கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை வீட்டிலேயே கண்டறிந்துக் கொள்ளும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாதனம் ஒன்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியிருக்கிறது. மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொலுஷன்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றினை வீட்டிலேயே அறிந்துகொள்ளும் ஆண்டிஜன் சோதனை சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாதனத்தை யார் பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்றும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் ICMR தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. CoviSelfTM என பெயரிடப்பட்டுள்ள இதன் மூலம், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று ICMR அறிவுறுத்தியிருக்கிறது. இந்த சோதனையில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்தால் அவருக்கு RT - PCR சோதனை தேவையில்லை எனவும் ஆனால் முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் உடனடியாக RT - PCR சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தின் மூலம் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்வது எப்படி என்பது பற்றி செயலியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்துவோர் செயலி ஒன்றினை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ICMR அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை இந்த செயலி மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.