கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவ தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Diabetics no longer need insulin injections - Chinese scientists make a marvelous discovery



 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி இனி தேவை இல்லை - சீன  விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு


சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 


அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 


சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 


சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 


சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 



சமீபத்தில் சீன மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வியத்தகு சாதனை ஒன்றைப் புரிந்திருக்கிறார்கள்


முற்றிலும் இன்சுலின் சுரப்பு இல்லாத நிலையில் டைப் ஒன் நீரிழிவு நிலையில் இருந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு சிகிச்சை அளித்து அவரது நீரிழிவைக் குணப்படுத்தி உள்ளனர். 


குணம் என்றால் இன்சுலின் ஊசி தேவைப்படாத நிலையில் அவரது உடலில் சுயமாக இன்சுலின் உற்பத்தி மீண்டும் ஏற்படுமாறு செய்துள்ளனர். 


இதை அவர்கள் எப்படி செய்தனர்? 


வாருங்கள் காண்போம்


அந்தப் பெண்ணின் கொழுப்புத் திசுக்களில் இருந்து செல்களை எடுத்தனர்.


அத்தகைய செல்களில் உள்ள மரபணுக்களில் உயிர் வேதியியல் ரசாயனங்கள் மூலம் உரிய மாற்றங்களைச் செய்து மறு-ஆக்கத்துக்கு உட்படுத்தி அதை எதுவாகவும் உருமாறும் செல்களாக (Pluripotent stem cells) மாற்றினர்.  


பிறகு அந்த ப்ளூரி பொட்டண்ட் ஸ்டெம் செல்களை -  இன்சுலின் சுரக்கும் இயற்கையான  பீட்டா செல்களாக உருமாற்றினர். இவற்றுக்கு "ரசாயனம் மூலம் தூண்டப்பட்ட ப்ளூரி பொட்டன்ட் ஸ்டெம் செல்களில் இருந்து தோன்றிய ஐலெட் செல்கள்" என்று பெயரிட்டனர்.  


இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐலெட் செல்களை அந்தப் பெண்மணியின் முன் வயிற்றுப் பகுதியில் உள்ள தசையில் ஊசி மூலம் செலுத்தினர். 


இவ்வாறு ஊசி மூலம் செலுத்தியதற்கு அரை மணிநேரம் மட்டுமே எடுத்துக் கொண்டது என்பதால் அனைத்து ஊடகங்களும் அரை மணிநேரத்தில் டைப் ஒன் நீரிழிவை குணப்படுத்தியதாக பறைசாற்றினர்.


இதற்கு முன்பு இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சியில், கணையத்தின் பீட்டா செல்களை கல்லீரலின் ரத்த நாளத்தில் சூழ்வைப்பதே முறையாக இருந்தது. எனினும் அந்த முறையில், உடலின் எதிர்ப்பு சக்தி தீவிரமாக இந்த புதிய செல்களை எதிர்த்து அழிப்பது நடந்தது. 


இந்தப் புதிய முறையான முன் வயிற்றுப் பகுதி தசையில் ஊசி மூலம் எளிதாக செலுத்தும் முயற்சி சிறப்பானதாகும். 


மேலும், நோயரிடமிருந்தே எடுக்கப்பட்ட திசுக்களை அவருக்கே செலுத்தும் போது எதிர்ப்பு சக்தியால் புதிய செல்கள் வீழ்த்தப்படும் சதவிகிதம் மிக மிகக் குறைவு. 


இது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்பதால் நோயருக்கு எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்பட்டதும் தெரிகிறது


இத்தகையதோர் புதிய முயற்சியை செய்த 75 நாட்களுக்குப் பிறகு அந்த நோயாளிக்கு இன்சுலின் ஊசி தேவை இல்லாமே ரத்த க்ளூகோஸ் அளவுகள் நீரிழிவு இல்லாதவருக்கு இருக்கும் நிலைக்கு வந்தது தெரிகிறது.


ஒரு வருடமாக அந்த நோயாளியை கண்காணிப்புக்கு உட்படுத்தியதில் இந்த புதிய சிகிச்சையால் வேறு பாதிப்புகள் தோன்றாமல் இருப்பதும் தெரிகிறது. 


டைப் ஒன்று நீரிழிவிற்கு உயிர் காக்கும் ஒரே மருந்தான "இன்சுலின்" கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும் சூழ்நிலையில் 


நோயாளியிடம் இருந்தே எடுக்கப்பட்ட செல்களை -  தொழில்நுட்பம் மூலம் ஸ்டெம் செல்களாக மாற்றி அந்த ஸ்டெம் செல்களை - இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களாக மாற்றி 

நோயாளிக்கு ஊசி மூலம் எளிதாக செலுத்தி டைப் ஒன்று நீரிழிவில் இருந்து குணத்தை அளித்துள்ள 

டியாஜின் முதல் மத்திய மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள். 


இந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்னும் பலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு நீண்ட கால சாதக பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு 

இந்த சிகிச்சை விரைவில் உலகத்தார் அனைவருக்கும் கைகொள்ளத்தக்க விலையில் கிடைக்கும் சிகிச்சையாக மாறும் போது 


நம்மால் டைப் ஒன்று நீரிழிவு நோயர்கள் அனைவருக்கும் இன்சுலின் ஊசியிலிருந்து விடுதலை அளிக்க முடியும். 


அந்த நாள் விரைவில் வர இருக்கிறது. 


அதுவரை 

டைப் ஒன்று நீரிழிவிற்கு இன்சுலின் எனும் அருமருந்தே உயிர்காக்கும் ஒரே மருந்தாகத் தொடரும். 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


கீரை வகைகளும் அவற்றின் முக்கிய பயன்களும் (Types of greens and their main uses)...



கீரை வகைகளும் அவற்றின் முக்கிய பயன்களும்  (Types of greens and their main uses)...


 🌿❤️40 வகை கீரைகளும் அவற்றின் முக்கிய பயன்களும்❤️🌿:


🌿💚அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.


🌿💚காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


🌿💚சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


🌿💚பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.


🌿💚கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


🌿💚மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.


🌿💚குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.


🌿💚அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.


🌿💚புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.


🌿💚பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.


🌿💚பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.


🌿💚பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.


🌿💚சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.


🌿💚வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.


🌿💚முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.


🌿💚வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.


🌿💚முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.


🌿💚புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.


🌿💚புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.


🌿💚நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.


🌿🥜தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.


🌿💚முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.


💚🌿முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.


🌿💚பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.


🌿💚புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.


🌿💚மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.


🌿💚மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.


🌿💚முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.


🌿💚சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.


🌿💚வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


🌿💚தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.


🌿💚தவசிக்கீரை - இருமலை போக்கும்.


🌿💚சாணக்கீரை - காயம் ஆற்றும்.


🌿💚வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.


🌿💚விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.


🌿💚கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.


🌿💚துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.


🌿💚துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


🌿💚காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.


🌿💚மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...



பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...


பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.


உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.


தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை: -


1 பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது.


அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி 'என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.


2 ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.


3 ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.


4 ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.


5 ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.


காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு: -


உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள்,


வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல், உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல்,


தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல்,


கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய், மலத்துவாரத்தில் வேக்காடு,


ஆண் குறியில் வேக்காடு, உயிருக்கு ஆதாரமான இரத்தம் வெளிவருதல், இருண்டு போதல், கண், சிறுநீர், மலம் இவை பசுமை கலந்த மஞ்சள் நிறமாகுதல், பித்தம் தன்னுடைய இயற்கையான அளவிலிருந்து குறைந்து விட்டால் செயலற்றிருப்பது, குளிர்ச்சி, விட்டு விட்டு ஏற்படும் உடல் வலி, குத்தல், சுவையின்மை, அசீரணம்,


உடலில் சொரசொரப்பு, நடுக்கம், பளு, நகம், கண் இவை வெளுத்துப் போதல் போன்றவை உடலில் காணும். பித்தத்தின் சீற்றத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க - கசப்பான மூலிகை நெய் மருந்தை அருந்தச் செய்தல், பேதி மருந்துகளால் பித்தத்தை மலம் வழியாகக் கழியச் செய்தல், இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்,


வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்புவேர் போட்டு ஊறிய பானைத் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துதல், குளிர்ந்த நீரில் குளித்தல், நெற்றியில் தூய சந்தனத்தை இட்டுக் கொள்ளுதல், காதிற்கு இனிமையாகவும், மிருதுவாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதுமான இன்னிசை, அன்பான வார்த்தைகளை கேட்டல்,


பழைய அரிசி, கோதுமை, பச்சைப்பயறு, சர்க்கரை, தேன், புடலை, நெல்லிக்காய், திராட்சை போன்றவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. வயிறு நிறையச் சாப்பிடுதல், தயிர், மசாலாப் பொருட்கள், புலால் உணவு, எண்ணெய், எதிர்காற்று, மதுபானம், பகலுறக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


🍁🍁🍁 கொரோனா ஃபேக்ட்ஸ் (CORONA FACTS)... Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

 இதுவரை கடந்த பத்து மாதங்களாக கொரோனா தொற்றை உலகம் முழுவதும் ஆய்வு செய்ததில் கிடைத்த முக்கிய முடிவுகள் 

🏁கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்து தொற்று ஏற்பட்ட 

5 முதல் 6 நாட்களுக்குள் 

அறிகுறிகள் தோன்றும் (mean Incubation period - 5 to 6 days)

🏁அறிகுறிகள் தோன்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பிருந்தே பிறருக்கு பரவும் தன்மை கண்டறியப்பட்டுள்ளது ( High chance of Presymptomatic spread) 

🏁அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் தொற்றைப்பிறருக்கு பெரிய அளவில் பரப்புவதில்லை ( very low chance of asymptomatic spread) 

🏁சாதாரண முதல் மிதமான கொரோனா தொற்று 

1முதல் 10 நாட்கள் நீடிக்கிறது . இதில் நோய் எதிர்ப்பு சக்தி எளிதாக வைரஸை முறியடித்து விடுகின்றது.

🏁தீவிர  தொற்று நிலை 1 முதல் 13 

நாட்கள் வரை . 

🏁அதிதீவிர கவலைக்கிடமான நிலை ஏற்பட்டால் 

14 நாட்களுக்கு மேலும் 28 நாட்கள் வரை கூட நோயின் தன்மை இருக்கிறது. இதில் எதிர்ப்பு சக்தியானது மிக அதிக அளவில் தூண்டப்பட்டு அதன் விளைவாக முக்கியமான உறுப்புகள் பழுதாகின்றன. 

🏁கொரோனா தொற்று ஏற்பட்டு அதிகமான மருத்துவமனை அட்மிசன்கள் 

நோய் அறிகுறி ஆரம்பித்த ஏழாவது நாள் நடக்கிறது. 

🏁மூச்சு திணறல் / மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் எட்டாவது நாள் தோன்றுகிறது. 

🏁தீவிர மூச்சுத்திணறல் நிலை 9 ,10 வது நாளில் நடைபெறுகின்றது 

🏁தீவிர நோயில் சிக்கும் பெரும்பான்மை மக்கள் 11 வது நாள் ஐசியூவில் சேர்க்கப்படுகின்றனர். 

🏁நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி தரும் ஆண்ட்டிபாடிகள் 14நாட்களில் இருந்து ரத்தத்தில் தெரிய ஆரம்பிக்கின்றது 


⛔வயது மூப்பு (old age)

⛔ரத்த கொதிப்பு ( hypertension) 

⛔இதய ரத்த நாள நோய்( cardio vascular disease) 

⛔நீண்ட கால நுரையீரல் அழற்சி நோய்( COPD)

⛔நீரிழிவு ( Diabetes) 

⛔உடல் பருமன்( obesity) 

⛔புற்று நோய் ( cancer)

மேற்சொன்னவர்களுக்கு சாதாரண தொற்றில் இருந்து தீவிர தொற்றுக்கு மாறும் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது 


மேலும் கீழ்வரும் அறிகுறிகள் இருப்பின் 

ஒருவர் சாதாரண தொற்றில் இருந்து அடுத்த நிலைகளுக்குச் செல்ல வாய்ப்பு அதிகம்


அந்த அறிகுறிகள் பின்வருமாறு 


❇அட்மிசன் போது 39 டிகிரி செல்சியஸ்க்கு மேல் காய்ச்சல் 


❇அட்மிசன் போது மூச்சுத்திணறல்


❇அதிகமான qSOFA மதிப்பெண் பெறுபவர்கள் 

( qSOFA = quick Sequential Organ Failure Assessment ) 

குறைவான ரத்த அழுத்தம் 

சராசரிக்கும் வேகமாக மூச்சு விடுதல்  

நினைவு தப்புதல்/ சுயநினைவு இழத்தல் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன 


பின்வரும் ஆய்வக முடிவுகள் இருந்தால் அவருக்கு தீவிர நோய் 

ஏற்படலாம்.

🚩வெள்ளை அணுக்கள்/ நியூட்ரோஃபில்கள் அளவில் குறைவது

🚩லேக்டேட் மற்றும் லேக்டேட் டீஹைட்ரோஜினேஸ்(LDH)  அளவில் கூடுவது 

🚩சி- ரியாக்டிவ் ப்ரோட்டின்( CRP) அளவுகள் கூடுவது

🚩ஃபெரிட்டின்(Ferritin)  அளவுகள் கூடுவது

🚩இண்டர்ல்யூகின்-6( IL-6) அளவுகள் கூடுவது 

🚩டி-டைமர் அளவுகள் கூடுவது ஆகியவை 

நோய் அடுத்த கட்டத்துக்கு செல்லக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளாக இருக்கலாம். 

🏁 தொற்று கண்டவருடன் ஒரே அறையில் வாழும் உறங்கும் நபருக்கு தொற்று பரவும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது 

🏁 தொற்றை விரைவில் கண்டறிந்து பிரத்யேக  மருத்துவமனையில் அட்மிசன் பெறுபவர்கள் அதிகம் உயிர் பிழைக்கிறார்கள் 

 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

🍁🍁🍁 பற்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள்...

 


🍁🍁🍁 மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக்கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுவதைக் கேட்கும் போது உண்மையில் அது எத்தனை பிணி தரும் அனுபவமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

குடும்பத்தில் தாய் அவரது மகள்கள் முதல் பேத்திகள் வரை அனைவருக்கும் மைக்ரேன் இருக்கும் குடும்பங்களை பார்த்து வருகிறோம்.

வாழ்க்கைத்தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது.

பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.

நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் பரீட்சை எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் அத்தோடு படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் முழு மூச்சுடன் படிக்க இயலாது. மதிப்பெண்ணும் சரியும்.  

இல்லற வாழ்வில் உள்ள பெண்களுக்கு இந்த தலைவலி வரும் போது குடும்ப உறுப்பினர்கள் மீது சினத்தை கக்கும் போது தேவையற்ற பல மனக்கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் நேருகின்றன.

அலுவலகங்களில் மைக்ரேன் வலி ஏற்பட்டால் அன்றைய நாள் அத்தோடு முடிந்தது என்ற நிலை தான்.

எந்த செயலிலும் முழுமையாக ஈடுபாடு இல்லாமல் ஆக்கி விடும் இந்த ஒற்றைத்தலைவலிக்கு தற்போது அறியப்பட்டுள்ள காரணங்கள் 

- மூளைக்கு க்ளூகோஸை எரிபொருளாக உபயோகிப்பதில் ஏற்படும் குளறுபடி / கோளாறு (  reduced glucose metabolism   by brain) 

- மூளை தேவைக்கும் அதிகமாக உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இருப்பது ( hyper excitability ) 

- உள்காயங்களால் ஏற்படும் மூளைத்தேய்மானம்  ( inflammation) 

- மூளை நரம்பு செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா எனும் எனர்ஜி ஃபேக்டரி முறையாக செயலாற்றாமை 

(Mitochondrial dysfunction) 

 மேலும் மைக்ரேன்  நோயாளிகளுக்கு 

மூளையில் க்ளூடமேட் எனும் உயிர் வேதியியல் ரசாயனம் அதிகமாக சுரக்கின்றது என்றும் 

காபா (GABA -  gamma amino butyric  acid) எனும் ரசாயனம் அளவில் குறைவாக சுரப்பதாகவும் அறியப்பட்டுள்ளது 

க்ளூடமேட் எனும் ரசாயனம் என்பது எப்போதும் நம்மை ரோலர் கோஸ்டர் ரைடில் இருப்பது போலவும் ஒரு த்ரில்லர் பேய் படம் பார்ப்பது போன்ற உணர்விலுமே வைத்திருக்கும் 

இதுவே காபா ரசாயனம், அமைதியான மலைப்பகுதியில் ஆற அமர மெதுவாக நடந்து சென்று குளிர்ந்த காற்றை மெல்லிய சாரல்களுடன் அனுபவிப்பது போன்ற அமைதியான உணர்வைத் தரக்கூடியது 

இத்தகைய பிரச்சனைகளை கண்டறிந்த பின் இதற்கு தீர்வு என்ன? 

இப்படி காரணம் ஏதுமின்றி வரும் மைக்ரேன் தலைவலியை கட்டுப்படுத்திட முடியுமா? 

என்று ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.  நிகழ்ந்து வருகின்றன 

மைக்ரேனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை பெண்களாகவும் அதிலும் பெரும்பான்மை உடல் பருமன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 

எனவே உடல் எடையை குறைப்பது என்பது மைக்ரேன் தலைவலியின் வீரியத்தை குறைப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் உண்டு. 

கலோரி குறைவாக உண்பது 

அல்லது 

கலோரி குறைவாக உண்பதுடன் சேர்த்து 

உடல் பயிற்சி செய்வது.

இவற்றால் உடல் எடையை குறைக்க முடியும். 

ஆனால் தற்போதைய ஆய்வுகள் 

"கீடோன்கள்" மூலம் மைக்ரேனைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது நோக்கி நகர்ந்து வருகின்றன.

நம் உடலில் கீடோன்களை உற்பத்தி செய்து 

கீடோன்கள் உதவியுடன் மூளையை இயக்கும் போது மூளை எந்த சச்சரவுமின்றி செயல்படுகின்றது என்று ஆய்வுகள் சான்று பகர்கின்றன. 

கிட்டத்தட்ட இதே பிரச்சனையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வரும் மருந்துகளால் தீராத வலிப்பு நோய்க்கு  (Refractile seizures) கீடோன்கள் உதவி புரிந்து வருகின்றன 

நம் மூளையானது இரண்டு வகையான எரிபொருள்கள் மூலம் இயங்கும் 

ஒன்று க்ளூகோஸ் ( நாம் அனைவரும் அறிந்த எரிபொருள்) 

இரண்டாவது எரிபொருள் - கீடோன்கள் 

( பலரும் பெரிதாய் அறிந்திராத எரிபொருள்) 

இதில் கீடோன்கள் மூளைக்கு மிகச்சிறந்த எரிபொருளாக இருக்கும் தகுதி வாய்ந்தவை 

காரணம் 

1. கீடோன்கள் உற்பத்தியின் போது க்ளூகோஸ் உற்பத்தியில் வெளியிடப்படுவதைப்போன்ற தேவையற்ற ஊறுசெய்யும் கழிவுகள் வெளியிடப்படுவதில்லை ( Ketones are clean fuel) 

2. கீடோன்களை நம்பி மூளை இருக்கும் போது , க்ளூகோசை நம்பி இருக்கும் போது ஏற்பட்ட கொள்முதல் உபயோகப்படுத்தும் கோளாறுகள் நேர்வதில்லை. 

(Ketones are energy efficient) 

3. கீடோன்கள் மூளை செல்களின் தேவையற்ற உணர்ச்சி ஊக்கநிலையை மட்டுப்படுத்துகின்றன ( ketones control hyperexcitability) 

4. கீடோன்களை பிரதான எரிபொருளாக தேர்ந்தெடுக்கும் போது க்ளூடமேட் அளவுகள் குறைந்த GABA அளவுகள் கூடுகின்றன. இதனால் அமைதியான நிலை ஏற்படுகின்றது. 

5. கீடோன்களை எரிபொருளாக மாற்றியமைத்த பின்... ரத்தத்தில் ஏறும்/இறங்கும் க்ளூகோஸ் அளவுகள் பொறுத்து மூளையின் செயல்பாடுகள் மாறுவதில்லை. 

மேற்சொன்ன பல விசயங்கள் மூலம் கீடோன்கள் மைக்ரேன் தலைவலி வராமலும் , வலிப்பு  நோயை கட்டுப்படுத்தக்கூடும்.  

இத்தகைய கீடோன்களை எவ்வாறு உற்பத்தி செய்வது ? 

கீடோன்களை உணவில் இருந்து உற்பத்தி செய்ய மாவுச்சத்தை தினசரி 40 கிராமுக்கு மிகாமல் எடுக்க வேண்டும். 

தேவையான அளவு புரத சத்தும்  கொழுப்புச்சத்தும் எடுக்கும் போது 

நமது உடல் கீடோன்களை உற்பத்தி செய்து 

நமது மூளை பெரும்பான்மை கீடோன்கள் மூலம் செயல்படும். இதை உணவு மூலம் அடையும் கீடோசிஸ் நிலை என்கிறோம் (Nutritional Ketosis) 

இத்தகைய கீடோஸிஸ் நிலையில் பலருக்கும்  மைக்ரேன் தலைவலி முன்பு இருந்ததை விடவும் வீரியத்தில் குறைதல், இரண்டு தலைவலிகளுக்கு இடையேயான கால அளவு நீட்டித்தல் , அடிக்கடி வரும் தலைவலி அரிதாகிப்போவது போன்ற பல நன்மைகளை அடைந்து வந்துள்ளதாக பல ஆய்வு முடிவுகள் உள்ளன 

மைக்ரேன் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை குறித்து காண்போம் 

முதலில் செய்யக்கூடாதவை . இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியை தூண்டு வலிமை பெற்றவை 

❌ அதிக மன அழுத்தம்/ அதீத உடல் சோர்வு 

❌ உணவுகளை அதன் முறையான இடைவெளியில் உண்ணாமல் காலம் தாழ்த்தி உண்பது அல்லது பட்டினி கிடப்பது மைக்ரேனை கிளப்பி விடும் 

❌ தூக்கமின்மை அல்லது பொழுதன்னைக்கும் தூங்குவது. இரண்டுமே தவறு. 

❌ பெண்களுக்கு மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் மைக்ரேனை தூண்டுபவை

❌ மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது அல்லது உயரமான இடங்களில் இருந்து கீழே வருவது..அதிக காற்று அடிப்பது 

❌ அதீத உடற்பயிற்சி 

❌ காபி அதிகம் அருந்துதல் 

❌ இனிப்பு சுவை கொண்ட பொருள்களை உண்பது ( சீனி / நாட்டு சர்க்கரை/ தேன் முதற்கொண்டு இனிப்பு என்று நாக்கில் பட்டால் தலைவலி தூண்டப்படலாம்) 

❌ பீட்ரூட், முள்ளங்கி, ஸ்பினாச் கீரை , செலரி போன்ற நைட்ரேட் அடங்கி உணவுகள் 

சிலருக்கு சிவப்பு மாமிசமும் கடல் உணவுகளும்  தலைவலியை கிளப்பலாம்.  

❌ அனைத்து வகை குளிர்பானங்கள் / பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் 

❌ உணவாக உட்கொண்டால் உடலில் க்ளூகோசை ஏற்றும் மாவுச்சத்து மிகுதி உணவுகள் (High glycemic foods) 

❌ மது 

❌ வாசனை திரவியங்கள்/ சிகரெட் புகையின் வாசனை 

❌ மிக அதிக ஒலி 

மேற்சொன்னவை அனைத்தும் மைக்ரேனை தூண்டக்கூடியவை 

மைக்ரேன் உங்களுக்கு இருக்கிறதா? 

மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள் கூடவே உணவு முறையை "குறை மாவு" (Low carbohydrate) உணவு முறையாக மாற்றுங்கள் 

இனிப்பின் மீது நா கொண்ட ஆசையை விட்டொழியுங்கள் 

மிதமான நடைபயிற்சி செய்யுங்கள் 

மன அமைதி தரும் விசயங்களை செய்யுங்கள் 

மன அழுத்தத்தை குறையுங்கள் 

இயலாவிட்டால் மனநல மருத்துவரை சந்தித்து கவுன்சிலிங் சிகிச்சை பெறுங்கள் 

குறை மாவு உணவு முறை 

மிதமான உடல் பயிற்சி

+

மருத்துவ சிகிச்சை 

மன அமைதியான வாழ்க்கை 

மேற்சொன்ன நான்கும் மைக்ரேனில் இருந்து நல்ல விடுதலையை தரவல்லவை 

ஆதாரங்கள் மற்றும் இதற்காக படித்த 

ஆய்வுக்கட்டுரைகள் 

1.Di Lorenzo C, Pinto A, Ienca R, Coppola G, Sirianni G, Di Lorenzo G, et al. A Randomized Double-Blind, Cross-Over Trial of very Low-Calorie Diet in Overweight Migraine Patients: A Possible Role for Ketones? Nutrients. 2019;11(8).

2.Barbanti P, Fofi L, Aurilia C, Egeo G, Caprio M. Ketogenic diet in migraine: rationale, findings and perspectives. Neurol Sci. 2017;38(Suppl 1):111-5.

3.https://pubmed.ncbi.nlm.nih.gov/30974836/

 4.https://pubmed.ncbi.nlm.nih.gov/31586135/

5.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6520671/

6.https://www.acpjournals.org/doi/10.7326/0003-4819-2-4-341

7.https://jamanetwork.com/journals/jama/article-abstract/245128

8.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6722531/

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

🍁🍁🍁 காய்ச்சலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை... Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான  அளவு நீரை எடுக்க வேண்டும். 

தேவையான அளவு நீர் என்றால் எவ்வளவு? 

ஒரு நோயாளி தனது சிறுநீரின் தன்மையை கவனித்து வர வேண்டும் 

- ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழித்தாக வேண்டும் 

- சிறுநீரின் அளவை தோராயமாகவாவது அளக்க வேண்டும். குழந்தைகளாக இருப்பின் சிறுநீரை பேனில் பிடித்து அளக்கலாம்.

சராசரி  சிறுநீர் வெளியேறும் அளவு என்பது 1-2 மில்லி லிட்டர் / கிலோ கிராம் உடல் எடை / மணிநேரம் . 

அதாவது , 

20 கிலோ எடை இருக்கும் ஒரு குழந்தை 

சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 40 மில்லி சிறுநீர் கழிக்க வேண்டும். 

ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை 120 முதல் 240 மில்லி கழித்தாலும் சரியே. 

24மணிநேரம் கணக்கிடுகையில் 480 முதல் 960 மில்லி கழித்திருக்க  வேண்டும்

எது அபாயகட்டம் ??? 

0.5 மில்லி சிறுநீர் / கிலோகிராம் உடல் எடை/ மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாக சிறுநீர் கழித்தால் ஆபத்தான கட்டம் என்று பொருள். 

உதாரணம் - 

ஒரு 20 கிலோ எடை உள்ள குழந்தை , ஆறு மணிநேரமாக சிறுநீரே கழிக்காமல் இருந்தாலோ , வெறும் 60 மில்லி அல்லது அதற்கும் குறைவாக கழித்தால் ஆபத்து என அறிக. 

அடுத்து சிறுநீரின் நிறம் - இளமஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அடற் மஞ்சள் நிறத்தில் சென்றாலோ  சிவப்பு நிறத்தில் சென்றாலோ ஆபத்தென அறிக. 

ஒருவருக்கு காய்ச்சல் அடித்தால் அவரை பட்டினியாய் போடுவது தவறு. 

அவரது உடலுக்கு தேவையான சக்தியை நீர் மற்றும் நீராகாரங்கள் வழி வழங்க வேண்டும். 

ஓ.ஆர் எஸ் எனும் உயிர் காக்கும் அமுதத்தை வர லிட்டர் நன்னீரில் கலந்து அதை குடிக்க கொடுக்க வேண்டும். 

இளநீர்,  மோர் போன்றவற்றை கொடுக்கலாம்

சாதமாக இல்லாமல் கஞ்சியாக வடித்து மூன்று வேளையும் கொடுக்கலாம்

கொரோனா தொற்று கண்ட பேலியோ கடைபிடிக்கும் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் உங்களது உடல் நிலை ஒத்துழைத்தால் தாராளமாக பேலியோ உணவு முறையை தொடரலாம் 

அல்லது

மேற்சொன்ன உணவு முறையை காய்ச்சல் இருக்குமட்டும் தொடர்ந்து விட்டு பிறகு பேலியோவுக்கு மாறலாம் 

வாய்வழியாக உணவு எடுக்க இயலா நிலைவரின், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து நாளம் வழியே திரவங்கள் ஏற்றப்படும்

மேலும் வாந்தி இருப்பின் 

அதை உடனடியாக மருத்துவரிடம் சென்று காட்டி வாந்தியை சரி செய்து கொள்ள வேண்டும். வாந்தி தொடர்ந்து இருந்தால் மாத்திரைகள் எதையும் விழுங்கினாலும் ப்ரயோஜனமில்லை.  

குறிப்பு - நீர்ச்சத்து நம்மை காக்கும் . அதை சரியாகப் பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு. 

Dr.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

🍁🍁🍁 கொரோனா அப்டேட் - இந்தியாவில் தடுப்பூசிகளின் நிலையில் தற்போதைய முன்னேற்றம் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

கொரோனா தொற்றின் முதல் அலை சற்று மட்டப்படுத்தப்பட்டு நாடு இரண்டாம் அலைக்கு தயாராகி வரும் நிலையில் 

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி எப்ப கிடைக்கும்? 

என்ற கேள்விகள் அதிகமாயிருக்கின்றன. . 

அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஐந்து தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இருக்கின்றன அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம் 

1.கோவிஷீல்டு  (COVISHIELD) 

ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனிகா ஆகிய இரண்டு பெருந்தலைகளின் கூட்டுத்தயாரிப்பான AZD1222 எனும் இந்த தடுப்பூசியானது 

தற்போது இந்தியாவில் மூன்றாம் நிலை பரிசோதனையில் இருக்கிறது. 

இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவில் சிறப்பான அளவில் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் பாதுகாப்பனதாக இருப்பதாகவும் இருப்பதாக முடிவுகள் வந்தன. 

இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் போது

பிரிட்டனில் ஒருவருக்கு விரும்பத்தகாத ஒவ்வாமை ஏற்பட்டு சில காலம் இந்த ஆராய்ச்சி தடை பட்டிருந்தது. பிறகு அந்த தடுப்பூசி உற்பத்தியில் பங்குபெறாத நடுநிலையான வல்லுனர்கள் குழுவின் ஆய்வுக்குப் பிறகு அந்த விரும்பத்தகாத ஒவ்வாமைக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்றும் அந்த நபருக்கு multiple sclerosis எனும் நோய் கண்டறியப்படாமல் இருந்ததே அந்த நிகழ்வுக்கு காரணம் என்று சான்றளிக்க   பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ப்ரேசில் , இந்தியா ஆகிய நாடுகளில் மீண்டும் ஆராய்ச்சிகள் தொடங்கி இருக்கின்றன 

இந்தியாவில் 1600 பேர் இந்த தடுப்பூசியின் ஆராய்ச்சியில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்து பங்கேற்று வருகின்றனர் 

தமிழ்நாட்டில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. 

விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கும் இந்த தடுப்பூசிக்கான இந்திய பார்ட்னராக இணைந்திருப்பது serum institute,pune நிறுவனமாகும் 

ஒரு தடுப்பூசியின் விலையை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கொண்டு வந்து அனைவரும் பயன் பெறும் வகையில் அதிக லாபமின்றி விற்க உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது 


2. கோவேக்சின் (COVAXIN) 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் மற்றும் பாரத் பயோடெக் எனும் தனியார் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி இது. 

முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு. 

ஆகஸ்ட் 15,2020 புழக்கத்துக்கு வரும் என்று தவறாக நம்பப்பட்டு வந்த தடுப்பூசி இது தான். 

 இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை தற்போது நடந்து வருகிறது. 

இதற்காக 1,125 பேர் பதிவு செய்துள்ளனர். 

தமிழ்நாட்டில் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நிகழ்ந்து வருகின்றது. 

இரண்டாம் கட்ட பரிசோதனைகள் திருப்திகரமாக நிறைவேறினால் மூன்றாம் கட்ட பரிசோதனை ஆரம்பமாகும்.  

இந்த தடுப்பூசி இந்திய தயாரிப்பாதலால் நமக்கு இன்னும் விலை மலிவாகக் கிடைக்கக்கூடும்.   


3. ZyCov-D

கொரோனா வைரஸின் ப்ளாஸ்மிட் டிஎன்ஏ கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 

சைடஸ் கேடில்லா நிறுவன நவீன தடுப்பூசியாகும். 

1048 பேர் பதிவு செய்துள்ள இந்த மருந்துக்கான இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகள் 

மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகிறது. 


4. RBD vaccine 

பயாலஜிகேல் நிறுவனமும்  பேய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி , கொரோனா வைரஸை ஒத்த புரத மாதிரியாக இருந்து எதிர்ப்பு திறனை உருவாக்கும் செயல்திறன் கொண்டது. 

இருப்பினும் இந்த நிறுவனம் தற்போது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ  பரிசோதனையை ஆரம்பிக்க வல்லுனர் குழுவிடம் அனுமதி கோரியிருக்கிறது.  வல்லுனர் குழு இந்த பரிசோதனை திட்ட முன்வரைவில் சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தியிருக்கிறது 


5. ஸ்புட்னிக் ஐந்து (SPUTNIK - V) 

ரஷ்ய நாட்டின் கமாலியா மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மருந்திற்கு 

இரண்டாம் கட்ட ஆராய்ச்சி மட்டுமே முடிந்திருந்த நிலையில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் எழாத காரணத்தால் அந்த நாட்டு அரசு முன்கூட்டிய ஒப்புதல் வழங்கிவிட்டது. 

இதனால் அங்கு பொதுமக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் இந்திய அரசு மூன்றாம் கட்ட பரிசோதனை இன்றி மக்களிடம் இந்த தடுப்பூசியை வழங்க இயலாது என்று அறிவித்துள்ளது. 

மருந்து கம்பெனி வழங்கிய மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான முன்திட்ட வடிவமைப்பை உற்று நோக்கிய வல்லுனர் குழு  - தனது பரிந்துரையில் 

மருந்து கம்பெனி தனது முன்திட்ட வரைவில் மாற்றம் கொண்டு வந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையும் செய்யுமாறு வரைவு தயாரிக்குமாறு கூறியுள்ளது 

இதிலிருந்து ரஷ்ய கண்டுபிடிப்பை இந்திய வல்லுனர் குழு எடுத்த எடுப்பில் நம்ப வில்லை என்பது தெரிகிறது.  

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆராய்ச்சிகளை முறையாக முடித்தபின் ஸ்புட்னிக்கின் உண்மை நிலை புலப்படும். 

------------ 

பல கோடி மக்களுக்கு செல்ல இருக்கும் இந்த தடுப்பூசிகள் பல்வேறு பாதுகாப்பு பரிசோதனைகளையும் படிநிலைகளையும் தாண்டிதான் பாதுகாப்பானவை என்றும் 

வீரியமிக்கவை என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் மட்டுமே நம்மை அடையும் 

Safety and efficacy of vaccine must be proved beyond doubt

இப்படியான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு கட்டாயம் காலமெடுக்கும்

இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டின் மத்தி வரை ஒவ்வொரு தடுப்பூசியாக புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன் 

நவீன மருத்துவ அறிவியலின் துணை கொண்டு இந்த போரில் நாம் வெல்லும் நாள் நெருங்கி வருகின்றது 

தொடர்ந்திருப்போம் 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

🍁🍁🍁 மனத்தாழ்வு நிலையில் சிக்காமல் வாழ்வதற்கான சில பயிற்சிகள்... Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

1. ஒரே மாதிரி வாழ்கை முறையை மாற்ற வேண்டும்( try to avoid  monotonous life style)  அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க வேண்டும். 

இருவாரத்திற்கு ஒருமுறையேனும் ஏதேனும் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம் . 

 இரண்டு மாதம் ஒருமுறையேனும் சிறு சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லலாம்.

புதிதாக ஒரு இசை ஆல்பத்தைக் கேட்கலாம் அதை ரசிக்கலாம் 

ஒரு புத்தகத்தில் மனதை சிறிது தொலைக்கலாம் 

சிலருக்கு திரைப்படம் காண்பதில் சிறிது ரிலாக்சேசன் கிடைக்கும். 

ஒய்வு என்பது வெறுமனே படுத்து தூங்குவது அன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் இருந்து மாற்றமாக வேறொன்றைச்செய்வதே ஓய்வு. 

2.  சிறுசிறு விஷயங்களையும் ரசிக்கப் பழக வேண்டும்( try to appreciate small things , which are so big for our mind ) 

புதிதாக வெளியிடப்பட்ட இசைக்கோர்வை, 

வீட்டு பூந்தொட்டியில் அன்று மலர்ந்த ரோஜாப்பூ, 

சிறிது நேரமே தோன்றும் வானவில், 

அம்மா / மனைவி செய்த புதிய வகை சிற்றுண்டி

குழந்தையின் புன்னகை இவ்வாறு ரசிக்க எவ்வளவோ இருக்கின்றன. 

அதை விடுத்து எப்போதும் நம்மிடம்  ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் தேவையற்றது. 

3. " தான்" என்ற அகந்தை( ego is the gateway for depression )  எண்ணம்.

எல்லாம் தன்னால் தான் நடந்தது. 

நான் இல்லையேல் எதுவும் இல்லை என்ற எண்ணம் கொண்டோரே பின்னாளில் மனத்தாழ்வு நிலைக்கு செல்கின்றனர். 

வீட்டில் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து கூட்டு முயற்ச்சியால் வளர்ச்சி காண்கிறோம் என்று நினைப்பதே மனதுக்கு நல்லது.

அதிகாரத்தை எப்போதும் அடுத்தவனை பலகீனப்படுத்த அடிமையாக்க பயன்படுத்தக்கூடாது. 

4. தோல்விகள் நல்லது என்று நம்ப வேண்டும் 

வெற்றி பெற்ற யாரும் எடுத்த எடுப்பிலேயே அந்த நிலைக்கு வரவில்லை. பல தோல்விகளுக்குப் பின்பே இந்த நிலையை அடைந்திருப்பார் என்ற அறிவு வேண்டும். காதல் தோல்வி/ தொழில் தோல்வி/ திருமண தோல்வி இப்படி எதில் தோற்றாலும் அதற்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்ப வேண்டும்( defeats are not permanent , victories too) .நாம் பெறும் வெற்றிக்குப்பிறகும் தோல்விகள் உண்டு என்பதையும் நம்ப வேண்டும். 

வெற்றியால் வரும் பெருமை கர்வத்தை தலைக்கு பாரமாக ஏற்றக்கூடாது.  தோல்வியில் பெறும் பொறுமையையும் ஞானத்தையும் தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டும். 

5. மது / புகை ( getting away from addictive habits) இவையிரண்டிலும் இருந்து எப்போதும் விலகியிருப்பது நல்லது. மனத்தாழ்வு நிலையில் இந்த போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிவிட வாய்ப்புள்ளது. Occasional party drinker களாக இருக்கும் பலரும் மனத்தாழ்வு நிலையில் தினமும் மது அருந்து பழக்கத்திற்கு அடிமை ஆகி விடுவர். 

6. ஆன்மீக நாட்டம்( spirituality) இறை வழிபாடு முதலியவை மனதை சாந்தப்படுத்தலாம்.  இருப்பினும் அதுவும் நமது வீட்டுக்குள் வழிபாட்டுத்தலங்களுக்குள் இருக்க வேண்டும். நமது சுதந்திரம் பிறரது சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.  நமது சமயமே சிறந்தது. மற்றவை தாழ்ந்தவை என்ற எண்ணம் ஆபத்தானது.  மனிதனை சாதி சமய பணக்கார ஏழை வர்க்க  ஏற்றத்தாழ்வுகளின்றி மதிக்க வேண்டும். இது மன அமைதிக்கு மிகவும் முக்கியம்.

7. சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழுவது நல்லது. ( இரவு 10 முதல் காலை 6 வரை) ( sleep hygiene). 

இந்த தூக்க ஒழுக்கத்தை பேணாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது கஷ்டம்தான். 

8. எதையும் ஆக்கப்பூர்வமாக( positive thoughts)  அணுகுவது மனதுக்கு நல்லது. எதிர்மறை எண்ணங்கள்( negative feeling)  இருக்கலாம். ஆனால் அதுவே எப்போதும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

9.மனத்தாழ்வு நிலை என்பது மனநோயாகவே இருப்பினும் உடலில் மூளையின் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது ( செரடோனின் எனும் ரசாயன நொதியின் அளவு மூளையில் குறைவதால் வருகிறது )

10.மனத்தாழ்வு நிலைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்

அதை சரிசெய்ய திறன்மிக்க மருந்துகள் நம்மிடம் உள்ளன. 

ஆகவே நாட்களை வீண்டிக்காமல் உடனே தங்களுக்குத் தெரிந்த மனத்தாழ்வினால் அவதியுறும் நண்பர்கள் உறவினர்களை உடனடியாக மன நல மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள உந்துங்கள்.

உடலைக் காப்பது போல மனதையும் காத்துக் கொள்வது நல்லது.

Dr.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரகச் செய்தி

பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி (வாட்ஸ் அப் தகவல்) இன்று மற்றும் நாளை (03 & 04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி...