கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாதிரி வினா-விடை புத்தகம் வெளியீடு

கல்வியில் பின்தங்கிய, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை மூலம், மாதிரி வினா - விடை அடங்கிய புத்தகம், தமிழகத்தில் முதல் முறையாக, கோவை வருவாய் மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில், நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, காலை, மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கியுள்ள, பொதுத் தேர்வு மாணவர்களுக்காக, "குறைந்தபட்ச கற்றல் பயிற்சி' என்ற மாதிரி வினா - விடை புத்தகம், பள்ளிக்கல்வி துறையால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட, வினா - விடை தொகுப்புகளில் இருந்து, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள் குழுவினர், முக்கிய வினாக்கள் தெரிவு செய்து, இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட தொகுப்பை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முன்னணி கல்வி நிறுவனத்தின் உதவியுடன், புத்தமாக அச்சடிப்பட்டு, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:
அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி எட்டும் வகையில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும், இப்புத்தகம் வழங்கப்படுகிறது. பள்ளிகளில், 20 சதவீத மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் தான், முதல்முறையாக இந்த வினா - விடை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

>>>மாநில அதிகாரிகள் பள்ளிகளில் நேரடி தொடர்பு கொள்ள விவரம் சேகரிப்பு

கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
தமிழகத்தில், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரை, இந்த தகவல் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள், ஆசிரியர்கள் கல்வி தகுதி, இனத் தகுதி, மாணவர்களின் இன மற்றும் வகுப்பு வாரி விவரங்கள் உட்பட பல விவரங்களை சேகரித்து, கணினியில் பதிவு செய்ய உள்ளனர்.
இதன்மூலம், மாநிலத்தில், கடைக்கோடியில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், பள்ளி குறித்து, மாநில அலுவலர்கள் நேரிடையாக விவாதிக்கவும், தகவல் சேகரிக்கவும் முடியும். இதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட உள்ளது. விவரங்களை சேகரிக்கும் பணியில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

>>>பத்தாம் வகுப்பு தனி தேர்வு "ஹால் டிக்கெட்' வினியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தேர்வுத் துறை அறிவிப்பு:
எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக் தனித் தேர்வு, 15ம் தேதி துவங்கி, 29 வரை நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் வெளியிடும் மையங்களில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்.
தேர்வர், நேரில் சென்று, ஹால் டிக்கெட்டை பெற வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை அணுகலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

>>>நாளை ஆன் லைனில் பட்டதாரி ஆசிரியர் நியமன "கவுன்சிலிங்'

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்.,10ல் நடக்கிறது.
தமிழகத்தில், முதுகலை ஆசிரியர்களை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், ஆன்லைனில் நடக்கிறது. கடந்த 2010-11ம் கல்வியாண்டில், டி.ஆர்.பி., மூலம் நேரடியாக தேர்வாகி, இதில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும், இந்த ஆன்லைன் கவுன்சிலிங்கின்போது, சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, அக்.,10 ம் தேதி காலை, காலி பணியிடம் பற்றிய விவரம், இன சுழற்சி முறையில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும். விரும்பிய இடங்களை தேர்வு செய்து, நியமன உத்தரவை ஆசிரியர்கள் பெற்றுச் கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

>>>பள்ளி சீருடை தைக்கும் பணியில் சுணக்கம்:பல மணி நேரம் தொடர் மின்வெட்டு காரணம்

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது; குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு வினியோகிக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாவட்டம்தோறும் சீருடை தைப்பதற்காக, கூட்டுறவு சங்கங்களும், தாலுகா அளவில் அதன் கிளைகளும் உள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பெண்கள், சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, அரசு பள்ளி சீருடைகளை தைத்து கொடுக்கின்றனர். ஒரு சீருடை தைக்க, 17 ரூபாய் வழங்கப் படுகிறது. நடப்பாண்டில், ஆண்டுக்கு நான்கு, "செட்' சீருடை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 24 ஆயிரம் பேர், கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள நிலையில், நடப்பாண்டில், 500 பேர் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். ஒரு உறுப்பினர், மூன்று நாட்களில், 100 செட் சீருடை தைக்க காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை விரைந்து முடிக்க, தையல் இயந்திரத்தில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தவிர, பிற மாவட்டங்களில், தினமும், 14 முதல், 16 மணி நேரம் வரை நிலவும், தொடர் மின் வெட்டால், அதிகாரிகள் வழங்கும் கெடுவுக்குள், சீருடை தைக்க முடிவதில்லை. இதனால், பாதி கல்வியாண்டு நிறைவடையும் தருவாயிலும் கூட, பல பள்ளிகளில், முதல் செட் சீருடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் கூறுகையில், "மின்வெட்டு பிரச்னையால், 100 சீருடை தைக்க, ஒரு வாரமாகிறது. அதிகாரிகளின் கெடுபிடியால் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் திணறுகிறோம்' என்றனர். கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: உறுப்பினர்கள் குறித்த நேரத்தில், சீருடை தைத்து வழங்காததால், பள்ளிகளுக்கு வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. முதல் செட் சீருடை, அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் செட் சீருடை வழங்குவதில், 50 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மின்வெட்டு பிரச்னை குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

>>>குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு - பத்தாயிரம் பேர் அரசுப்பணிக்குத் தேர்வு...

கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 நிலையில், 10,793 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, ஏப்ரல் மாதம் வெளியானது. தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி என்பதால், போட்டி போட்டு இவ்வருடம், பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.ஏப்ரல், 27 முதல், கடைசி தேதியான, ஜூன், 4 வரை, 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு, தேர்வர் எண்ணிக்கை ,10 லட்சத்தை தாண்டியதால், தேர்வை நடத்துவது, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சவாலாக விளங்கியது.

எனினும், மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ், அவ்வப்போது ஆலோசனை நடத்தி, உரிய ஏற்பாடுகளைச் செய்தார். இதையடுத்து, ஜூலை, 7ம் தேதி, 4,309 மையங்களில், தேர்வுகள் நடந்தன.மொத்தம், 200 கேள்விகள் தரப்பட்டு, ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில், 75 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.முந்தைய தேர்வுகளைப் போல் இல்லாமல், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், கேள்விகள் இருந்ததால், போட்டி கடுமையாக இருக்கும் என, தேர்வர் கருத்து தெரிவித்தனர். அதனால், தேர்வு முடிவுகளும், தேர்வர் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டத்தில், 13 தேர்வர்களுக்கு வழங்கிய கேள்வித்தாளில், 200 கேள்விகளுக்கு பதில், 150 கேள்விகள் அச்சாகி இருந்தது, பிரச்னையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தேர்வர், சென்னைஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதித்து, குரூப் - 4 முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்பட்டது. 4ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், தேர்வு முடிவு, எப்போது வேண்டுமானாலும், "ரிலீஸ்' ஆகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, நேற்று மாலை, குரூப் - 4 தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தகவல் அறிந்த தேர்வர், ஒரே நேரத்தில், தேர்வாணைய இணையதளத்தைப் பார்க்க முயன்றதால், இணையதளம் ஸ்தம்பித்தது. தேர்வு முடிவை உடனடியாக அறிய முடியாமல், தேர்வர் தவித்தனர்.
இந்த தேர்வு முடிவை அடுத்து, 10 ஆயிரம் பேர், தமிழக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். எனினும், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களோ, எந்தெந்த பிரிவில், யார் அதிகபட்சமதிப்பெண்களை பெற்றனர் என்ற விவரங்களோ, வெளியிடப்படவில்லை.

இது குறித்து, தேர்வாணைய வட்டாரம் கூறியதாவது:இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரம், ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை, "ஸ்கேன்' செய்து, தேர்வாணைய இணையதளத்தில், "அப்லோட்' செய்ய வேண்டும்.இதை, இன்று முதல், 17ம் தேதி வரை செய்ய வேண்டும். அதன் பின், சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே, இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்களை வெளியிட முடியும். "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிட்ட பின், கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ராணுவ பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளை சேர்க்க எதிர்ப்பு

ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் செயல்படும், 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை, 25 சதவீதம் சேர்க்க, ராணுவத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009-ன் கீழ், அரசு நிதியுதவி பெறாத, ஒவ்வொரு தனியார் பள்ளிகளும், ஒவ்வொரு ஆண்டும், நலிந்த மற்றும் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை, 25% அளவில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
இந்த விதிமுறை, நாட்டின் பல பகுதிகளில், ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக, ராணுவத்தால் நிறுவப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தப் பள்ளியில், நலிந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க, ராணுவத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, ராணுவ தலைமையகம் சார்பில், ராணுவ அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவத்தில் பணியாற்றும், 13 லட்சம் வீரர்களின் குழந்தைகளுக்காக, நாடு முழுவதும், ராணுவ குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளிகள் நிறுவப்பட்டு உள்ளன. இதுபோல், 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், நலிந்த பிரிவைச் சேர்ந்த, குழந்தைகளை, 25% அளவில் சேர்த்தால், ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்காது.
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளியில், ஏற்கனவே கடும் இடப்பற்றாக்குறை உள்ளது. ராணுவ வீரர்களின் குழந்தைகளே, முழு அளவில் அங்கு சேர முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில், மற்ற பிரிவு குழந்தைகளுக்கு, 25 சதவீத இடங்களை ஒதுக்கினால், ஏராளமான ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் போய் விடும்.
ராணுவ வீரர்கள் மத்தியில் மனஅழுத்தம் அதிகரிப்பதற்கு, அவர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி கிடைக்காததும் ஒரு காரணம். அதனால், "ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக கூடுதல் பள்ளிகளை திறக்க வேண்டும்" என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளிகள் எல்லாம், ராணுவ வீரர்களின் நல நிதியில் நடத்தப்படுகிறது; அரசு பணம் எதுவும் அவற்றுக்கு செலவிடப்படுவதில்லை. எனவே, இந்த விஷயத்தில், ராணுவ அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...