கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>படைப்பாற்றலுக்கான மாநில விருது: அரசுப்பள்ளி மாணவர் சாதனை

படைப்பாற்றலுக்கான மாநில விருதை, அருப்புக்கோட்டை, சவ்வாசுபுரம் அரசுப்பள்ளி மாணவர் பாலச்சந்தர் பெற்றார். டில்லியில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப கழகம், சிறந்த படைப்புகளை தரும் மாணவர்களுக்கு, "இன்ஸ்பயர் விருது' வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டில், கோவை கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், மாநில அளவில் கண்காட்சி நடந்தது. இதில் அருப்புக்கோட்டை, சவ்வாசுபுரம் அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ஆர். பாலச்சந்தர் கலந்து கொண்டார். எளிய முறையில் தீ அணைக்கும் கருவியை உருவாக்கி, சிறந்த படைபாற்றலுக்கான மாநில அளவில் விருது பெற்றுள்ளார்.
இவரது கண்டுபிடிப்பு: தீயணைக்கும் கருவி ஒரு குறிப்பிட்ட அறையில் வெப்பநிலை உயரும்போது, ரிலே சுவிட்ச் ஆன் செய்யப்படுகிறது. ஐ.சி., துணையுடன் ஒரு சத்தம் எழுப்பப்பட்டு, அந்த சப்தம் நீரில் மூழ்கியிருக்கும் மின் மோட்டாரை இயக்கி, நீரை செலுத்தி தீயை அணைக்க பயன்படுகிறது. விருது பெற்ற மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

>>>மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது. இந்த உயர்வு, கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து, அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். கடந்த மார்ச் மாதம், அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்தது.

>>>புண்ணிய பூமியில் ஒரு அன்னிய பூமி

 
ஹாலிவுட் சினிமாக்களில் வேற்று கிரக வித்தியாச உருவ மனிதர்களையும் செடி கொடிகளையும் பார்த்தால், ""இப்படியும் இருக்குமா'' என நினைக்கத் தோன்றும்.
அரேபிய நாடான, ஏமன் அருகே இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவு தான் "சர்கோட்டா'. நாம் வாழும் இந்த புண்ணிய பூமியில், ஒரு அன்னிய பூமியாக இந்த தீவு இருப்பது தான் ஆச்சரியம். கொஞ்சமே கொஞ்சமான மக்கள் வசிக்கும் இத்தீவில், இருக்கும் தாவரங்கள், வேறு எங்கும் காண முடியாத வடிவத்தில் அமைந்துள்ளன.
மனிதர்கள், குடை என ஏகப்பட்ட "டிசைன்'களில் இவை காண்போரை மலைக்க வைக்கின்றன. வேறு எங்கும் காண முடியாத பறவை, பூச்சி, பல்லி, முதலை இனங்களும் இங்கு மட்டுமே உள்ளன. பல நூறு மீட்டர் ஆழமான குகைகள் இங்கு பிரசித்தம். இங்கு 140க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் சூரிய பறவை, சகோத்ரா குருவி, வாப்லர் உள்ளிட்ட 10 இனங்கள் இங்கும் மட்டுமே உள்ளன. இவற்றைக் காணவும், இயற்கை வினோதங்களை ரசிக்கவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர்.
சகோர்ட்டா - ஒரு பார்வை
மொத்த தீவுகள் - 4 ( சகோர்ட்டா, அப்த் அல் குரி, சமாஹ், தர்ஸா)
பரப்பளவு - 3796 ச.கி.மீ.,
நீளம் - 132 கி.மீ.,
அகலம் - 50 கி.மீ.,
அதிகபட்ச உயரம் - 1503 மீ.,
நாடு - ஏமன்
பெரிய நகரம் - ஹடிபு (மக்கள் தொகை: 8545)
மொத்த மக்கள் தொகை - 42,842
மக்கள் அடர்த்தி - 11.3 ச.கி.மீ.,
மொழி - சகோர்ட்டி
மக்கள் தொழில் - மீன் பிடித்தல், கால்நடை, பேரீச்சை வளர்ப்பு

>>>உதவித்தொகை இன்றி தவிக்கும் நர்சிங் மாணவிகள்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் டிப்ளமோ நர்சிங் மாணவிகள், 500 பேருக்கு, கடந்த ஐந்து மாதமாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில், மூன்றரை ஆண்டு டிப்ளமோ நர்சிங் பிரிவில், 500 பேர் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் இந்த மாணவியருக்கு, தலா, 400 ரூபாய் வீதம், மாதந்தோறும் உதவித்தொகை, நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பணத்தை, மெஸ் செலவுக்காக மாணவியர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால், கடந்த ஐந்து மாதமாக, உதவித்தொகை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி இளநிலை நிர்வாக அலுவலர் தேன்மொழி, "வங்கிக் கணக்கு துவங்கும் மாணவியருக்கு மட்டுமே, அவர்களது கணக்கில், உதவித்தொகை செலுத்தப்படும்" என்று கெடுபிடி செய்து வருவதாக, மாணவியர் கூறுகின்றனர்.
வங்கிக் கணக்கு துவங்க, 500 ரூபாய் டிபாசிட் செய்ய வேண்டும் என்பதால், உதவித்தொகையை நேரடியாக வழங்கும்படி முறையிட்டும், மறுப்பதாக மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்னை, கல்லூரி முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், வழக்கம் போல, உதவித்தொகையை வழங்கும்படி அறிவுறுத்தியும், இளநிலை நிர்வாக அலுவலர், அடம் பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ஐந்து மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் மாணவியர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் முஸ்தபா கூறியதாவது: அரசு உத்தரவுப்படி, கருவூலத்தில் இருந்து நேரடியாக, இ.சி.எஸ்., முறையில், வங்கிக் கணக்கு மூலம், மாணவியர், உதவித்தொகையை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பலமுறை அறிவுறுத்தியும், வங்கியில் கணக்கு துவங்காமல், மாணவியர் பிடிவாதம் செய்கின்றனர்.
உதவித்தொகை வழங்குவதில், முறைகேடு நடப்பதை தவிர்க்கவே, இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில், இளநிலை நிர்வாக அலுவலர் மீது பழி சுமத்துவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

>>>கூடுதல் கட்டணம்: எஸ்.சி. மாணவர்களுக்கு கனவாகும் எம்.பி.பி.எஸ் படிப்பு

தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதால், எஸ்.சி., - எஸ்.சி.ஏ., பிரிவினரை சேர்ந்த, 33 பேர், மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றில், சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளில், 65 சதவீதமும், சிறுபான்மை கல்லூரிகளில், 50 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது.
இடஒதுக்கீட்டின் கீழ், எம்.பி.பி.எஸ்., சேர விரும்பும் மாணவர்களிடம் பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, இரண்டு மடங்கு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்துகின்றன. இதனால், இடஒதுக்கீட்டின் கீழ், எம்.பி. பி.எஸ்., சேர விரும்பும் மாணவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பாக, இம்முறை, இந்நெருக்கடியால், எஸ்.சி., பிரிவினர், 22 பேரும், எஸ்.சி.ஏ., பிரிவினர், 11 பேரும், மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கூறியதாவது: எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த என் மகள், பிளஸ் 2வில், 186.75 "கட்-ஆப்&' மதிப்பெண் எடுத்துள்ளார்.
மருத்துவப் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வில் அவளுக்கு, சென்னை குன்றத்தூரில் உள்ள, மாதா மருத்துவ கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது. அக்கல்லூரிக்கு, எம்.பி. பி.எஸ்., படிப்பிற்கு, கல்விக் கட்டணமாக, 2.6 லட்சம் ரூபாய் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், 7 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வற்புறுத்தினர்; ஜூலை, 25ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த, காலக்கெடுவும் விதித்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு புகார் தெரிவித்தேன். அதையடுத்து, இம்மாதம், 12ம் தேதி, குறிப்பிட்ட கல்லூரியில் சேராததற்கான விளக்கத்தை, அக்கல்லூரியில் இருந்து நேரில் கோரினர். அதற்கு உரிய காரணத்தை தெரிவித்தும், நேற்றைய இரண்டாம் கட்ட கலந்தாய்வில், உரிய மதிப்பெண் இருந்தும், என் மகளின் பெயர், தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு, எஸ்.சி., - எஸ்.டி., அரசு அலுவலர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் மகாராஜன் கூறியதாவது: தனியார் மருத்துவ கல்லூரிகளில், இந்த கட்டணக் கொள்ளை குறித்து, இந்திய மருத்துவ கழகம், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய், செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா உள்ளிட்டோருக்கு, முறையாக புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதைக் கண்டித்து, மருத்துவ கல்வி இயக்ககம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்; இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாதது மற்றும் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலர் உறுப்பினர் ஜெயலால் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

>>>அண்ணாமலை பல்கலையில் தொடரும் உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால பாடப் பிரிவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நேற்று மூன்றாம் நாளாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடப்பிரிவுகள் (இன்டகிரேட் கோர்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இப்பாடப் பிரிவுகள் அரசு அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியர் கடந்த 17ம் தேதி பல்கலை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
மூன்றாவது நாளான நேற்று, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் எதையும் கேட்காமல் கோஷம் எழுப்பினர். பேச்சு வார்த்தையின் போது, ஆத்திரமடைந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பிரகாஷ் என்பவர், தனது சான்றிதழ்களை வீசியெறிந்து, "வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவே தயாராக இல்லை" என, ஆவேசமாகக் கூறி வெளியேறினார். அதிருப்தியடைந்த பேராசிரியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் மயக்கமடைந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

>>>பி.டி.எஸ். கலந்தாய்வு: தனியார் கல்லூரிகளால் குளறுபடி

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., படிப்பிற்கான காலியிட விவரங்களை தெளிவாக தெரிவிக்காததால், கலந்தாய்வு, ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 125 பி.டி.எஸ்., இடங்களை நிரப்புவதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், நேற்று நடந்தது.
இந்தக் கல்லூரிகளில், பிரிவு வாரியாக, காலியாக உள்ள, பி.டி.எஸ்., இடங்கள் குறித்த விவரம், 15ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கும், நேற்று கலந்தாய்வுக் கூட்டத்தின் போது, மின்னணு பலகையில் தெரிவிக்கப்பட்ட காலியிடங்கள் குறித்த விவரத்திற்கும் வேறுபாடு இருந்தது.
இதுகுறித்து, கலந்தாய்விற்கு வந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், காலை, 11:00 முதல், 12:00 மணி வரை, கலந்தாய்வு தடைபட்டது.
இதுகுறித்து, கலந்தாய்வில் பங்கேற்ற, கோவையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மூன்று நாட்களுக்கு முன்பு தான், கல்லூரி வாரியாக, காலியிட விவரங்கள், இணையத்தில் வெளியிடப்பட்டன. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், ஓ.சி., பிரிவில் ஒரு இடம் காலியாக உள்ளதாக, குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், நேற்று கலந்தாய்வு துவங்கும்போது, அந்த இடம் காலியாக இல்லை என, தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற குளறுபடிகளால், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை, தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறியதாவது: கடந்த, 15ம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான உத்தேச பட்டியல் தான் வெளியிடப்பட்டது. இப்பட்டியல் வெளியிடப்பட்ட போது, சிறுபான்மை அல்லாத தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சில, கலந்தாய்வு துவங்குவதற்கு முதல் நாள் கூட, சிறுபான்மை அந்தஸ்தை பெற்றிருக்கலாம்.
இதனால், குறிப்பிட்ட கல்லூரிகளின், இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சுகுமார் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...