கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>செப்டம்பர் 18 [September 18]....

  • சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்
  • சிலி விடுதலை தினம்(1810)
  • இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)
  • நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)
  • ருவாண்டா, புருண்டி, ஜமைக்கா ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1962)

>>>எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உதவ புதிய முறை

பள்ளிப் படிப்பிற்கு பின்னர் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை கலந்தாய்வின் போதே கண்டறிந்து உதவித்தொகை வழங்க மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முடிவு செய்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் அரசின் சார்பில் தொழிற் கல்வி பயில உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பின்னரே அவர்கள் செலுத்திய உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கல்லூரிகளில் சேரும்போது கல்வி கட்டணத்தை செலுத்துவதில் ஏழை மாணவர்களுக்கு பெரும் சிரமம் இருந்து வந்தது. இதனைக் களையும் பொருட்டு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேர மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போதே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் கண்டறிய உள்ளனர். இந்த புதிய முறை தனியார் கல்லூரிகளில் மேலாண்மை ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இந்த திட்டம் எந்தளவு சென்றடைகிறது என்பதை கண்காணிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

>>>தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

"தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் செயல்படும் பள்ளிகளை, அரசு பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என, தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன. கல்வி அறிவை அதிகரிக்க, அறிவொளி இயக்கம், எழுத்தறிவு இயக்கம், கற்கும் பாரதம் போன்றவற்றுடன், மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் மூலம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில், சிறப்பு பள்ளிகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், 17 மாவட்டங்களில், 560 சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்களும், தொழிற்கல்வி ஆசிரியர், எழுத்தர், சமையலர் என, தலா ஒருவரும் உள்ளனர். தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் இப்பள்ளிக்கு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகம் மூலம், மத்திய அரசு நிதி வழங்குகிறது. கடந்த, 2003 - 04ல் துவக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, சிறந்த வரவேற்பு உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர்களே, ஆசிரியர் மற்றும் பணியாளர்களாக நியமிக்கப்படுவதால், விடுதல் இன்றி குழந்தை சேர்ப்பும், தொடர் கல்வியும் வழங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சிறப்பு பள்ளிகளை இயக்கும், "சுடர்' தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 12 பள்ளிகளை மலைப்பகுதியில் நடத்துகிறோம்; 400 குழந்தைகள் படிக்கின்றனர். இரண்டு அல்லது மூன்றாண்டு இங்கு படித்ததும், பக்கத்தில் உள்ள அரசு மற்றும் பிற பள்ளிகளில் அக் குழந்தைகளைச் சேர்க்க வலியுறுத்துகின்றனர். இத்திட்டத்தை நிறுத்தி விடாமல், அதேநேரம், இங்கு படிக்கும் குழந்தைகள், தொடர் கல்வி பெற, அதே பகுதியில் உயர்நிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். தற்போதுள்ள சிறப்பு பள்ளிகளை, அரசு துவக்கப் பள்ளிகளாக மாற்ற வேண்டும். இப்பகுதியில், மூன்று முதல், 10 கி.மீ.,க்கு அப்பால், பள்ளிகள் உள்ளதால், இவர்கள் தொடர் கல்வி பெற முடியவில்லை. இதுபோன்ற சிறப்பு பள்ளிகளைக் கணக்கிட்டு, இப்பள்ளிகளையே தரம் உயர்த்த வேண்டும் அல்லது அருகில் வேறு உயர்நிலைப்பள்ளிகளை அரசு துவங்கினால், இக்குழந்தைகள் விடுதல் இன்றி கல்வியைத் தொடர வசதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

>>>டி.இ.டி., தேர்வு தள்ளி போகுமா?

டி.இ.டி., மறுதேர்வு, அக்., 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என, தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூலை, 12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு, அக்., 3ல், மறுதேர்வு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. "அக்டோபரில் நடக்கும் தேர்வில், புதிய தேர்வர் பங்கேற்க முடியாது' என, டி.ஆர்.பி., ஏற்கனவே அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இம்மனுவிற்கு விரிவாக பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 17ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்தது. தேர்வு தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென புதிய தேர்வர்களை அனுமதித்தால், புதிதாக விண்ணப்பம் வழங்குவது, கூடுதலாக கேள்வித்தாள் அச்சடிப்பது என, பல்வேறு பணிகளை, டி.ஆர்.பி., செய்ய வேண்டியிருக்கும். இப்பிரச்னை குறித்து, தமிழக அரசுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த குழப்பங்களால், அக்., 3ல், திட்டமிட்டபடி டி.இ.டி., தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில், தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

>>>உடற்கல்வி ஆசிரியர் காலியிடம் உடனே நிரப்ப கோரிக்கை

"பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை அரசு காக்க வேண்டும்' என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 2,488 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கு, உடற்கல்வி இயக்குனர் நிலை-2வைச் சேர்ந்த 89 பேர் மட்டுமே. 15 ஆண்டுகளுக்கு முன், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை இருந்தது. தற்போது, பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை உள்ளது. 12 முதல் 16 வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம். இப்பருவத்தில் மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்கள் அவசியம் தேவை. இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்க பொதுச் செயலர் கூறுகையில், ""நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிச் சுற்றுக்கு கூட நம் நாடு தகுதி பெறாமல் போனதற்கு காரணம், பள்ளிகளில் முறையான விளையாட்டுப் பயிற்சிகள் இல்லை. அதற்கு காரணம், விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாதது தான்,'' என்றார்.

>>>சமூக வலை தளங்களை கண்காணிக்க தனி அமைப்பை துவக்குகிறது அரசு

சமூக வலை தளங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, அவற்றை கண்காணிக்கும் வகையிலான அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அசாமில், சமீபத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம், வட கிழக்கு மாநிலத்தவரை அச்சுறுத்தும் வகையிலான, தகவல்கள், படங்கள் வெளியிடப்பட்டன. இதனால், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வசித்த, வட கிழக்கு மாநிலத்தவர், பீதியடைந்து, தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். எதிர்காலத்தில், இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில், சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மத்திய உள்ளதுறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு, மூன்று அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவற்றில் வெளியாகும் தகவல்களை கண்காணித்து, அதில், தவறான நோக்கத்துடன் கூடிய தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதுகுறித்து முன் எச்சரிக்கை செய்யும் வகையிலான, தனி, கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும். நெருக்கடியான நேரங்களில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்வதில், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சட்டத்தில், தற்போது சில குறைகளை உள்ளன. இவற்றை போக்கும் வகையில், இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான, சட்டப்பூர்வமான ஒப்புதல், அரசிடம் இருந்து பெறப்படும். பீதியை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, வழிகாட்டும் குறிப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

>>>தமிழைக் காத்தளித்த "தமிழ்த்தாத்தா' உ.வே.சா., வீட்டைக் காப்பாற்ற முடியாத அவலம்

மறைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றிய, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் வீட்டைக் கூட, காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"தமிழ்த் தாத்தா' என, போற்றப்படுபவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, செல் அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த காலத்தில், அலைந்து திரிந்து, கடின உழைப்பால் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததை, தாள்களில் அச்சாக்கி, நூல்களாக பதிப்பித்த பெருமைக்குரியவர்.

சிலப்பதிகாரத்தை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தார். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும்.

"தியாகராச விலாசம்': சென்னை திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், அவர் வாழ்ந்த, "தியாகராச விலாசம்' இல்லம் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில், 1903ம் ஆண்டில், தமிழாசிரியர் பணி கிடைத்ததையடுத்து, 1904ல், இந்த வீட்டில், 20 ரூபாய் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளர், வீட்டை இவரிடமே விற்க விருப்பம் தெரிவித்ததால், வீட்டை அவர் வாங்கினார்.

அந்த இல்லத்துக்கு, கும்பகோணம் கலைக் கல்லூரி ஆசிரியராக இருந்த, அவரது குரு தியாகராச செட்டியாரின் பெயரைச் சூட்டினார். 1942ல், இரண்டாவது உலகப் போரின் போது, சென்னை மக்களோடு, அவரும் இடம்பெயர்ந்தார். அதன்பின், திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான வீட்டில், நிரந்தரமாகத் தங்கினார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். அவரது திருவல்லிக்கேணி வீடு, உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

வீட்டைப் பராமரித்தோர், விற்பனை செய்து விட்டதால், அதை இடித்து, புதிதாக கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக, வீட்டை இடிக்கும் பணி துவங்கி, தகவல் வெளிவந்ததால், இடிப்பு பணி நேற்று நிறுத்தப்பட்டது. உ.வே.சா., வாழ்ந்த இல்லத்தை, தமிழக அரசு மீட்டு, நினைவகமாக மாற்ற வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

தாகூர் வந்த இல்லம் 
அவ்வை நடராஜன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: கும்பகோணத்திற்கு அருகே உள்ள உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவு இல்லம் இருந்தாலும், நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய காலத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன்பேட்டையில், 20 ரூபாய் வாடகையில், குடும்பத்தோடு வசித்தார் என, பதிவுகள் கூறுகின்றன. அந்த இல்லத்திற்கு மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். மகாகவி பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் நினைவு இல்லம் இருந்தாலும், தலைநகர் சென்னையில், அவர் மூச்சுக்காற்று உலவிய இல்லத்தை நினைவு இல்லமாக பேணிக் காத்து வருகிறோம். அதுபோல், உ.வே.சா., கால்தடம் பதித்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக்கி, அங்கொரு அரங்கம் அமைத்து, தமிழ் ஆய்வு அரங்கங்கள் நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: தமிழாய்ந்த தலைமகன் வாழ்ந்த அந்த இடத்தை, அரசு முதலிலேயே கண்டுபிடித்து, மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். இப்போது பாதி இடிந்த நிலையிலுமாவது, அந்த இல்லத்தை அரசு உடனடியாக வாங்க வேண்டும். தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தை வெளிநாட்டவரும் பார்வையிட, தலைநகரில் நினைவு இல்லம் இருக்க வேண்டியது அவசியம்.

ம.ராசேந்திரன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: இன்றைய முதல்வர்தான், கும்பகோணம் அருகில் இருக்கிற உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு நினைவு இல்லம் எழுப்ப, அரசாணை வெளியிட்டார். உ.வே.சா., தனது இளமைக் காலத்தை உத்தமதானபுரத்தில் அதிகம் செலவிட்டு இருந்தாலும், அவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், திருவல்லிக்கேணி வீட்டில் தான், அதிகம் தமிழ் வளர்க்க அருந்தொண்டு ஆற்றினார். தமிழ்த் தாத்தா வாழ்ந்த தமிழ்க் கோவிலை வாங்கி, தலைநகரில் நினைவு இல்லம் அமைத்திட வேண்டும்.

பத்மாவதி விவேகானந்தன் - ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்: இந்தியர்களுக்கு வரலாற்றைப் பாதுகாக்கும் உணர்வு குறைந்து போயிற்று என்ற குற்றச்சாட்டு, நம் மீது வைக்கப்படுவதுண்டு. அதனால் தான், திருவள்ளுவர் எங்கு பிறந்தார் எனக் கேட்டால், மயிலாப்பூர், மதுரை, நாகர்கோவில் என்கிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய எழுதுகோல், அவர் நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மகாகவி வாழ்ந்த குயில் தோப்பை பறிகொடுத்து விட்டோம். அதுபோல், காடு, மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து, கறையான்களின் காதுகளுக்கு தகவல் சென்றுவிட்ட போதிலும், ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து, இலக்கண அறிவு கொண்டு, தமிழ்த் தாத்தா தொகுத்து தந்து விட்டுப் போனதால் தான், இன்றைக்கு தமிழ் மொழியை செம்மொழி என்கிறோம். தமிழ் வளர்த்த கோவிலை இடித்து விடாதீர்கள். அரசு முனைப்பு கொண்டு, அந்த இடத்தை வாங்கி, நினைவு இல்லமாக்க வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...