கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விளையாட்டு பிரிவு சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு தள்ளிவைப்பு

பொறியியல் சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவுக்கான மொத்த இடங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, நாளை (5ம் தேதி) நடக்க வேண்டிய விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, 9, 10ம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. நாளை, விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடக்கும் என, ஏற்கனவே அண்ணா பல்கலை அறிவித்திருந்து. இதற்காக, விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, 2ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை, அண்ணா பல்கலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பொறியியல் சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டு இடங்களை, 100ல் இருந்து, 500ஆக அதிகரித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதன் காரணமாக, கலந்தாய்வு தேதியை, 9, 10ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: விளையாட்டுப் பிரிவுக்கான இடங்களை தமிழக அரசு உயர்த்தி அறிவித்ததும், கூடுதலாக இன்றே (நேற்றே) பல மாணவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தோம். இன்றே இரு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 500 இடங்களை நிரப்ப, 1,900 மாணவர்களை அழைக்கிறோம்.
மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டியிருப்பதால், 5ம் தேதிக்குப் பதிலாக, 9, 10ம் தேதிகளில், விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கவுன்சிலிங் நடக்கும். விளையாட்டுப் பிரிவுக்கான, "ரேங்க்&' பட்டியல், 6ம் தேதி வெளியிடப்படும்.
பொறியியல் கலந்தாய்வில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு சேர்க்கையில், சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு, திட்டமிட்டபடி 5ம் தேதி நடக்கும் என்று ரைமண்ட் உத்திரியராஜ் கூறினார்.

>>>இந்திய முறை மருத்துவ படிப்பு: 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய முறை மருத்துவத்தில், பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்கள் விற்பனை நாளை (5ம் தேதி) துவங்குகிறது.
நடப்பு கல்வியாண்டில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, ஓமியோபதி ஆகிய, இந்திய முறை மருத்துவப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, அடுத்த மாதம் 27ம் தேதி துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நாளை துவங்குகிறது.
சென்னை, அரும்பாக்கம் மற்றும் பாளையங் கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், மதுரை, திருமங்கலம் மற்றும் திருச்சி அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோவில், கோட்டாறு, அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில், விண்ணப்பங்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் 600 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இக்கட்டணத்தை, "The Director, Indian medicine and Homeopathy, Chennai&' என்ற முகவரிக்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில், வரைவோலையாக (டி.டி.,) செலுத்த வேண்டும். இத்துடன், விண்ணப்பத்தைப் பெற, விண்ணப்பக் கடிதம் கொடுக்க வேண்டும். www.tnhealth.org என்ற இணையதளத்திலும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

>>>அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தில் ஆதிதிராவிடர் பாதுகாப்பு சட்டம்

மாநில அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு தொடர்பான, சட்டங்கள் குறித்த பாடங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை பாதுகாக்கும் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு நடத்துவதற்காக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான மத்திய குழு தமிழகத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களாக, பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்ற இக்குழுவினர், நேற்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செயலர் ஜீவரத்தினம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து கலந்தாய்வு நடத்தினர்.
கலந்தாய்வு கூட்ட முடிவில், மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 1955ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் 1989ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடந்த 2008ம் ஆண்டுகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ், 17.17 சதவீதத்தினருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வன்கொடுமை தொடர்பாக வரும் புகார்கள் அனைத்தையும் பதிவுசெய்ய வேண்டும்; விசாரணை மற்றும் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியவை உரிய நேரத்தில் நடக்க வேண்டும்; வழக்கில் ஆஜராகும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் செயல்பாடு, வழக்கின் போக்கு ஆகியவற்றை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என, தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், வன்கொடுமை தடுப்பு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு சட்டங்களை அதிக அக்கறையுடன் அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்துவதில், அதிகளவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்; மாநில அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தில் இந்த சட்டங்கள் தொடர்பான பாடங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை மாநில அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

>>>பாடப் புத்தக சுமை போனாலும் நோட்டு புத்தக சுமை போகவில்லை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு, புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும்; ஒட்டுமொத்த கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையிலும், முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்தியது. ஜூன் மாதம் முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இத்திட்டம் அமலுக்கு வந்தது.
ஆனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமே பலன் பெற்று, எடை குறைந்த புத்தகப் பையை எடுத்துச் செல்கின்றனர். அதேசமயம், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகச் சுமை குறைந்தாலும், நோட்டுப்புத்தகச் சுமை குறையவில்லை.
பள்ளி நிர்வாகங்கள் தரும் நோட்டுப் புத்தகங்களில், 60 சதவீதம் மட்டுமே பயன்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நோட்டுப் புத்தகங்களை, மாணவர்கள் பயன்படுத்துவதில்லை.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம், சமீபத்தில் ராமநாதபுரத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்தியபோது, 30 கிலோ எடையுள்ள மாணவரின் பையில், 10 கிலோ எடையுள்ள நோட்டுப் புத்தகங்கள் இருந்தன. அன்றைய நாளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் தானா என, ஆய்வு செய்ததில், பாதி நோட்டுப் புத்தகங்கள் தேவையற்றது என தெரிய வந்தது.
அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியருடைய, பிள்ளையின் பையை, இணை இயக்குனர் சோதனையிட்ட போது, அன்றைய பாட வேளைகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் மட்டும் இருந்தன. அவற்றின் எடை, 3.5 கிலோ இருந்தது.
இதுகுறித்து விசாரித்ததில், அந்த ஆசிரியர், தினமும் காலையில், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் வைப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தேவையற்ற நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு மாணவர்களை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என, பள்ளி நிர்வாகத்திடம் இணை இயக்குனர் கண்டிப்புடன் கூறினார்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துச் செல்வது போல், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகங்கள் கூற வேண்டும். இதுகுறித்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.

>>>TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY - UG ADMISSION 2012-2013 RANK LIST PUBLISHED...

UG Admission 2012-13
RANK LIST
General Category
 Rank list for all the below special categories will be hosted shortly

COUNSELLING SCHEDULE

>>>கால்நடை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் www.tanuvas.ac.in என்ற பல்கலை இணையதளத்திலும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வள அறிவியல், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவ படிப்புக்கு, 226 இடங்கள் உள்ளன.
இந்தாண்டு முதல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருநெல்வேலியில் மருத்துவ அறிவியல் கல்லூரி துவக்கப்படுகிறது. இதனால், கால்நடை மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை, 260 ஆக உயர்ந்துள்ளது. மீன்வள அறிவியல் 40, உணவு தொழில்நுட்பம் 20, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் 20 என, மொத்தம் 340 இடங்கள் உள்ளன.
இதற்கு, 10,821 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 544 விண்ணப்பங்கள் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டு, 10,277 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை கடைசி வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கால்நடை பல்கலைக் கழக துணை வேந்தர் பிரபாகரன் தெரிவித்தார்.

>>>‘ஆப்சென்ட்’ ஆனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை: டி.ஆர்.பி.

“பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்காத பதிவுதாரர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்க முடியாது,” என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
கடந்த மாதம், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதிவுதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங், குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் நடந்தது. இதில், 500 பேர், ‘ஆப்சென்ட்’. இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம், கடந்த மாதம் கடைசி வாரத்தில் நடந்தது.
இதிலும் பல பதிவுதாரர்கள் கோட்டை விட்ட நிலையில், இரண்டு நாட்களாக, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.
டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு நேற்று ஏராளமானோர் வந்து, தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதேபோல், டி.இ.டி., தேர்வுக்கு தேர்வு செய்யப்படாத ஆசிரியர்களும் அதிகளவில் வந்தனர். மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, தேர்வு மைய எண்ணை சரிவர குறிப்பிடாததால், பல தேர்வர்களுக்கு, வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாகவும், பலர் டி.ஆர்.பி.,க்கு வந்தனர்.
இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியதாவது:விடுபட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடையாது. டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 71 பேர் மட்டும் விடுபட்டுள்ளனர். என்ன காரணத்தால், இவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டனர் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். டி.இ.டி., தேர்வு மையப் பிரச்னையில், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தேர்வர்கள், எந்த தேர்வு மைய எண்ணை குறிப்பிட்டார்களோ, அதன்படி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிமேல், தேர்வு மையத்தை மாற்றினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...