கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டெங்கு ஒழிப்பு உறுதி மொழி : மாணவர்கள் வாசிக்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், திருநெல்வேலி மாவட்டத்தில் பலர் இறந்தனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுதிமொழி: டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ்., கொசுக்களை ஒழிப்பதற்கு, அனைத்து பள்ளிகளிலும் தினமும் இறைவணக்கத்தின் போது, டெங்கு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்க வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்காமல், உரல், சிரட்டை, டயர்கள், டீக்கப்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது வீட்டை சுத்தப்படுத்துவேன். இதை எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் நான் எடுத்துக்கூறுவேன். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் முன் மாணவர்கள், உறுதிமொழி ஏற்க வேண்டும்.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""டெங்கை ஒழிப்பதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம். மாணவர்களிடம் இந்த கருத்தை பரப்பினால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று நாங்கள் கருத்துக்களை பிரதிபலித்தது போல் அமையும்,''என்றார்.

>>>அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜூலை மாதம் முதல், முன்தேதியிட்டு இந்த பணம் வழங்கப்படும்.
இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, ஜூலை மாதம் முதல், மத்திய அரசு அலுவலர்களுக்கான, அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதே ஜூலை மாதம் முதல், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியம் பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும், உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இதன் மூலம், அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 1,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சி: மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, முதல்வரின் அறிவிப்புக்காக மாநில அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று வெளியான அறிவிப்பை அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு, தமிழ்நாடு அரசு அலுவலர், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

>>>அக்டோபர் 06 [Ocober 06]....

  • இலங்கை ஆசிரியர்கள் தினம்
  • எகிப்து ராணுவ தினம்
  • ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
  • பிஜி குடியரசானது(1987)
  • முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)

>>>G.O.No.362, Dated 05-10-2012 - Dearness Allowance - Enhanced from 65% to 72%

>>>ஸ்காட்லாந்து - அருமையான சூழலில் வெளிநாட்டு படிப்பு

கடந்த பல ஆண்டுகளாகவே, உயர்கல்விக்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், ஸ்காட்லாந்து புகழ்பெற்று விளங்குகிறது. ஸ்காட்லாந்தின் எந்த பல்கலையில் படித்தாலும், சிறந்த அனுபவத்தை ஒரு மாணவரால் பெற முடியும்.
தனித்துவமான கலாச்சாரம், நல்ல இயற்கையமைப்பு மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள், ஸ்காட்லாந்தை நோக்கி வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன.
ஸ்காட்லாந்து சரியான இடமா?
உங்களின் வெளிநாட்டு கல்விக்கு ஸ்காட்லாந்து சரியான இடமா என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கு பதில் ஆம் என்பதுதான். ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்களிடமிருந்து கிடைக்கும் கல்வியால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமிருக்க, அந்நாட்டின் வலுவான பொருளாதாரமானது, உங்களுக்கு சிறந்த தொழில்துறை அறிவைக் கொடுக்கிறது.
நிதி, பாரம்பரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், லைப் சயின்சஸ், மருத்துவ தொழில்நுட்பம், சுற்றுலா, படைப்பாக்க தொழில்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை அந்நாட்டிலுள்ள முக்கியமான தொழில்துறைகள். ஸ்காட்லாந்தில், மாணவர்கள், cross - faculty படிப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஸ்காட்லாந்திலுள்ள ஒவ்வொரு பல்கலையும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இங்கே படிப்பவர்கள் பெறும் அனுபவம், அவர்களின் நீண்ட நல்வாழ்விற்கு துணைபுரிகிறது.
உயர்கல்வி அமைப்பு
ஸ்காட்லாந்தின் உயர்கல்வி அமைப்பானது, பிற ஐரோப்பிய நாடுகளின் நடைமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்நாட்டிலிருக்கும் மொத்தம் 21 உயர்கல்வி நிறுவனங்கள், சுய நிர்வாக உரிமையும், சுதந்திரமும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மும்முரமாக ஈடுபடும் தன்மையும் கொண்டவை. டிகிரி மற்றும் இதர பட்டப்படிப்புகள், முற்றிலும் கல்வி நிறுவனம் சம்பந்தப்பட்டதே தவிர, ஸ்காட்லாந்து அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல.
பட்டம் வழங்குவதற்கு, ஸ்காட்லாந்து அதிகார அமைப்பினால் அங்கீகாரமளிக்கப்பட்ட பல்கலைகளின் விபரங்கள் www.dius.gov.uk என்ற இணையதளத்தில் கிடைக்கும். இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் அனைத்தும் போலோக்னோ அமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்நாட்டில், இளநிலை மற்றும் முதுநிலை அளவில் வழங்கப்படும் தகுதி நிலைகள், அந்நாட்டு உயர்கல்வி தகுதிகளுக்கான விதிமுறைகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
சேர்க்கை விதிகள்
பொதுவாக, மாணவர் சேர்க்கை விதிமுறைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு மாணவர், தான் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்க பொருத்தமானவர்தானா? என்பதை தெரிந்துகொள்ள, பாட உள்ளடக்கத்தை கவனமாக படிக்க வேண்டும்.
சேர்க்கை நடைமுறைகளின்போது பின்பற்றப்பட வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
* www.ucas.com என்ற இணையதளமானது, பலவிதமான பாடங்களைப் பற்றியும், அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விபரங்களை வழங்குகிறது.
* www.ucas.com இணையதளத்தில், ஆன்லைன் அப்ளிகேஷன் அமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* www.ucas.com மூலம் அப்ளிகேஷன் செயல்பாட்டை தெரிந்துகொள்ளலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரங்களையும் இத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலை, உங்களுக்கான முறையான வழங்கல் கடிதத்தை அனுப்பும்.
கல்வி செலவினம்
பட்டப்படிப்பு அளவில், ஒரு வெளிநாட்டு மாணவருக்கான கல்விச் செலவு, வருடத்திற்கு 9000 பவுண்டுகள் முதல் 20000 ஆகிறது.
அதேசமயம், கல்விக் கட்டணமானது, படிப்புக்கு படிப்பு, பல்கலைக்கு பல்கலை வேறுபடும். மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு, பிற படிப்புகளை விட அதிக செலவாகும். மாணவர் விசா பெர்மிட் பெறுவதற்கு முன்பாக, உங்களின் நிதி ஆதார நிலையை நிரூபிக்க வேண்டும்.
உதவித்தொகை
Saltire என்பது, மாணவர்களுக்கான மிக முக்கியமான உதவித்தொகையாகும். முதுநிலைப் படிப்பில் 1 வருட கல்விக் கட்டணத்தை சமாளிப்பதற்கான 2000 பவுண்டுகள் உதவித்தொகை இதன்மூலம் கிடைக்கிறது. இந்தவகை உதவித்தொகைகளைப் பெறுவதற்கு, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த உதவித்தொகை, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணாவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Commonwealth scholarship, Fellowship plan and British Chevening scholarships(available only at post-graduate level) போன்றவை இதர சில முக்கிய உதவித்தொகைகளாகும். மேலும், ஒவ்வொரு பல்கலையும், தங்களிடம் சில குறிப்பிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன. இவைப் பற்றிய விபரம் அந்தந்த பல்கலை இணையதளங்களில் உள்ளது.
படிப்பின்போதான பணி
டிகிரி நிலையிலான படிப்பை(பவுண்டேஷன் அல்லது ஹையர்) மேற்கொள்கையில், வாரம் 20 மணிநேரங்கள் வரை பணிசெய்து, உங்களின் சில பொருளாதார தேவைகளை நிறைவுசெய்து கொள்ளலாம். அதேசமயம், படிப்பை முடித்தப்பிறகு, அந்நாட்டில் சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஆனால், ஸ்காட்லாந்து பல்கலையிலிருந்து பெற்ற பட்டமானது, உலகளவில் நல்ல மதிப்பை கொண்டிருப்பதால், உங்களுக்கான வேலை வாய்ப்பை பற்றி கவலை வேண்டியதில்லை.

>>>யு.ஜி.சி. விதிமுறை: திணறும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

நாட்டில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பல்கலை மானியக் குழு பரிந்துரைத்த 2010ம் ஆண்டுக்கான விதிகளை பின்பற்ற முடியாமல் திணறி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம், யுஜிசி-யிடம் இருந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 2010ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தியது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பலமுறை இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்ட போதிலும் சில கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாக் (NAAC) சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், யுஜிசி பிறப்பித்த 2010ம் ஆண்டுக்கான விதிமுறைகளை பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 29 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், யு.ஜி.சி.யால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை, 16 பல்கலைக்கழகங்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், யு.ஜி.சி. பிறப்பித்த விதிமுறைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற உத்தரவுகளை யு.ஜி.சி. மற்றும் நாக் பிறப்பிப்பது, நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுத்து விடும் என நிகர் நிலைப் பல்கலைக்கழக தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி ஏற்கனவே குரல் கொடுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் டான்டன் கமிட்டி விவகாரம் முடிவுக்கு வந்த பின்னரே, யுஜிசி விதிமுறைகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த யாரும், அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை வகிக்கக் கூடாது என்று 2010ம் ஆண்டு யுஜிசி வெளியிட்ட விதிமுறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

>>>மாணவியை தோல்வி அடைய செய்த விரிவுரையாளருக்கு கண்டனம்

செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிக்கு, தங்கப் பதக்கம் வழங்கியது முறையல்ல என, மாணவர் தொடர்ந்த வழக்கில், மாணவிக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய மும்பை ஐகோர்ட், மாணவியை, வேண்டுமென்றே தேர்வில் தோல்வி அடையச் செய்த, கல்லூரி விரிவுரையாளருக்கு கண்டனம் தெரிவித்தது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ளது, நாக்பூர் பல்கலைக்கழகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தப் பல்கலையில், ஜூஹி பாண்ட்கே என்ற மாணவி, எல்.எல். எம்., (சட்டப்படிப்பு) படித்தார். இவருக்கும், விரிவுரையாளர் நார்னவாரே என்பவருக்கும், கருத்து வேறுபாடு இருந்தது. இதனால், "போதுமான நாட்கள் வருகை இல்லை" எனக் கூறி, மாணவி ஜூஹியை, ஒரு செமஸ்டர் தேர்வை எழுத விடாமல் செய்தார், நார்னவாரே.
இதனால், ஜூஹி, அந்த செமஸ்டரில் தோல்வி அடைந்தார். இதை எதிர்த்து, பல்கலைக்கழக நிர்வாகத்தில், மாணவி முறையீடு செய்தார். சற்று கால தாமதமாக நடந்த விசாரணையில், விரிவுரையாளர் வேண்டுமென்றே, மாணவியை தேர்வு எழுத விடாமல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மீண்டும் தேர்வு எழுதிய ஜூஹி, அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். அவரின் மொத்த மதிப்பெண், 1,129 ஆக இருந்தது.
இதற்கு முன்னதாக, அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற வகையில், தங்கப் பதக்கம் மற்றும் "அதிக மதிப்பெண் மாணவர் பட்டியலில்" முதலிடத்தைப் பெற்றார், மாணவர் முஷாஹித் அலி. அவர், 1,027 மதிப்பெண் பெற்றிருந்தார். ஜூஹியை விட, 102 மதிப்பெண் குறைவாகவே அவர் பெற்றிருந்த போதிலும், முதல் மாணவராக அறிவிக்கப்பட்டார்.
மறு தேர்வு எழுதி, ஜூஹி வெற்றி பெற்றதும், அவர் தான், "பல்கலையில் அதிக மதிப்பெண் பெற்றவர்' என, அறிவிக்கப்பட்டார்; தங்கப் பதக்கங்களும் பெற்றார். இதனால், அதிருப்தி அடைந்த மாணவர் முஷாஹித் அலி, மும்பை உயர் நீதிமன்றத்தில், தன்னையே முதல் மாணவராக அறிவிக்க வேண்டும் எனக்கோரி, வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள், பூஷன் கவாய் மற்றும் சுனில் தேஷ்முக் ஆகியோரைக் கொண்ட, அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மாணவரின் கோரிக்கையை, தள்ளுபடி செய்த நீதிபதிகள், "ஜூஹியே முதல் மாணவி என்பதற்கான தகுதிகளைக் கொண்டவர்; அதிக மதிப்பெண் பெற்றதற்காகவே, அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது" என்பதை உறுதி செய்தனர்.
மேலும், மாணவியை வேண்டுமென்றே தேர்வு எழுத விடாமல் செய்த, விரிவுரையாளர் நார்னவாரேக்கு, கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...