிச்சுமை, மன அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இவர்களால் எடுக்க முடியாத விடுப்புகளுக்கான சரண் விடுப்புத் தொகையை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடுவது நியாயமற்றது. பெரும்பாலான ஊழியர்கள் மே-ஜூன் மாதங்களில் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இத்தொகையை எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே, சரண் விடுப்புத் தொகையை மறுப்பது, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கு தடையாக அமையும்.


ஒப்பந்த ஊழியர்களின் நிலை

சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் போன்ற ஊழியர்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது. குறிப்பாக, 40 ஆண்டுகளாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தில் வெறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்குவது அநீதியானது. அவர்கள் குறைந்தபட்சம் ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.


கருணை அடிப்படை நியமனம்

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக வழங்கப்படும் கருணை அடிப்படை நியமனம் 25% இருந்ததை தற்போதைய அரசு 5% ஆக குறைத்துள்ளது. இது மிகவும் நியாயமற்றது. எனவே, கருணை அடிப்படை நியமனத்தை மீண்டும் 25% ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாகும்.


எதிர்காலப் போராட்டங்கள்

அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 25.02.2025 அன்று 4.5 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 13.03.2025 அன்று முதலமைச்சரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் 14.03.2025 பட்ஜெட் அறிவிப்புகள் ஏமாற்றத்தை அளித்தன. இதையடுத்து, 23.03.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 1988, 2003, 2016 போன்ற வரலாற்றுப் போராட்டங்கள் உருவாகும் என எச்சரிக்கப்படுகிறது. “வெளிப்பூச்சால் ஒரு கட்டடத்தை நிலைநிறுத்திவிட முடியாது” என்பதால், உறுதியான நடவடிக்கைகளை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். “உங்களால்தான் இந்த அரசு, எனவே உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை, மறுக்கவில்லை” என்ற முதலமைச்சரின் உறுதிமொழியை அரசு ஊழியர்கள் நம்பி காத்திருக்கின்றனர். “என்று தணியும் எங்கள் ஓய்வூதிய தாகம், என்று புரியும் எங்கள் கோரிக்கைகளின் நியாயம்” என்ற கேள்வி அரசின் முன் உள்ளது. கனவு நிறைவேறுமா, அல்லது களம் காண்பதா என்பதை  அரசு தீர்மானிக்க வேண்டும், இல்லையேல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SDATன் கீழ் செயல்பட்டு வரும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி ...