கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நிலுவை உதவித்தொகை: விரைவில் வழங்க புதுச்சேரி அமைச்சர் உறுதி

ஆதி திராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ஸ்காலர்ஷிப் தொகை விரைவில் வழங்கப்படும் என புதுச்சேரி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு கூறினார்.
புதுச்சேரியில், ஆதி திராவிட நல மாநில அளவிலான குழு கூட்டம், ஓட்டல் அண்ணாமலையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். நலத்துறை அமைச்சர் ராஜவேலு முன்னிலை வகித்தார்.
ஆதி திராவிடர் தேசிய கமிஷன் துணை இயக்குனர் ராமசாமி, அரசு தெரிவு உறுப்பினர்கள் 18 பேர், அரசு சாரா உறுப்பினர்கள் 26 பேர், அரசின் சிறப்பு அழைப்பாளர்கள் 18 பேர், அரசு சாரா சிறப்பு அழைப்பாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
ஆதி திராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்தும், ஆதி திராவிட துணைத் திட்டத்தின் செயல்பாடு, ஆதி திராவிட மக்களுக்கு அரசுப் பணி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் தொடர்பாகவும், ஆதி திராவிட மக்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கலந்தாய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க, அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், கார்த்திகேயன், பாட்கோ சேர்மன் பிரசாந்த்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாரிமுத்து, நீல கங்காதரன், தெய்வநாயகம், நலத் துறை செயலர் விவேக் பாண்டே, கலெக்டர்கள் தீபக்குமார், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்துறை அமைச்சர் ராஜவேலு பேசுகையில், "ஆதி திராவிட மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி, சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதைக் கண்காணிக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ரூ.18 கோடி ஸ்காலர்ஷிப் தொகை ஓரிரு தினங்களில் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் ஆதி திராவிட மக்களின் சேதமமைடந்த வீடுகளை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில், ஹட்கோ உதவியுடன் ரூ.4 லட்சத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டார்.

>>>அரசு விடுதிகளுக்கும் சிலிண்டர் விலை உயர்வு

அரசு மாணவர் விடுதிகளுக்கு வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், ஒதுக்கப்படும், உணவு செலவுக்குள், உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை என 2,000க்கும் மேற்பட்ட அரசு விடுதிகள் உள்ளன. இதில், தங்கி படிக்கும் ஒரு மாணவருக்கு காய்கறி, பருப்பு, எரிவாயு செலவு உட்பட கல்லூரி விடுதி என்றால் மாதம் ரூ.750, பள்ளி விடுதி என்றால் மாதம் ரூ.650 வீதம், உணவுச் செலவாக அரசு வழங்குகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வு, அரசு விடுதிகளையும் பாதித்துள்ளது. இதுவரை விடுதிகளுக்கு ரூ.390க்கு வழங்கப்பட்ட மானிய சிலிண்டருக்கு பதிலாக, இனி வர்த்தக சிலிண்டர், ரூ.1045க்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என, விடுதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சராசரியாக நூறு மாணவர்கள் உள்ள ஒரு விடுதியில், மாதம் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் தேவைப்படும். விடுதிகளுக்கு அரசு வழங்கும் உணவு செலவில் எவ்வித மாற்றமும் அறிவிக்கவில்லை. "அரசு வழங்கும் பணத்தை சிலிண்டருக்கு மட்டுமே கொடுத்துவிட்டால், மாணவர்களுக்கு உணவு எப்படி சமைப்பது" என்று, விடுதி காப்பாளர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில துணை செயலாளர் ஜான் கூறுகையில், "தற்போது வழங்கப்படும் உணவு செலவு தொகையை, அண்மையில் தான் அரசு உயர்த்தியது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வு எங்களுக்கு சிக்கலாய் மாறியுள்ளது. ஒரு சிலிண்டருக்கு உயர்த்தப்பட்டுள்ள 655 ரூபாயை, அரசு ஏற்க வேண்டும்" என்றார்.

>>>வி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வி.ஏ.ஓ., பதவியில் காலியாக உள்ள, 1,870 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஜூலையில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கு, 9.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இன்று காலை, 10 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணி வரை, தேர்வு நடக்கிறது. 4,000 மையங்களில் நடக்கும் தேர்வை, வீடியோவில் பதிவு செய்ய, தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில், எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தேர்வாணையம் எடுத்துள்ளது.

>>>டி.இ.டி. மறுதேர்வு: 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்

டி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.இ.டி. மறுதேர்வு, அக்டோபர் 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும், மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதையடுத்து, புதிய விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.
அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

>>>மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த உத்தரவு

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின், தமிழ், ஆங்கில கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக கட்டுரையின் தலைப்பு மற்றும் அதற்கான முழு தகவல்களையும், ஆசிரியர்களே கொடுத்து விடுவார்கள். இதனால் மாணவர்களின் சிந்திக்கும், எழுதும் திறன் வளர்வதில்லை.
இனிமேல், கட்டுரையின் தலைப்பை மட்டுமே ஆசிரியர்கள் வழங்குவார்கள், அதற்கான அனைத்து தகவல்களையும் அவர்களே தொகுத்து, சொந்த நடையில் எழுத வேண்டும். கட்டுரையை மதிப்பீடு செய்து, அதற்கு மதிபெண் வழங்கப்படும்.
கட்டுரையின் நிறை,குறைகளை கூறி மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்த வேண்டும். சிறந்த கட்டுரையை வகுப்பறை மற்றும் கூட்டு பிரார்த்தனையின் போது மாணவர்களை வாசிக்க வைத்து உற்சாகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது: எப்போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், மாநில அரசும் உயர்த்தி வழங்கும்.
சமீபத்தில் மத்திய அரசு, 7% அகவிலைப்படி உயர்வை அறிவித்து, 65% அகவிலைப்படியை 72 சதவீதமாக்கியுள்ளது. அதேபோல மாநில அரசும் வழங்க வேண்டும். மேலும் இதில், 50% அடிப்படை சம்பளத்துடன் இணைத்து அறிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

>>>புதுச்சேரி மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக அளிக்க புதுச்சேரி மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் திட்டமிட்டுள்ளது.
புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் மனிதவள மேம்பாடு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
தன்னம்பிக்கை, மனக்கட்டுப்பாடு, உலக அளவில் சாதித்தவர்களின் வரலாறுகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகள் குறித்த விளக்கம் போன்ற பல தலைப்புகளில் இந்த பயிற்சி இலவசமாக நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியை நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் கடிதம் அனுப்பி தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இயக்குனர், மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம், 72, முதல் குறுக்குத்தெரு, ஆனந்த ரங்கபிள்ளை நகர், புதுச்சேரி௮ என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...