அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம்
அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம். ஆனால் அதில், அரசை விமர்சிக்க கூடாது' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவை பின்பற்றி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வி சார்ந்த அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களின் எழுதும் திறனை அரசு அங்கீகரிக்கிறது. எழுதும் திறமையுள்ளோர் இலக்கியம், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை, அரசின் கொள்கைகள், துறை சார்ந்த விளக்கங்கள் அடங்கிய நுால்களை எழுதும் முன், அரசின் அனுமதியை பெற வேண்டும்.
அதேபோல, அரசின் மீதான விமர்சனமோ, எதிரான கருத்துக்களோ, தாக்குதலோ இடம் பெறாது; மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெறாது என்ற நிபந்தனையுடன் கூடிய முன் அனுமதி பெறாமல், கலைப்பணிகளில் ஈடுபடவோ, புத்தகத்தை வெளியிடவோ கூடாது.
அத்துடன், முன் அனுமதி பெறாமல், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியமோ, காப்புரிமை தொகையோ பெறக்கூடாது. புத்தகத்தை விற்பனை செய்வதற்கோ, ஊக்குவிப்பதற்கோ தன் நேரத்தையும், அரசாங்க செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.