கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வு எழுதத் தவறியவர்கள், தத்கால் திட்டத்தில், இன்றும், நாளையும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில், வழங்கப்பட்டுள்ள அறிவுரைப்படி, நாளை மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில், பதிவிறக்கம் செய்யப்பட்ட, "சலான்" மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை - 6&' என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு பாடம் மட்டும் எழுதுவோர், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய், இதர கட்டணம், 35 ரூபாய்; அனைத்துப் பாடங்களையும் எழுதுவோர், 187 ரூபாய், மற்றும், "தத்கால்" திட்டத்திற்கு, 1,000 ரூபாயை, செப்டம்பர் 24ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன், செப்டம்பர் 28, 29ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, "ஹால் டிக்கெட்" பெற்றுக் கொள்ளலாம்.

>>>வி.ஏ.ஓ தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

வரும், 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையிலான தேர்வு என்பதால், போட்டி போட்டுக் கொண்டு, தினமும் 50 ஆயிரம், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதற்கான போட்டித் தேர்வு வரும் 30ம் தேதி, மாநிலம் முழுவதும் 4,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது. மொத்தமுள்ள ஆயிரத்து 870 பணியிடங்களுக்கு, 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு இடத்திற்கு, 570 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

>>>சமுதாய ரேடியோக்களில் கணிதம் தொடர்பான நிகழ்ச்சிகள்

சமுதாய ரேடியோக்களில், கணிதம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக் குழு, அறிவியல் தொழில்நுட்ப துறைகள், சமுதாய ரேடியோ மூலம் கணிதத்தை பிரபலமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், இதுதொடர்பான கருத்தரங்கில், தொழில்நுட்ப தொடர்புக்குழு விஞ்ஞானி உஜ்வாலா திர்கே, இதை அறிவித்தார்.
இந்த ஆண்டு கணித ஆண்டாக இருப்பதால், மத்திய அரசு, கான்பூர் ஐ.டி.ஐ., கோல்கட்டா, மும்பை பல்கலைகள், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் இந்த சமுதாய ரேடியோ பயன்பாட்டு வாய்ப்புகளை செயல்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்களில் சமுதாய ரேடியோ வசதியை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் கணிதம் தொடர்பான விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகம், வினாடிவினா, கதை சொல்லுதல், புதிர்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவை தினமும் 90க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து அளிக்கும். இதன் தாக்கத்தை பொறுத்து, அவை மேலும் பல சமுதாய ரேடியோக்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தினசரி வாழ்க்கையில் கணிதத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியதுடன், "மேற்கண்ட நான்கு சமுதாய ரேடியோக்களும், கணித பயன்பாடு குறித்து நேயர்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
ஆசிய நாடுகளின் காமன்வெல்த் கல்வி ஊடக மைய முன்னாள் இயக்குனர் ஆர்.ஸ்ரீதர், 2 நாள் கருத்தரங்கின் ஆலோசகராக செயல்பட்டார். தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு குழுமம் "பெண்களுக்கான சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல்" தொடர்பான பயிற்சியை பரவலாக்கும் "மெகா" திட்டத்தில், ஈடுபட்டுள்ளது.
இதில் கவுகாத்தி, லக்னோ, வயநாடு, திருச்சி, திருச்செங்கோடு, பெங்களூரு, மீரட் நகரங்களின் சமுதாய ரேடியோ பொறுப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அறிவியல் தொழில்நுட்பத் துறை, ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை, 30 சமுதாய ரேடியோக்கள் மூலம் துவக்கி விட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களை இதில் பதிவு செய்து கொள்வதன் மூலம், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இப்பயிற்சி சென்றடையும் வாய்ப்புள்ளது.
விஞ்ஞானி உஜ்வாலா கூறுகையில், "12வது ஐந்தாண்டு திட்டத்தில், இத்திட்டத்திற்காக, அறிவியல் தொழில்நுட்பத் துறை, நூறு சமுதாய ரேடியோ நிலையங்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
மதுரையில், "சியாமளாவாணி", தனது பரீட்சார்த்த கணிதம் தொடர்பான ஒலிபரப்பு திட்டத்தை, விரைவில் துவக்க உள்ளது. இதுதவிர, இந்திய அளவிலான 150 சமுதாய ரேடியோக்களில், தமிழகம், புதுச்சேரியில் மட்டும் 27 சமுதாய ரேடியோக்கள் விரைவில் செயல்படும்.

>>>பல் மருத்துவ நுழைவுத்தேர்வு: விடைத்தாள் நகலை வழங்க உத்தரவு

கேள்வித்தாள், விடைத்தாள் நகல்களை, நுழைவுத் தேர்வு எழுதிய டாக்டருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மானாமதுரை, அரசு மருத்துவமனையில், பல் மருத்துவராக, டாக்டர் செல்வஜோதி ரஞ்சிதம், பணியாற்றி வருகிறார். முதுகலைப் படிப்புக்கு (எம்.டி.எஸ்.,) விண்ணப்பித்தார். மார்ச்சில், நுழைவுத் தேர்வு எழுதினார். மொத்த மதிப்பெண், 90; செல்வஜோதி பெற்ற மதிப்பெண், 59.75; கேள்விக்கான விடைகளில், தவறு இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இதையடுத்து, கேள்வித்தாள், "கீ&' விடைத்தாள் மற்றும் தனது விடைத்தாள் நகல்களை வழங்குமாறு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு மனு அனுப்பினார். எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் டாக்டர் செல்வஜோதி தாக்கல் செய்த மனுவில், "கேள்வித்தாள், விடைத்தாளை வழங்க மறுக்கும், விளக்க குறிப்பேட்டில் உள்ள பிரிவை ரத்து செய்ய வேண்டும். நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜு, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, கேள்வித்தாள், விடைத்தாளை பெற உரிமை உள்ளது" என்றார்.
அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "ஏற்கனவே, தேர்வுக்குழு தடை உத்தரவு பெற்றுள்ளதால், தகவலை அளிக்க முடியாத நிலை உள்ளது" என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: கேள்வித்தாள், விடைத்தாளை பெறுவதற்கு, விளக்கக் குறிப்பேட்டில் உள்ள பிரிவு, தடுக்க முடியுமா? என்ற பிரச்னைக்கு, இந்த வழக்கில், தீர்வு காணப்பட வேண்டும். சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனம் தொடுத்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்தத் தீர்ப்பைப் பொருத்திப் பார்த்தால், விளக்கக் குறிப்பேட்டின் அடிப்படையில் மனுதாரருக்கு கேள்வித் தாள் மற்றும் விடைத் தாளை மறுக்க, தேர்வுக் குழுவுக்கு உரிமையில்லை. விடைத் தாள் திருத்தப்பட்டு, முடிவுகளும், அறிவிக்கப்பட்டு விட்டது. எழுத்துத் தேர்வின் முடிவு வெளியிடும் வரை தான், தடை பொருந்தும்.
எனவே, மனுதாரர் கோரியுள்ள கேள்வித்தாள், விடைத்தாள் மற்றும் "கீ&' விடைத் தாள்களை, 2 வாரங்களில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

>>>ரோபோடிக்ஸ் துறையின் அம்சங்களை அறிவோமா?

பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, வீடு அல்லது காரை, ரோபோட்டுகளை வைத்து சுத்தம் செய்யலாம் என்ற சிந்தனையானது, வெறும் பகட்டும், ஆடம்பரமும் நிறைந்தது என்று சொல்லி ஒதுக்கப்பட்டது. இன்றைய நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ரோபோடிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மனித வளத்திற்கு பஞ்சம் நிலவும் இன்றைய காலகட்டத்தில், பலவிதமான வேலைகளை செய்வதற்கு, ரோபோட்டுகளைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக உள்ளது. மேற்கூறிய நாடுகளில், எதிர்வரும் குறுகிய காலத்தில், பலவிதமான வேலைகளுக்கு, மக்கள், ரோபோட்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு, விலை மலிவான மற்றும் பலவிதமான வேலைகளை செய்யும் ரோபோட்டுகளை அதிகளவில் தயாரிப்பதற்கான சூழல் உருவாகும் என்றால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ரோபோட்களின் பயன்பாடு
இன்றைய விஞ்ஞான யுகத்தில், ரோபோட்களின் பயன்பாடு என்பது விரிவடைந்த ஒன்றாக விளங்குகிறது. வீட்டுப் பயன்பாடுகள் முதற்கொண்டு, பலவிதமான தொழிற்சாலை பயன்பாடுகள் வரை, ரோபோட்கள் தேவை இருக்கிறது. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள், பளுவான பொருட்களை கையாளுதல், வீட்டு வேலைகள், மனிதன் செய்ய வேண்டிய சில கடினமாக வேலைகள் போன்ற பல பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.
பரந்துவிரிந்த துறை
ரோபோடிக்ஸ் என்பது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எம்பெட்டெட் சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல் போன்ற பல துறைகளில் சம்பந்தப்பட்டுள்ளது.
ரோபோடிக்ஸ் தொழில்துறையில், பொறியியல் செயல்பாட்டின் பல கட்டங்களில் பல நிலைகள் உள்ளன. சில பொறியாளர்கள், சிக்கல்களை, ரோபோடிக்ஸ் எவ்வாறு தீர்க்கிறது மற்றும் செயல்பாட்டை இன்னும் சிறப்புள்ளதாக மாற்றும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். வேறு சிலர், தற்போது இருக்கும் பொறியியல் கோட்பாடுகளை, ரோபோட்களை மேம்படுத்துவதில் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் இதன் மேம்பாடுகள்
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில்(SERC) கட்டுப்பாட்டின் கீழ், ரோபோடிக்ஸ் துறை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகிறது.
பல பல்கலைகள், தேசிய ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த பல நிபுணர்களின் உதவியோடு மட்டும் அல்லாமல், பலவிதமான பிரிவுகளில், Programme advisory committee ன் உதவியையும் SERC பெறுகிறது.
இந்தியாவில் பின்பற்றப்படும் தராளமய பொருளாதார கொள்கைகளால், நம் நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் பலவிதமான ஆட்டோமொபைல் கம்பெனிகளில், ரோபோடிக்ஸ் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் பயிற்சி வாய்ப்புகள்
ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், சில பல்கலைகள், பட்டப் படிப்பை வழங்குகின்றன. இது highly interdisciplinary படிப்பாகும். அதேசமயம், இத்துறையில் நுழைய வேறு பல வாய்ப்புகளும் உள்ளன. இப்போதுவரை, இளநிலை பட்டப்படிப்பு அளவில், ரோபோடிக்ஸ் படிப்பிற்கு, இந்தியாவில் மிகவும் குறைந்த வாய்ப்புகளே உள்ளன.
அதேசமயம், ஒரு சில கல்வி நிறுவனங்கள், M.Tech மற்றும் MS நிலையில் இத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன. Artificial Intelligence என்பது ரோபோடிக்ஸ் துறையுடன் மிகவும் நெருங்கியவை. பல கல்வி நிறுவனங்கள், Artificial Intelligence மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன.
நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய படிப்புகளில் ஒன்றான, Theory of machines & control போன்ற படிப்பைக்கூட சிறப்பாக கற்றுத்தரும் அளவிற்கு தகுந்த ஆசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் இல்லை. இந்த நிலையில், ரோபோடிக்ஸ் துறையில், சிறப்பு பி.டெக் படிப்பை வழங்குவதென்பது இப்போதைக்கு பயன்தராத ஒரு விஷயம் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இளநிலைப் படிப்பு
இளநிலை அளவில் ஒருவரின் படிப்புத் தேர்வு என்பது தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்தது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய துறைகளில் பி.டெக் படிப்பதானது, ஒருவரின் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். முடிவாக, சிறப்பு படிப்பும் தேவை.
தற்போதைய நிலையில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொணர்வது அவசியம். இதன்மூலம், மெக்கானிக்கல் பொறியாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையில் திணற அவசியமில்லை. அதேசமயம், மெக்கட்ரானிக்ஸ் துறையில் வழங்கப்படும் பி.டெக் படிப்பானது, ரோபோடிக்ஸ் துறையுடன் ஓரளவு நெருங்கி வரும் ஒன்றாக திகழ்கிறது.
இந்தியாவிலுள்ள வேலை வாய்ப்புகள்
ரோபோடிக் தொடர்பான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் ஓரளவுக்கு விரிவடைந்துள்ளது. ரோபோடிக்ஸ் துறையில் சிறப்பு(specialisation) படிப்பை முடித்தவர்கள், மெக்கானிக்கல் தொடர்புகள், சென்சார் - ஆக்சுவேடர் இன்டக்ரேஷன்ஸ், மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றின் அடிப்படையில், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமாக, ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படும் இடங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
இந்தியாவிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்கள்
Precision automation robotics India limited(PARI)
ABB
Kuka robotics and DiFACTO Robotics and Automation
போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), பலவிதமான சூழல்களையும், சிக்கல்களையும் கையாள, பல்வேறு விதமான ரோபோட்களை வைத்துள்ளது. DRDO, நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் ரோபோட்களை கட்டமைக்க, Centre for artificial intelligence and robotics போன்ற நிறுவனங்களை அமைத்துள்ளது.
வரும் காலங்களில், வர்த்தகம், வீட்டு உபயோகம், பாதுகாப்பு, போக்குவரத்து, விநியோகம், மெக்கானிக்கல் உள்ளிட்ட மனித வாழ்வின் பல முக்கிய அம்சங்களில், ரோபோட்களின் பங்களிப்பு அதிகரித்துவிடும்.
இத்துறையில், அதிகளவு வேலைவாய்ப்புகள் இருந்தாலும், பயிற்சிகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இது தொடர்பான படிப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஒரு பல்துறை அம்சமாக இருக்கும் ரோபோடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் அல்லது கணிப்பொறி அறிவியல் துறைகளைப்போல், முதுநிலைப் பட்ட அளவில் ஒரு சிறப்பு படிப்பாக உள்ளது.
இந்தப் படிப்பில் ஆர்வமுள்ள ஒருவர், இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள், இப்படிப்பை வழங்கும் வரை காத்திருக்கலாம். மற்றபடி, இதுதொடர்பான சிறப்பு படிப்புகளுக்கு தற்போதைக்கு, வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
ரோபோடிக்ஸ் பொறியாளரின் பணிகள்
* ரோபோட் வடிவமைப்பு.
* பல்துறைகளில் ரோபோடிக் பயன்பாடுகள் பற்றி ஆராய்தல்.
* ரோபோட் அமைப்புகளின் பயன்பாடு மற்றும் வடிவமைப்பில், பொறியாளர்களுக்கு உதவுதல்.
* ரோபோட் தயாரிப்பில் பயன்படக்கூடிய எலக்ட்ரானிக் உட்கூறுகளை ஆராய்தல்.
* ரோபோட்களை உருவாக்கிய பின்னர், குறைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சோதித்தல்.
* தேவைப்படும் இடங்களில், ரோபோட்களை அல்லது ரோபோட் அமைப்புகளை நிறுவுதல்.
* ரோபோட் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல்.
* பயனாளிகளுக்கு உதவுதல்
உள்ளிட்ட பலவிதமான பணிகள் உள்ளன.
ரோபோடிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
* IITs - Chennai, Delhi, Kanpur, Guwahathi, Powai, Roorki and Kharagpur.
* PSG College of Technology - Coimbatore.
* SRM institute of science and technology - Kanchipuram.
* International Institute of information technology - Hyderabad.
* The university of Hyderabad.
* University college of engineering under Osmania university - Hyderabad
* M.S. University - Baroda
* The institute of technology under the Banaras Hindu university - Varanasi
* The Birla institute of technology and Science - Pilani
* Sri sathya sai institute of higher learning - Prasanthi nilayam.

>>>அடுத்தாண்டு ஏப்ரல் 7ம் தேதி ஜேஇஇ மெயின் தேர்வு

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் புதிய வடிவிலான நுழைவுத்தேர்வின்(JEE) மெயின் தேர்வு அடுத்தாண்டு ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், அத்தேர்வின் ஆன்லைன்  ஏப்ரல் 8 முதல் 25 வரை நடைபெறும்.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இளநிலை பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க, 2013ம் ஆண்டு முதல், புதிய முறையில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த JEE தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்று 2 பிரிவாக நடத்தப்படவுள்ளது.
JEE மெயின் தேர்வில், சிறப்பாக செயல்பட்ட 1.50 லட்சம் பேர் தேர்வுசெய்யப்பட்டு, அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வை எழுதியவர்களில், சிறப்பாக செயல்பட்டவர்கள் பிரிவு வாரியாக தெரிவு செய்யப்படுவார்கள். ஒரு மாணவர் +2 படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 40% முக்கியத்துவமும், JEE மெயின் தேர்வு செயல்பாட்டிற்கு 60% முக்கியத்துவமும் தரப்படும்.
JEE அட்வான்ஸ்டு தேர்வானது, ஜுன் 2ம் தேதி நடத்தப்படவுள்ளது. இவ்வாறு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>செப்டம்பர் 21 [September 21]....

  • உலக அமைதி தினம்
  • ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
  • மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
  • பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
  • பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...