ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது
District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teacher
ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கைது
* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
* அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் வயது (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.
* இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
* இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக பணி அமா்த்த 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜான் சிபு மானிக்கை இரண்டு மாதங்கள் அலைக்கழித்த தொடக்க கல்வி அலுவலா் சந்தோஷ், ரூ. 5 லட்சம் லஞ்சம் தந்தால் 2018 முதல் உள்ள பணிகாலத்தை போட்டு உத்தரவு தருவதாகவும், இல்லையென்றால் குறைத்து வழங்கினால் பல லட்சங்கள் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளாா்.
* இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்ட நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி திரும்பவும் ஆசிரியா் ஜான் சிபு மானிக்கை அழைத்த தொடக்கக் கல்வி அலுவலா் சந்தோஷ், முன்பணமாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளாா்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார்.
* இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதனப் பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.