கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு துறைக்கு மானிய விலை சிலிண்டர் ரத்து: "வாட்' வரி சேர்த்து ரூ.1,110 ஆக நிர்ணயம்

அரசு மருத்துவமனை, மாணவர்கள் விடுதி, காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட அரசு துறைகளுக்கு, மானிய விலையில், காஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, மானியத்தை ரத்து செய்து, "வாட்' வரியுடன் சேர்த்து, விற்பனை செய்ய, ஏஜென்சிகளுக்கு, ஆயில் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. ஐ.ஓ.சி., - ஹெச்.பி., - பி.பி., ஆகிய, பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்திற்காக, 14.2 கிலோ எடையுள்ள, காஸ் சிலிண்டர்களையும், வணிக பயன்பாட்டிற்காக, 19 கிலோ எடையுள்ள, கமர்ஷியல் காஸ் சிலிண்டர்களையும் வினியோகம் செய்கின்றன. நடப்பு நிதியாண்டில், 1.87 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறிய, பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள், கடந்த மாதம், டீசல் விலையை உயர்த்தியது. அதோடு, ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுதோறும், ஆறு சிலிண்டர் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும் என, அறிவித்தது. அடுத்த கட்டமாக, ஒரு குடும்பத்திற்கு, கூடுதலாக மூன்று சிலிண்டர்களை, இரண்டாம் கட்ட மானியத்தில் வழங்குவதாக அறிவித்து, மூன்று சிலிண்டர்கள் விலையை, சிலிண்டருக்கு, 920.50 ரூபாய் என, ஆயில் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. சில நாட்களுக்கு முன், டொமஸ்டிக் சிலிண்டர் விலையும், 11 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், ஆண்டு ஒன்றுக்கு, ஆறு சிலிண்டர்களை தலா, 401 ரூபாய் செலுத்தியும், அதற்கு மேல் வாங்கும் மூன்று சிலிண்டர்களை தலா, 920.50 ரூபாய் செலுத்தியும் வாங்க வேண்டிய நிர்பந்தம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மாணவர் விடுதி, காவலர் பயிற்சி பள்ளி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் போன்ற, சில அரசு துறைகளுக்கு மட்டும், வணிக பயன்பாட்டில் இருந்து விலக்கு அளித்து, மானியத்துடன் கூடிய காஸ் சிலிண்டர்களை, ஆயில் நிறுவனங்கள் வினியோகம் செய்தன. இந்நிலையில், இவைகளுக்கான மானியமும், ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரசு துறைகளுக்கு வினியோகிக்கும், 14.2 கிலோ காஸ் சிலிண்டர் விலையை, 1,057 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, 15 சதவீதம் வாட் வரி, 53 ரூபாய் சேர்த்து, 1,110 ரூபாய்க்கு வினியோகம் செய்ய, ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயில் நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கையால், இரு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, சிலிண்டர் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது, அரசு மருத்துவமனை, மாணவர் விடுதி, அங்கன்வாடி உள்ளிட்ட துறை அதிகாரிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

>>>இலவச மையத்தில் 76 பேர் குரூப் 4 தேர்வில் வெற்றி

விருதுநகரில் செயல்படும் அரசு ஊழியர்கள் சங்க இலவச பயிற்சி மையத்தில் படித்த 76 பேர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம்செயல்படுகிறது. இங்கு அனைத்து போட்டி தேர்வுகளுக்கும், இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தேர்வில், இங்கு படித்த 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் சங்கத்தினரே பயிற்சியாளர்களாக உள்ளனர். இது வரை 405 பேர்,போட்டி தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டு, பணிகளுக்கு சென்றுள்ளனர்.

>>>படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம்: மாநகராட்சி புது முயற்சி

மாநகராட்சி பள்ளிகளில், இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள, படிப்பில் மந்தமாக உள்ள, மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதவுள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.மேலும், இந்த ஆண்டு, அதிக மதிப்பெண் பெறும் 110 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாநில அளவில் சாதிக்கும் வகையில், பிரத்யேக ஆசிரியர்களை வைத்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், மாநகராட்சி பள்ளிகள், இந்த ஆண்டு, 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை எட்டுவதற்காக, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திய, துணை தாசில்தார் பாலாஜி, சென்னை மாநகராட்சி பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து, தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் நடந்தது. இன்னும் 10 நாட்களில், கவன குறைவுள்ள, கல்வித் திறனில் பின்தங்கி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு, சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், 84.8 சதவீதமும், 10ம் வகுப்பு தேர்வில், 86.9 சதவீதமும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

>>>முறைகேடின்றி ஆசிரியர் தகுதித் தேர்வு: வாரிய உறுப்பினர் தகவல்

"அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார். ஏற்கனவே நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, அவர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார். சிவகங்கையில் அவர் கூறுகையில், ""ஏற்கனவே நடந்த தகுதி தேர்வில் வாய்ப்பு இழந்த, 6 லட்சத்து 55 ஆயிரத்து 243 பேர், புதிதாக விண்ணப்பித்த 20 ஆயிரத்து 43 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைபாடு, முறைகேடின்றி தேர்வை நடத்த கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்,'' என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

>>>மைசூர் நிறுவனத்துக்கு செல்லும் எஸ்.எஸ்.ஏ., பள்ளி வளர்ச்சி நிதி: ஆசிரியர், கிராம கல்வி குழு எதிர்ப்பு

"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழுள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து, மைசூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் "டிடி' அனுப்ப வேண்டும்' என்ற உத்தரவுக்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம கல்வி குழு உறுப்பினர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலத்தில் 2009லிருந்து ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் பராமரிப்பு நிதி ரூ.7,500, வளர்ச்சி நிதி ரூ.8 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிதி மூலம் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள், பணிகள் மேற்கொள்ளப்படும். எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படும் அனைத்து பள்ளிகளும் இந்நிதியில் கர்நாடக மாநிலம் மைசூர் "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்டரன் மெட்டீரியல்ஸ் பேங்க்' பெயருக்கு, தலா ரூ.2 ஆயிரம் "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும், என்ற உத்தரவு, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. என்ன காரணத்துக்காக என்ற விவரம் தெரியவில்லை என, தலைமையாசிரியர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் புலம்புகின்றனர். எஸ்.எஸ்.ஏ., பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: எந்த தகவலும் தெரிவிக்காமல் மைசூர் முகவரிக்கு ரூ.2 ஆயிரம் அனுப்ப மட்டும் உத்தரவு வந்தது. மாணவர்களுக்கு கற்றல் "மெட்டீரியல்ஸ்'க்காக இத்தொகை அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். அப்படி பார்த்தால், இதற்குமுன் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் புத்தகங்கள் பெற, கோவை நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் "டிடி' அனுப்பினோம். கல்விக்கான "மெட்டீரியல்ஸ்' அனைத்தும் தமிழகத்தில் கிடைக்கும்போது, தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா மாநில நிறுவனம் மீது மட்டும் எதற்கு இந்த பாசம், என்றனர்.

>>>9ம் வகுப்பிற்கு 3 புத்தகங்கள்

அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள் வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமலில் உள்ளது. அடுத்த ஆண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படுகிறது. அதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கும் பணி, கல்வித் துறையில் தற்போது நடந்து வருகிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் மேற்பார்வையில், பணிகளை முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை சரி செய்யும் பணியும், வேகமாக நடந்து வருகிறது. அனைத்துப் பணிகளையும் முடித்து, மாத இறுதிக்குள், மூன்று பருவத்திற்கான பாடப் புத்தக பகுதிகளை, பாட நூல் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட நூல் வட்டாரம் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, நவம்பரில் துவங்கும். தற்போது, எட்டாம் வகுப்பு வரை, பருவத்திற்கு, இரு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பில், பாடத் திட்டங்கள் அதிகம். எனவே, ஐந்து பாடப் புத்தகங்களை, பருவத்திற்கு, மூன்று புத்தகங்களாக வழங்க திட்டமிட்டுள்ளோம். எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை அச்சிட, 140 அச்சகங்களுக்கு, தற்போது, "ஆர்டர்' வழங்கி வருகிறோம். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>பள்ளிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் சேகரிப்பு: உண்மை நிலை வெளிவரும்

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...