கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஏழை மாணவர்கள் கல்வி உதவி பெற வாய்ப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ்1 படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு பிரண்ட்லைன் அமைப்பு கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது. இதற்கு அக்.,5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ், நடத்தி வரும், "பிரண்ட் லைனர்ஸ்' அமைப்பு, குவைத் இந்திய தூதரகத்தில், சேவை அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம்,ஏழை மாணவர்களுக்கு, கல்விக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான, கல்வி உதவித்தொகை குறித்து, அமைப்பின் தலைவர் சாந்தா மரியம், துணைத்தலைவர் வேலு, செயலர் கீரணிமதி ஆகியோர் கூறியிருப்பதாவது: "பிரண்ட் லைனர்ஸ்' அமைப்பு, மணிமேகலை பிரசுரத்தின் ஒருங்கிணைப்பில், பாலம் அமைப்பு மூலம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவியர் பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன், "பிரண்ட்லைனர்ஸ் கல்வி உதவித்தொகை, மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை-17' என்ற முகவரிக்கு, வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

>>>பள்ளி விபரம் சேகரிக்க உத்தரவு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம், உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்கம் சார்பில் சேகரிக்கப்பட உள்ளது. அடுத்த வாரத்தில் துவங்க உள்ள, இந்தபணிகளின் தகவல்கள் அனைத்தும், ஒரு மாதத்திற்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொகுப்பு திரட்டும் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.

>>>இன்று பள்ளிகள் திறப்பு

கடந்த மாதம், பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. தேர்வுக்குப் பின், 25ம் தேதியில் இருந்து, விடுமுறை விடப்பட்டது. ஒன்பது நாள் விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, இன்று, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு வசதியாக, கடந்த மாதமே, அனைத்துப் பள்ளிகளுக்கும், பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.
இன்று தொடங்கும் இக்கல்வியாண்டின் இரண்டாம் பருவம் ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்  இனிதாகவும், வெற்றிகரமாகவும்  அமைந்திட கல்வி அஞ்சலின் வாழ்த்துக்கள்....

>>>அமலுக்கு வந்தது பள்ளி வாகன விதி

பள்ளி வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க வகுக்கப்பட்ட, அரசின் புதிய விதிகள், அமலுக்கு வந்த நிலையில், அதை முறையாக செயல்படுத்த, கலெக்டர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, உள்துறை செயலாளர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார். சென்னை சேலையூரில் பள்ளி சிறுமி ஸ்ருதி, பஸ் ஓட்டையில் விழுந்து பலியானார். இதை தொடர்ந்து, பள்ளி வாகனங்களை விபத்தில்லாமல் இயக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டுனருக்கு ஐந்து ஆண்டு அனுபவம், உதவியாளர்கள், ஓட்டுனர் உரிமத்துடன், குழந்தைகளை கையாளும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை, மாதம் ஒரு முறை கூட்டி, வாகனங்கள் பராமரிப்பு, டிரைவர், உதவியாளர் குறித்த கருத்து கேட்கவேண்டும். பள்ளி, மாவட்ட அளவில் கமிட்டி அமைக்க வேண்டும். இக்குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்பன, போன்ற விதி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, அக்.,1முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை முறையாக செயல்படுத்த, கலெக்டர்கள், மாநில போக்குவரத்து கமிஷனர், மண்டல போக்குவரத்து அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு, உள்துறை செயலாளர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

>>>வாழ வழி விடுவோம்: இன்று சர்வதேச விலங்குகள் தினம்

உலகில் பல விலங்குகள் உள்ளன. இவை பல வழிகளிலும், உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அக்., 4ம் தேதி சர்வதேச விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியில் 1931ல் இத்தினம் தொடங்கப்பட்டு, தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. "அனிமல்' என்ற வார்த்தை லத்தின் மொழியில் இருந்து உருவானது.
எத்தனை வகை:
பெரும்பாலான விலங்குகள், பாலூட்டி வகையை சேர்ந்துள்ளது. சில விலங்குகள் தனது உணவுக்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இவை "ஊன் உண்ணிகள்' என அழைக்கப்படுகின்றன.

புலிகளை காப்பது ஏன்:
புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால், மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி, காடுகளின் வளம் குறையும். இதனால் தான், புலிகளை பாதுகாக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவலின் படி நாட்டில் 1,706 புலிகள் உள்ளன.

இவை வாழ வழி விடுங்கள்:
விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. சில விலங்குகள் கடல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைத் தான் வாழ்வாதாரமாக கொண்டுள்ளது. இயற்கை வளங்களை மனிதன் சேதப்படுத்துவதால், இவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பல விலங்குகள் மனிதனால் வேட்டையாடப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், பல்வேறு வகையான விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.

>>>தேசிய தகுதி நுழைவுத்தேர்வு: தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

"மருத்துவப் படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்" என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறினார்.
"இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்" என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 1ம் தேதி, கடிதம் எழுதினார்.
முதல்வரின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள், நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:
எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கான இடங்களில், 50 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகிறது. மீதமுள்ள இடங்கள், தமிழக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வின்படி, இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப் படுகிறது. தற்போது இப்படிப்புகளுக்கு, அடுத்த மாதம் இறுதியில், தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதனால், மாநில அரசின் இட ஒதுக்கீடு முறைக்கு பாதிப்பு ஏற்படும். கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதில், மத்திய அரசு மீண்டும் நுழைவுத் தேர்வு முறையை கொண்டு வருவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

>>>கீ-ஆன்சர் குளறுபடிக்கு நிபுணர் குழுவே பொறுப்பு: டி.ஆர்.பி. திட்டம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை, மே, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவிற்குப்பின், பணியிடத்திற்கு ஒருவர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை, ஆகஸ்ட்டில், டி.ஆர்.பி., நடத்தியது. முன்னதாக, கேள்விகளுக்குரிய விடைகளை (கீ-ஆன்சர்) டி.ஆர்.பி., வெளியிட்டதும், பல விடைகள் தவறானவை என, விண்ணப்பதாரர் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில், ஐம்பதுக்கும் அதிகமாக தவறான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, முடிவு வெளியிடப்பட்டு உள்ளதால், ஒட்டுமொத்த தேர்வுப் பட்டியலும் ரத்து செய்யப்படுகிறது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வாரங்களுக்குள், அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., இறங்கி உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: "இடஒதுக்கீடு முறையை சரியாக கடைபிடிக்கவில்லை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தான், தேர்வுப் பட்டியலை தயாரித்தோம். உள் ஒதுக்கீடு தொடர்பாக, சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை நிவர்த்தி செய்ய, அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
கேள்விகளுக்குரிய விடைகளை, டி.ஆர்.பி., தயாரிப்பதில்லை. ஒவ்வொரு பாட வாரியாக, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் தான் தயாரிக்கின்றனர். ஒரு நிபுணர் குழு தயாரித்த, கீ-ஆன்சரை, மற்றொரு நிபுணர் குழு, தவறு என்கிறது. அப்படி இருக்கும் போது, எங்களை எப்படி குறை கூற முடியும்?
எனவே, தவறாக கேள்வி கேட்டாலோ, கீ-ஆன்சர்களை தயாரித்தாலோ ஏற்படும் குளறுபடிகளுக்கும், பிரச்னைகளுக்கும், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பேற்க வேண்டும் என, விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர உள்ளோம். "ஸ்கேன்' செய்யப்பட்ட விடைத்தாள்கள், அப்படியே இருக்கின்றன. எனவே, விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில், எவ்வித சிக்கலும் ஏற்படாது.
உயர் நீதிமன்றம் நிர்ணயித்த கால கெடுவிற்குள், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, புதிய பட்டியலை வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்: சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. எனினும், பணிக்கு, ஒருவர் என்ற வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதால், இதில் பங்கேற்ற அனைவரும், தங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். இந்நிலையில், மறுமதிப்பீடு செய்வதன் மூலம், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...