கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ? - மருத்துவரின் எச்சரிக்கை பதிவு



 தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ? - மருத்துவரின் எச்சரிக்கை பதிவு


அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள்    தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?


மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில  நூறு கிலோமீட்டர்கள் லாங்  ட்ரைவ்  செல்பவரா  நீங்கள்? 


தொலைதூர விமானப்பயணங்களின்  மூலம் காலை நியூயார்க்கில்  காபி 

மாலை டோக்கியோவில்  டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்? 


குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக   சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம்   ஓட்டும் லாரி ஓட்டுநர்கள்  / அரசு விரைவுப்போக்குவரத்து  பேருந்து ஓட்டுநர்கள்  / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள்  


இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது  தான். 


Dr.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப்  சர்மா எனும் முப்பது வயது இளைஞர் 

வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக  ரிசிகேஷில்  இருந்து காரை  எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார் 


இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக்  வண்டி  ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை. 


வழக்கமான  கியர்  வண்டியில் இடது கால் க்ளட்ச்சில்  எப்போதும் கால் இருக்க வேண்டும். 

ஆனால் ஆட்டோமேட்டிக்கில்  ப்ரேக் ஆக்சிலேட்டர்  இரண்டும் வலது காலால்  இயக்கினால்  போதும். 


மேலும் விலையுயர்ந்த  கார்களில் "cruise" மோட்  என்று இருக்கும். 

நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன்  அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ்  போட்டு விடலாம். 


இப்போது வலது  காலுக்கும்  வேலை இருக்காது. 


சரி விசயத்துக்கு வருவோம். 

இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான்  ஸ்டாப்பாக  வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை  அடைந்துள்ளார். 


கூடவே நன்றாக டைட்டாக  இருக்கும் படியான சாக்குத்துணியால்  ஆன பேண்ட்டை  அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும்  ஜீன்ஸ் பேண்ட்  உருவாக்கப்படும்  டெனிம்  வகை துணி - சாக்குத்துணி தானே. 


நமது சீதோஸ்ன  நிலைக்கு சற்றும் பொருந்தாது  என்றாலும் நாம் ஃபேசனுக்காக  ரோசத்தை  விடும் கூட்டமன்றோ? 


இந்த டைட் டெனிம்  பேண்ட்  போட்டுக்கொண்டு  எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு

இடது கனுக்காலில்  நன்றாக வலி  இருந்துள்ளது.  


முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத  சட்டமன்றோ.? 

தம்பியும்  அந்த வலியை  புறக்கணித்து  இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார். 


அங்கும் குத்த  வைத்தபடியே  பணி செய்யும் வொய்ட்  காலர் வேலை தான். 


வலி அதிகமாகியிருக்கிறது. 

இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது 

தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு  வந்திருக்கிறது. 

இதை Black outs என்கிறோம். 


கூடவே மூச்சிரைப்பும்  படபடப்பும் 

பிறகு மூர்ச்சை  நிலைக்கு சென்று விட்டார். 


கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு  செல்ல


ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள். 

உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். 

அங்கே நாடித்துடிப்பு  மிக குறைவாக இருக்கவே 


இதயத்துடிப்பையும்  சுவாசத்தையும்  மீட்கும்  நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation ஐ செய்து  

உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து  இரண்டுக்கும்  கால்கட்டு  போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.


இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்.. 

நானும் வாரக்கடைசில  சென்னைல  இருந்து வண்டிய கெளப்பி  நான்ஸ்டாப்பா  மதுரைக்கு கார் ஓட்டிட்டு  போய்ட்ருக்கேன் என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதறும் அவர்களின் இதயத்துடிப்பு  இங்கு வரை கேட்கிறது. 


சொல்கிறேன் ..


ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்..இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு  விதி இருக்கு. 


சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர்  பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை  வலியே  இருந்தாலும் பரவாயில்லை  எழுந்து நடந்தே ஆகணும்  என்று வற்புறுத்துவது  எதனால்? 


காரணம் இருக்கிறது. 

நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ  வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மெதுவாகும்  மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தின் சுழற்சியும்  குறையும். 


இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும். 


இதனால் நமது கால்களில் உள்ள ஆளத்தில்  இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரலாம். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடக்கூடும். எனினும் அனைவருக்கும் இவ்வாறு நடக்காது. ஒரு சிலருக்கு இவ்வாறு ரத்தக்கட்டி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். 


இந்த ரத்தக்கட்டி  நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva  எனும் பெரிய சிறைதனில் நுழைந்து 

இதயத்தில் உள்ள வலப்பக்க  மேல்புற  அறையான Right atrium  அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு  பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின்  ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம். 


இது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம். 


இதய ரத்த நாளங்களை  அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction. 


ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு  ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி  புது வொயஃப்  கிட்ட சீன் போடலாம்னு பாத்தா...அதுலயும்  இப்டி பயம்புடுத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா 


என்ன செய்வது? 

நம் உடலின் இயற்கை அப்படி. 

நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள்.  


நாம் நடப்பதை நிறுத்தினால்  மரணம் வரப்போகிறது என்று அர்த்தம்.   


நமது கால்களின் கணுக்கால் பகுதியில்  Soleus எனும் பிரத்யேகமான தசை  உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம். 


இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை  ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க  


ஒரு விநாடிக்கு  9.8 மீட்டர் என்ற அளவில்  இழுக்கும் பவர்ஃபுல்  புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை  பம்ப்  செய்கிறது. 

இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய்  போன்று வேலை செய்கிறது. 


ஒரு பக்கமாக ரத்தத்தை  மேலே ஏற்றிவிட்டு 

கீழே ரத்தம் இறங்காமல்  பார்த்துகொள்கிறது. 


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ்  தசை கூட 

நீரிழிவு 

உடல் பருமன் 

முதுமை போன்றவைகளால்  வலுகுறைகிறது.  


கால்களுக்கு செல்ல வேண்டிய  ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான  பெல்ட்/ டைட்டான  சாக்குத்துணி  பேண்ட்  அணிந்து தடுத்தால் 

என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய  வேண்டியதில்லை. 


இந்த கட்டுரையின் கடைசி கட்டம் 


டேக் ஹோம் அட்வைசஸ் 


1. வீக்கெண்ட்  ட்ரிப்  நிச்சயம் தேவை. 

லாங்க்  ட்ரைவும்  ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக  பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை. 

நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர  டீக்கடைகள்  இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும்  ஒரு சாயா  அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக  செல்வது தான் நல்லது . நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில்  ஏறுவது சிறந்தது. 


2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும்  டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை  அல்ல. 

பருத்தி  துணிகள் சிறந்தவை. 

அளவுக்கு பொருந்தாத  டைட்  ஜீன்ஸ்கள்  வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும்  லூசாக  வாய்ப்பு உண்டு 😃


3.  முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள் 

பேருந்துகளில்  நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது. 

இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம்  அல்லது கால்களை  தையல்  மிசின் அமுக்குவது  போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும். 


4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர  வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது  நடந்து விட்டு வண்டியில்  ஏற வேண்டும்.  என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு  நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.


5. விமானங்களில்  நெடுந்தொலைவு  பயணப்படும்  மக்கள்  வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம்  இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும்  பரவாயில்லை. ஃப்ளைட்டில்  டாய்லெட்  எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது  எழுந்து நடங்கள்.  

ஏர்  ஹோஸ்டஸ்  அம்மணிகள்  என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள்  என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள்.  


6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு  ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம்  போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும்.

பயணத்தின்  போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே. 


7. வீட்டில் நடக்கவே  இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால்  முட்டிப்பகுதியில்  காலை  அவ்வப்போது  மடக்கி நீட்டும்  பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல்  மிசினை அமுக்குவது  போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.



8. முதியவர்கள் / கர்ப்பிணிகள்  / வேரிகோஸ்  வெய்ன்  பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கம்ப்ரசன்  ஸ்டாக்கிங்க்ஸ்  அணிந்து கொண்டு பயணம் செய்யலாம் 


9. கட்டாயம் தொலை தூரப்பயணத்தின்  போது தண்ணீர் போதுமான அளவு அருந்த மறக்கக்கூடாது . காரணம் நீரிழப்பு  ரத்தத்தை  எளிதில் உறைய வைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தண்ணீர் குடித்துக்கொண்டே  இருக்க வேண்டும். தண்ணீர் குடித்தால்  யூரின் போக  வேண்டி வரும் என்று முக்கியமாக பெண்கள் சரியாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.  அவர்களுக்கானது இந்த எச்சரிக்கை. 


10.எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும்  பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும்  

எழுந்து நடக்கும் வரை தான்   

நாம் வாழ்கிறோம் 


11 . முதியோர்களுக்கு மூட்டுத் தேய்மானத்திற்கு பரிந்துரைக்கப்படும் KNEE CAP / KNEE CUFF போன்றவற்றை நீண்ட பயணங்களின் போது கட்டாயம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை  அவிழ்த்து ரத்த ஓட்டத்தை உறுதி செய்த பின் மீண்டும் கட்டிக் கொள்ளலாம் அல்லது இறுக்கமாக அணியும் KNEE CAPகளை நீண்ட பயணங்களின் போது தவிர்க்கலாம். 

முதுகுக்கு அணியும் Lumbo sacral belt போன்றவற்றை அணிவதில் பிரச்சனை இல்லை. 


  

நடை நின்று  விட்டால் 

ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்

அல்லது 

அது நம்மை நெருங்கி விட்டது 

என்று அர்த்தம் 


அவசியமான குறிப்பு 


கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குறிப்பாக மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களின் ரத்த உறைதல் தன்மையை சரிபார்க்கும் PT , aPTT , INR , BT, CT ஆகிய பரிசோதனைகளை இப்போது ஒரு முறை செய்து ரத்த உறைதல் தன்மை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ரத்த உறைதல் தன்மையில் பாதிப்பு இருப்பதைக் காண முடிகிறது. இவர்களுக்கு மற்றவர்களை விட சீக்கிரம் ரத்தம் உறைவதால் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு இதய ரத்த நாள அடைப்பு / மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. 


பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Portronics Mobike 4 Bike Phone Mount with 360° Rotational, Strong Hold for Bicycle, Motorcycle Compatible with 4.7 to 6.8 inch Devices (Black)


https://amzn.to/3KRgV8k




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு

ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு (வாட்ஸ் அப...