கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விண்ணப்பத்தை கொடுத்தால் "ரிசல்ட்'

"பத்தாம் வகுப்பு தனி தேர்வுக்கு, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பித்த தேர்வர், மண்டல துணை இயக்குனர் அலுவலக்தில், விண்ணப்ப நகலை, உடனே சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான், தேர்வு முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: நாளை துவங்கும், பத்தாம் வகுப்பு தனி தேர்வுக்கு, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பித்த தனி தேர்வர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, உரிய நகல்களுடன், சம்பந்தபட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தேர்வர், விண்ணப்பங்களை, சமர்ப்பிக்கவில்லை. நாளை முதல், 26ம் தேதிக்குள், பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் தான், தேர்வு முடிவு வெளியிடப்படும். "ஹால் டிக்கெட்'டில் புகைப்படம் இல்லாத மாணவர், இரு புகைப்படங்களை, தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து, ஒன்றை, ஹால் டிக்கெட்டிலும், மற்றொன்றை, பெயர் பட்டியலிலும் ஒட்ட வேண்டும். இவ்வாறு, வசுந்தரா தெரிவித்தார்.

>>>இன்று டி.இ.டி., மறு தேர்வு : 6.16 லட்சம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தும் டி.இ.டி., தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 6.16 லட்சம் தேர்வர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர், தோல்வி அடைந்தனர். கடந்த மாதம், 17 ஆயிரம் பேர், புதிதாக விண்ணப்பித்தனர். இவர்களுக்கான டி.இ.டி., தேர்வு, இன்று, 1,094 மையங்களில் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வும் நடக்கிறது. முதல் தாள் தேர்வை, 2.52 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை, 3.64 லட்சம் பேரும் எழுதுகின்றனர். இரு தாள்களையும் சேர்த்து, 58 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். முந்தைய தேர்வில், தேர்வு எழுத வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. இன்றைய தேர்வுக்கு, 3 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய தேர்வைப்போல், தேர்வர் தரப்பில் புகார் எழாது எனவும், நிதானமாக தேர்வர் விடை அளிக்க முடியும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்தது. 72 சதவீதம் பேர் பெண்கள் : முதல் தாள் தேர்வில், 24.20 சதவீதம் பேர் ஆண்கள்; 75.80 சதவீதம் பேர் பெண்கள். இரண்டாம் தாள் எழுதுவோரில், 30.30 சதவீதம் பேர், ஆண்கள்; 69.70 சதவீதம் பேர் பெண்கள். மொத்தத்தில், ஆண்கள், 27.80 சதவீதம் பேரும், பெண்கள், 72.20 சதவீதம் பேரும், தேர்வெழுதுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைவரும் சிறப்பான வெற்றி பெற கல்வி அஞ்சலின் வாழ்த்துக்கள்....

>>>அக்டோபர் 14 [October 14]....

  • உலக தர நிர்ணய தினம்
  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  • சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)

>>>பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் : ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் என, 300க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி, ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பிற்கு, தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.  கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, நியமிக்கப்பட்ட குழுவிடமே, இதுதொடர்பாக முறையிடலாம் என, உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  இக்குழு, அனைத்து பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்தது. இதில், அதிருப்தி அடைந்த, 6,400 பள்ளிகள், குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்தன. இதற்கிடையில், நீதிபதி கோவிந்தராஜன், குழுவில் இருந்து விலகினார். குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி, ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார்.  அப்பீல் செய்த பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, கடந்த ஆண்டு ஜூனில், நீதிபதி, ரவி ராஜ பாண்டியன் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், 318 தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்களை நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பின், தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகள் என, 318 பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்தது. இந்த பள்ளிகளுக்கு வரும், டிசம்பர் மாதத்திற்குள், புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதேநேரத்தில், 2010 -11 மற்றும் 2012-13ம் கல்வி ஆண்டுகளுக்கு, ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக, 15 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். இது ஒரு இடைக்கால ஏற்பாடு என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, டி.ஏ.வி., மேல் நிலைப்பள்ளி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், கூறப்பட்டிருந்ததாவது: சென்னை, ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, பள்ளி கட்டணம் தொடர்பான, சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. அரசு உதவி பெறாத சுய நிதி பள்ளிகளில், ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் அல்லாதவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளம் தொடர்பாக, பிறப்பித்துள்ள உத்தரவுகளும் கடுமையாக உள்ளன. அதேநேரத்தில், கல்வி கட்டணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. பள்ளிகளின் பல்வேறு செலவுகளை, அந்தக் குழு கவனத்தில் கொள்ளவில்லை.  ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவும், அது தெரிவித்த வழிகாட்டிக் குறிப்புகளும், கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளன. எனவே, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அதற்கு முன்னதாக, அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, டி.ஏ.வி., பள்ளி மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள், சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து செயல்படும். மனுதாரர்கள், தங்களின் பிரச்னைகளை, அந்தக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரத்தில், "பள்ளிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த, ஐகோர்ட் கருத்து மட்டும் இவ்வழக்கில் பரிசீலிக்கப்படும்' என்றும் குறிப்பிட்டனர்.

>>>அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் 3,500 பணியிடங்களை நிரப்ப உத்தரவு

அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, நிரப்பப்படாமல் உள்ள, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 3,500 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிதி உதவியுடன், 148 கலை, அறிவியல் கல்லூரிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 3,500 பணியிடங்கள், 7 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இந்த பணியிடங்கள் அனைத்தும், ஏற்கனவே, அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள். இதை நிரப்ப அரசின் அனுமதி கேட்டு, கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தற்போது, இந்த பணியிடங்களை நிரப்ப, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உதவி பேராசிரியர் முதல், அலுவலக பணியாளர் வரை, பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் கல்வியாண்டு துவங்குவதற்குள், 3,500 பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிடும். சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகங்கள், தேவையான பணியிடங்களை நிரப்ப, விளம்பரம் வெளியிட்டு, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். அதன்பின், கல்லூரி நிர்வாகக் குழு, தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதி வாய்ந்தவர்களை, அரசின் ஒப்புதலுடன், பணி நியமனம் செய்யும்.

>>>மதிய உணவு திட்டம்:மானிய விலையில் சிலிண்டர்

நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க கோரி பெட்‌ரோலியத்துறை அமைச்சர் ‌ஜெயபால் ரெட்டிக்‌கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது கர்நாட‌கம், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், நகலாந்து, ஹரியாணா, திரிபுரா, டாமன்டையூ மற்றும் தத்ராநாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேற்கண்ட மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன. மொத்த செலவு தொகையில் சுமார் 60 சதவீதம் வரையில் சிலிண்டர்களுக்கு ‌‌செல‌வு செய்ய வேண்டியிருப்பதால் மதிய உணவு திட்ட பயன்பாடற்கான சிலிண்டர்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என ‌ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

>>>உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் : விரைவில் டி.ஆர்.பி., அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள, 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு ஆண்டை கடந்த நிலையில், இன்னும், உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை சார்பில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதற்குள், பழைய அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, சமீபத்தில், உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., வேகமாக செய்து வருகிறது. இம்மாதம், 20ம் தேதிக்குப் பின், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட உள்ளது. எம்.பில்., மற்றும் "நெட்' அல்லது "ஸ்லெட்' ஆகிய தேர்வுகளில், தகுதியைப் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேரடியாக, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும், விண்ணப்பிக்கலாம். கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், அதிக கல்வித் தகுதி இருந்தால், 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர், இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக, 7.5 ஆண்டு இருந்தால், 15 மதிப்பெண்கள் கிடைக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...