லஞ்சம் வாங்கிய புகாரில் ஆரணி வட்டாட்சியர் கைது...
ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு கைது செய்யப்பட்டனர்.
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மஞ்சுளா லஞ்சம் கேட்டதாக சீனிவாசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் அமிர்தி பகுதியில் கேன்டீன் எடுத்து நடத்தி வருகிறார். ஊராட்சி பகுதிகளில் அரசு கட்டிட பணிகள் சம்பந்தமாக ஒப்பந்த டெண்டர் எடுத்து பணி செய்யும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஒப்பந்த டெண்டர் ரூ.20 லட்சத்தில் எடுத்துள்ளார்.
இதற்கு அரசு சொத்து மதிப்பு சான்று கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த சான்று வழங்குவதற்காக துணை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம், வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம், விஏஓவுக்கு ரூ.5 ஆயிரத்தை சீனிவாசன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த லஞ்சத்தை பெற்றுக் கொண்டவர்கள் சான்றுக்கு பரிந்துரை செய்து, தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து சீனிவாசன் நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார். அப்போது தாசில்தார் மஞ்சுளா ரூ.1 லட்சம் மதிப்புக்கு ஆயிரம் வீதம், ரூ.20 லட்சத்திற்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சீனிவாசன் பேசிப் பார்த்த நிலையில் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தாசில்தார் லஞ்சம் கேட்டது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் சீனிவாசன் புகார் அளித்தார். புகாரையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து, 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
சீனிவாசன் நேற்று இரவு தாசில்தார் மஞ்சுளாவை அணுகி பணம் கொடுத்தார். அவர் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் பணியில் இருந்த இரவுக் காவலர் பாபுவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, இரவு காவலர் பாபு ரூ.10 ஆயிரம் பணத்தை வாங்கி தாசில்தார் மஞ்சுளாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரையும் காவலாளி பாபுவையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
இதையடுத்து பணம் வாங்கிய துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இரவு முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், தாசில்தார் மஞ்சுளா, காவலர் பாபு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மஞ்சுளா, ஆரணி வட்டாட்சியராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.