கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிவன்மலை கோவிலில் பாடபுத்தகம் வைத்து பூஜை பள்ளி கல்வி சிறப்பாகும் என கருத்து

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோவிலில், ஆண்டவர் உத்தரவு படி, தற்போது பள்ளி பாட புத்தகம் வைத்து, பூஜை நடக்கிறது. இதனால், நாட்டில் பள்ளிகல்வி சிறப்பாக இருக்கும் என, பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாட்டில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, சிவன்மலை முருகன் கோவிலில் உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் வந்து சொல்லும் பொருளை வைத்து, அதற்கு சிறப்பு பூஜை நடத்துவது, நடந்து வருகின்றன. இதில், தற்போது கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது கனவில் வந்த, முருகப்பெருமான், பள்ளி பாடபுத்தகம் வைத்து பூஜிக்க சொல்லியுள்ளார். அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, முறைப்படி பூஜை உத்திரவு கேட்டு, கடந்த, 5ம் தேதி முதல், ஐந்தாம் வகுப்பு, ஆங்கிலபுத்தகம் மற்றும் + 1வகுப்பு தமிழ் உரை புத்தகம் வைத்து, பூஜை நடக்கிறது. பள்ளி பாடபுத்தகம் வைத்து பூஜை நடப்பதால், நாட்டில் பள்ளி கல்வி சிறப்பாக இருக்கும், மாணவர்களிடம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று, பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கு முன், விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது நாட்டில் அதிகபடியான கோவில்களில், குடமுழுக்கு நடந்தது. மேலும், மக்களிடம் ஆன்மீகம் ஈடுபாடு அதிகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆற்று நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டது, காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை தலைதூக்கியது. துப்பாக்கி வைத்து பூஜை செய்தபோது, கார்கில் போர் நடந்தது. அதற்கு முன், மண் வைத்து பூஜை நடந்தது. அப்போது, "ரியல் எஸ்டேட்' தொழில் செழித்து, பூமி விலை பலமடங்கு அதிகரித்தது. ஒரு படி அரிசியும், 100 ரூபாய் பணம் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது, தற்போது உயர்ந்தும் வருகிறது. அடுத்து, 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடந்ததால், நாட்டில் பண புழக்கம் அதிகரித்தது. மஞ்சள் பொடி வைத்து பூஜை நடந்த போது, நல்ல விலைக்கு மஞ்சள் விற்பனை ஆனது. தங்கம் வைத்து பூஜை நடந்த போது, தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது பள்ளி பாட புத்தகம் வைத்து பூஜை நடப்பதால், பள்ளிகல்வி சிறப்பாக இருக்கும் அல்லது சிக்கலை சந்திக்கும் என, சிவன் மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

>>>காவலர், துப்புரவு பணியாளர் பணிக்கு 3,640 பேர் தேர்வு

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில்  நேற்று வெளியிடப்பட்டன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு, ஏற்கனவே வெளியாகி இருந்தது. வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில், இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,""இரு பணிகளுக்கும், குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலர், 5ம் வகுப்பு படித்துள்ளனர். சிலர், 7ம் வகுப்பு படித்துள்ளனர். இவர்கள், விரைவில், பணி நியமனம் செய்யப்படுவர்'' என, தெரிவித்தன. சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிகிறது.

>>>ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா?

இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். டிஇடி, தேர்வு வழியாக, 25 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர். மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் கருதுகின்றனர். இடைநிலை ஆசிரியர், பதிவுமூப்பு அடிப்படையிலும், இதர வகை ஆசிரியர்கள், மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளனர். அதனால், காலியிட பட்டியலை வெளியிட்டால், தகுதி வரிசைப்படி, எந்த இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை, இப்போதே தெரிந்துகொள்ள முடியும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர் வழக்கமாக, கலந்தாய்வு நடக்கும் இடத்தில், ஒரு மணி நேரம் முன்பு, காலி பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால், பட்டியலை பார்ப்பதற்கு, தேர்வு பெற்றவர்கள், முட்டி மோதும் நிலை இருக்கிறது. சமீபகாலமாக, "ஆன்-லைன்" வழியாக, கலந்தாய்வு நடந்து வருவது, மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் என்றாலும், காலியிட பட்டியலை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது, தேர்வு பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விவரங்கள் கிடைத்ததும், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தன.

>>>பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மதிப்பெண் சலுகை கோரி மனு தாக்கல்

பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதா. அருந்ததியின சமூகத்தைச் சேர்ந்த இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, மற்றும் பிஎட், பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில், 57.33 சதவீதம், இரண்டாம் தாளில், 57.33, சதவீதம் பெற்றேன். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனக்கு அனுப்பப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்கள், 7,000 பணியிடங்களுக்கு, முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 20 ஆயிரம் இடங்கள் தேவைப்படுகின்றன. 8,849 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, பற்றாக்குறை உள்ளது.
இடஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொறுத்தவரை, சலுகைகள் வழங்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை, ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், அதாவது, 60 சதவீதத்துக்குப் பதில், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது, என, இருக்க வேண்டும்.
எனவே, தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். தகுதி மதிப்பெண்ணில், எனக்கு சலுகை வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி சந்துரு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

>>>சிலிண்டருக்கு பணமில்லை: விறகுக்கு மாறும் அங்கன்வாடிகள்

அங்கன்வாடிகளில், எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த நிதி கிடைக்காததால், சத்துணவு சமைக்கும் பணிக்கு விறகுகளை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 49,499 அங்கன்வாடி மையங்கள், 4940 குறு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இங்கு, புகையில்லா சமையலறை உருவாக்கப்பட்டு, சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு, குக்கர் வழங்கப்பட்டது. இதற்குரிய சிலிண்டரை அங்கன்வாடி பணியாளர்களே ரூ1400க்கு வாங்குகின்றனர். இதற்கான பணம், கடந்த ஓராண்டாக வழங்காமல், இழுத்தடிப்பதால், மீண்டும் விறகுக்கு மாறி வருகின்றனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் வாசுகி கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர் 1400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. வீடுகளுக்கு வாங்கப்படும் அளவு தான் உள்ளது. ஒரு சிலிண்டர் 2 மாதத்துக்கு வரும். விறகுக்கு ஒரு குழந்தைக்கு 19 பைசா ஒதுக்குகின்றனர். அதிகபட்சம் 20 குழந்தைகள் இருந்தால், மாதத்துக்கு 114 ரூபாய். இரண்டு மாதத்துக்கு 228 ரூபாய். அந்த தொகையை கணக்கிட்டு தான் சிலிண்டருக்கு பணம் வழங்கப்படும், என கூறுகின்றனர். இதன்படி பார்த்தால், ஒரு சிலிண்டரை ஓராண்டுக்கு பயன்படுத்த சொல்கின்றனர். அந்த செலவு தொகையையும், ஓராண்டாக வழங்காமல் இழுத்தடிப்பதால், மீண்டும் விறகுக்கு மாறும் நிலை உள்ளது, என்றார்.

>>>முதல் பருவ பாடப் புத்தகத்தை திரும்ப பெறும் அரசு பள்ளிகள்

இரண்டாம் பருவ கல்வி இணை செயல்பாட்டுக்காக, முதற்பருவத்துக்கான புத்தகங்களை, குழந்தைகளிடம் இருந்து, அரசு பள்ளிகள், திரும்ப வாங்கி வைத்து கொள்ளும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றன. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், சமச்சீர் கல்வி முறையில், முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றனர். முழு கல்வியாண்டுக்குரிய புத்தகங்கள், மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரித்து, ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் முதல் பருவத்துக்கான தேர்வை முடித்து, விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவத்துக்கான பாட வகுப்புகளை நடத்துகின்றன. மூன்று பருவத்துக்கும், பருவம் வாரியாக கல்வி இணைச் செயல்பாடுகள் பாடமாக உள்ளது. குழந்தைகளின் பாடத் திட்டத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளை, செயல்பூர்வமாக, தெரிந்து கொள்ள, கல்வி இணைச் செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிக்சர்ஸ் கலெக்சன், போட்டோ கலெக்சன், காய்கறிகள் மற்றும் பூக்களின் வகைகளை, செயல் பூர்வமாக, செய்முறையாக அட்டைகளில் ஒட்டி, அவற்றை முழுமையாக அறிந்து கொள்ள, கல்வி இணை செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை மேம்படுத்தவே, இச்சிறப்பு ஏற்பாடுஇதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும், 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி குழந்தைகள், அவரவர் வசதிக்கேற்ப, கல்வி இணைச் செயல்பாட்டை, விலை கொடுத்து வாங்கிய பொருட்கள் மூலம் நிறைவேற்றுகின்றனர். ஆனால், அரசு பள்ளி குழந்தைகளுக்கு, கல்வி இணை செயல்பாடுகள் பெரும் செலவாக உள்ளனவசதி வாய்ப்பற்றோர், கிராமத்தில் வசிப்போர், இப்பணியைச் செய்ய சிரமப் படுகின்றனர். இதனால், தங்கள் பள்ளி குழந்தைகளும், கல்வி இணைச் செயல்பாட்டில், திறன் வாய்ந்தவர்களாக உருவாக வேண்டும் என, யோசித்த சில அரசு பள்ளிகள், முதல் பருவ புத்தகங்களை, சம்பந்தப்பட்ட அரசு பள்ளியே, திருப்பி வாங்கி வைத்துள்ளது.
இரண்டாம் பருவ கல்வி இணைச் செயல்பாட்டுக்கு, முதற்பருவ புத்தகத்தில் உள்ள படங்கள், விளக்கங்கள், கருத்துக்களை பயன்படுத்துகின்றனர். அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், "கல்வி இணைச் செயல்பாட்டுக்கு படம், போட்டோ, கருத்து விளக்க பொருட்கள் வாங்கி, மாதம், 100 முதல், 200 ரூபாய்க்கு மேல் செலவாகும் பழைய புத்தகங்களில் இருந்து அவற்றை எடுத்து பயன்படுத்தினால், பெற்றோர் சிரமத்தை குறைக்கலாம் என்பதால், இப்புத்தகங்களை வாங்கி வைத்துள்ளோம்" என்றனர்.

>>>உயர்கல்வித்துறை அமைச்சருடன் அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் சந்திப்பு

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பிரச்னை தொடர்பாக, ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலரை சந்தித்து மனு அளித்தனர்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம், நிதிச் சிக்கல் அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்குறைப்பு மற்றும் ஊழியர்களின் சம்பள குறைப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
இந்நிலையில், நேற்று மார்க்ஸ்சிஸ்ட் எம்எல்ஏ, பாலகிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவின், இணை ஒருங்கிணைப்பாளர் மதியழகன் ஆகியோர் தலைமையில், பல்கலைக்கழக ஊழியர்கள், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் செயலர் ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்
மனுவில், "பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையால், ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு, 9,880 ஊழியர்கள் மற்றும், 3,600 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள ஊழல்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ, பாலகிருஷ்ணன் கூறுகையில், ""நிதிநிலைமையை காரணம் காட்டி, 50 சதவீதம் ஊதிய குறைப்பு, 50 சதவீதம் ஆட்குறைப்பு நடவடிக்கையில், பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகம் தேவையில்லாமல், காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு இருக்காது என, எழுத்துப்பூர்வமாக தரவேண்டும்" என்றார்
கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் மதியழகன் கூறுகையில்,""பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளன. ஊழியர்களை அதிகளவில் எடுத்துவிட்டு, தற்போது ஆட்குறைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது" என்றார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...