கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 16 [November 16]....

நிகழ்வுகள்

  • 1384 - பெண்ணாக இருந்தாலும் பத்து வயது "ஜாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
  • 1532 - ஸ்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் மன்னன் அட்டஹுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
  • 1632 - சுவீடனின் குஸ்டாவிஸ் அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
  • 1846 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1849 - அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
  • 1885 - கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
  • 1896 - முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
  • 1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
  • 1907 - ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
  • 1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1933 - ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் விமானப் படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க் நகரில் குண்டுகளை வீசின.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
  • 1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1945 - பனிப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
  • 1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
  • 1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
  • 1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2002 - சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1922 - ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்
  • 1930 - சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்
  • 1982 - அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
  • 2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)

சிறப்பு நாள்

  • உலக சகிப்புத் தன்மை நாள்

>>>இந்திய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து

புதுமையை படைக்கும் திறன் கொண்ட இந்திய மாணவர்களுக்கு, அடுத்த கட்ட படிப்புகளுக்கு கல்வி  கட்டணம் வசூலிக்க கூடாது என ஜெர்மனி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறியதாவது: ஜெர்மனியில் படிக்க இந்திய மாணவர் களுக்கு ஆர்வம் உண்டாக்கும் பொருட்டே, கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. உணவு மற்றும் தங்கும் இடத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, ஜெர்மனியில் 6,000 இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். சென்ற கல்வியாண்டில் இதற்கான முயற்சியில் சிக்கல் இருந்தது. வரும் கல்வியாண்டில் இச்சிக்கல் சரி செய்யப்பட்டது. மாணவர்கள், ஜெர்மனியில் வேலை செய்து பணம் ஈட்டவும் வழி செய்யப்பட்டுள்ளது. டில்லியில், ஜெர்மனி அரசால் நடத்தப்படும் இந்திய ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகமும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், இருநாட்டு உறவுகளும் மேம்படுவதோடு, அறிவியலில் புதுமைகளை படைக்க முடியும். டில்லியில் உள்ள ஜெர்மன் துõதரகம் அருகே அமைக்கப்படும் "ஜெர்மன் ஹவுஸ்" இந்திய மாணவர்கள், ஜெர்மனியில் பயில்வதற்கான வசதிகளை செய்யும். ஜெர்மன் பல்கலையில், இந்திய மாணவர்கள் ஆங்கிலத்தில் பயிலவும், வழி செய்யப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள், ஜெர்மன் மொழியையும் கற்க முடியும். இளம் அறிவியல் படைப்பாளிகளை உருவாக்குதே ஜெர்மனியின் நோக்கம். "ஜெர்மன் ஹவுஸ்" உடன் இணைந்துள்ள 14 பல்கலைகள் மூலம், இந்திய மாணவர்கள் கட்டணம் இன்றி பயில முடியும். இதனால் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிக்கும். இந்தியாவைப் போலவே பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற இடங்களிலும் ஜெர்மன் ஹவுஸ் அமைக்கப்படுகிறது என்றார்.

>>>வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்?

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பலரும், கடைசிநேர நெருக்கடிகளுக்குள்ளாகி, வாய்ப்பை கோட்டைவிடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில்தான். ஏனெனில், பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது, அதன் செல்லத்தக்க காலம் எவ்வளவு? என்பன போன்ற விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
செல்லத்தக்க காலம் முடிந்துபோதல், பாஸ்போர்ட் மோசமாக சேதமடைந்திருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால், அவர்களுக்கு கிடைத்த பல அரிய வாய்ப்புகள் நழுவி விடுகின்றன. பாஸ்போர்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், அதிலிருக்கும் புகைப்படம். பல வருடங்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டிருந்தால், கட்டாயம் மாறுதல் தேவை. ஏனெனில் அதில் நீங்கள் சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ இருப்பீர்கள். இப்போது, உங்களின் தோற்றம் மிகவும் மாறுபட்டிருக்கும்.
பாஸ்போர்ட் மற்றும் விசா விஷயத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடைமுறை.
தேர்வு முடிவுகள் வெளியாகி, சேர்க்கைக் கிடைப்பது 100% உறுதியான பிறகுதான், விசா நடைமுறைப் பணிகளைத் துவங்க வேண்டும் என்று பல மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு. பல நாடுகள், அவற்றின் மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தலை, குறைந்தபட்சம், படிப்பு தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அனுமதிக்கின்றன. வெளிநாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவே துவங்க வேண்டும். அதன்மூலம், உங்களின் விசாவுக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும்.
அப்படியே நம்பிவிட வேண்டாம்
மாணவர் விசா விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். விசா விதிமுறைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். எனவே, சில வருடங்களுக்கு முன்பாக அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு படிக்க சென்ற உங்களின் நண்பர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனெனில், அவர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.
எனவே, ஒரு சிறந்த வழிமுறை என்னவெனில், நீங்கள் எந்த நாட்டிற்கு கல்வி கற்பதற்காக செல்ல விரும்புகின்றீர்களோ, அந்த நாட்டின் குடியேற்ற மற்றும் கல்வி தொடர்பான இணையதளத்திற்கு சென்று, விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளவும்.
எந்த ஆலோசகரை நாடலாம்?
வெளிநாட்டு கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்க, ஏராளமான ஆலோசகர்கள் கடைவிரித்து காத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், யாரை நம்புவது? யார், வாங்கும் கட்டணத்திற்கு முறையாக சேவை செய்கிறார்கள் என்பதை எப்படி அறிவது? ஒரு ஆலோசகர் நல்லவரா என்பதை, அவரால் ஏற்கனவே பயன்பெற்ற நபர்கள் சொல்வதை வைத்தும், அவரின் தொழில்ரீதியிலான சாதனை மற்றும் அனுபவத்தை வைத்தும் நம்பலாம்.
மேலும், நீங்கள் படிக்கச்செல்லும் கல்வி நிறுவனத்தின் இணையதளம் சென்றால், அதிலேயே, அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்களின் விபரங்கள் இருக்கும். அதன்மூலம் பயன்பெறலாம். தொலைக்காட்சியில் பேட்டி வருகிறது என்பதற்காகவோ, அதிகளவில் விளம்பரங்கள் தருகிறார்கள் என்பதற்கோ, யாரையும் நம்பிவிட வேண்டாம்.
நீங்களே பொறுப்பு
வெளிநாட்டுக் கல்விக்கென்று நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் கூறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முற்றிலும் நீங்களே பொறுப்பு. அதில் எந்த சிறு தவறு நேர்ந்தாலும், உங்களின் பொன்னான வாய்ப்பு பறிபோய்விடும்.
எனவே, அந்த செயலை மேற்கொள்ளும் முன்பாக, சரியான நபர்களிடம் ஆலோசனைக் கேட்டு, நுணுக்கமாகவும், சிறப்பாகவும் செய்து முடித்தல் வேண்டும். இதற்கு நீங்களே 100% பொறுப்பு.
விசா விபரங்கள்
பல நாடுகளில், மாணவர் விசா என்பது, ஒரு குறிப்பிட்ட பல்கலையில், குறிப்பிட்ட படிப்பிற்காக வழங்கப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட மாணவர் விசாவில், நீங்கள் அந்நாட்டில் நுழையும் தேதி குறிப்பிடப்படும்.
சரி பார்க்கவும்
விசாவைப் பெற்றவுடன், அதில் ஏதேனும் பிழைகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். பதிவுக்காக, அதை ஸ்கேன் செய்து நகலெடுக்கவும். ஏதேனும் ஒரு காரணத்திற்காக, நீங்கள் பல்கலையை மாற்ற விரும்பினால், தூதரகத்திடம் அது தொடர்பாக தெரிவித்து, முறையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
பல நாடுகள் multiple - entry student விசாவை வழங்குகின்றன. இதன்மூலம், ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நாட்டிற்குள் சென்று வரலாம். ஆனால் சில நாடுகள், single - entry விசாவை வழங்குகின்றன. எனவே, தேவைப்படும்போது அதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
போர்ட் ஆப் என்ட்ரி
நீங்கள் முதன்முதலில் ஒரு நாட்டிற்கு படிக்கச் செல்கையில், அந்நாட்டில் எந்த விமான நிலையத்தில் முதலில் தரையிறங்குகிறீர்களோ, அந்த இடம்தான் Port of entry எனப்படும். அந்த இடத்தில்தான் immigration மற்றும் customs நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
விசா விண்ணப்பத்திற்கு தேவையானவை
பல்கலையிடமிருந்து, பொருத்தமான அசல் சேர்க்கை ஆவணங்கள்
அசல் கல்விச் சான்றிதழ்கள்(அது ஆங்கிலத்தில் இல்லையெனில், மொழிபெயர்ப்பு தேவை)
அசல் தேர்வு முடிவுகள்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்
வங்கிக் கடன்
தங்குமிடம்
அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
உதவித்தொகை கடிதம்
புகைப்படங்கள்
விசா கட்டணங்கள்

>>>மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

பல்கலைகளில் செயல்பட்டு வரும், அகடமி ஸ்டாப் காலேஜ் - ஏ.எஸ்.சி., மையங்களின் பெயரை, ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் சென்டர் - எச்.ஆர்.டி.சி., என, மாற்ற வேண்டும். தற்போதுள்ள, 66 மையங்களை, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள், 100 ஆக உயர்த்த வேண்டும். இந்த மையங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற, நிபுணர் குழுவின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும், தேர்வு செய்யப்பட்ட, 66 பல்கலைகளில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகாரக் குழுவின் சார்பில், ஏ.எஸ்.சி., மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்; பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள் என, மூன்று தரப்பினருக்கும், அவரவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பணியை, ஏ.எஸ்.சி., மையங்கள் செய்து வருகின்றன. தேசிய கவுன்சில்இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மையங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, உரிய பரிந்துரைகளை அளிக்க, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை, யு.ஜி.சி., அமைத்தது. இக்குழு, 2011, டிசம்பர் முதல், ஜூன் வரை, 66 மையங்களிலும் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கும், யு.ஜி.சி.,க்கும், பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்களை, சமீபத்தில், தேசிய ஆலோசனை கவுன்சில் வெளியிட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த நோக்கங்களுக்காக ஏ.எஸ்.சி., மையங்கள் அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 13 மையங்கள் தான் செயல்பட்டுள்ளன. ஏழு மையங்கள் செயலிழந்து விட்டன; மற்ற மையங்கள், ஓரளவுக்கு செயல்படுகின்றன. மையங்களில், நிரந்தர பணியாளர்கள் இல்லாதது, இயக்குனர் பணியிடமே, பல மையங்களில் காலியாக இருப்பது, அனைத்து வகையான பயிற்சிகளையும் முழுமையாக அளிக்காதது போன்ற குறைகள் அதிகம் உள்ளன. சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன் மற்றும் மதுரை காமராஜர் ஆகிய, நான்கு பல்கலைகளில், ஏ.எஸ்.சி., மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், பாரதிதாசன் பல்கலை மையம், சுத்தமாகச் செயல்படவில்லை என, ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நிபுணர் குழு உறுப்பினரும், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தருமான எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:எந்த பல்கலையையும் குற்றம்சாட்டாமல், அந்த பல்கலையில் உள்ள மையத்தை வலுப்படுத்துவது குறித்து பேச வேண்டும். நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கையை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும், 2012 - 17க்கான, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்படும்.மனிதவள மேம்பாட்டு மையங்கள் வலுப்படுத்தப்பட்டால், உயர்கல்வியின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

>>>இந்தியாவில் உலக கடல்சார் பல்கலை. கிளை: வாசன் தகவல்

உலக கடல்சார் பல்கலைக்கழகத்தின் கிளையை, இந்தியாவில் துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அமைச்சகம் மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், 2008ம் ஆண்டு நவம்பர், 14ம் தேதி பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. நான்காவது பல்கலைக்கழக நாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக முதல் துணைவேந்தரான விஜயன் வரவேற்று பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்கலைக் கழகத்திற்கான புதிய "லோகோ"வை அறிமுகப்படுத்தி, விழா மலரை வெளியிட்டு பேசியதாவது: கடந்த, 1949ம் ஆண்டு இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு, இந்திய கடல்சார் கல்வியுடன் இணைக்கப்பட்டது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, கடல்சார் வாணிபம் என்பது மிக முக்கியமானது. கடல் வர்த்தகத்தை பொறுத்தவரை வரும், 2015ம் ஆண்டு உலக சந்தையில் இந்தியாவின் பங்கு, 9 சதவீதம் அதிகரிக்கும். தற்போது, கடல்சார் பொறியாளர்கள் தட்டுப்பாடு, அதிகளவில் உள்ளது. நாம் ஒவ்வொரு ஆண்டும், மூவாயிரத்திற்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம். தனியார் கல்வி நிறுவனங்களும் சிறந்த கடல்சார் பொறியாளர்களை உருவாக்கி வருகிறது. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியை போல கடல்சார் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும். வரும், 2018 - 19ம் ஆண்டு, அனைத்து மாணவர்களும் கடல்சார் சம்பந்தப்பட்ட, படிப்புகளை தேடி வருவார்கள். இத்துறைக்காக, 285 கோடி ரூபாயினை, அரசு ஒதுக்கியுள்ளது. இதில், உள்கட்டமைப்பிற்காக, 272 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மற்றவைகளுக்காக, 6.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத் தரமான கடல்சார் கல்வியை நம் மாணவர்களுக்கு தரும் முயற்சியாக, உலக கடல்சார் பல்கலைக் கழகத்தின் கிளையை, இந்தியா அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை அமைச்சகம் மேற்கொள்ளும். இவ்வாறு, மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.

>>>மருந்தாளுனர் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு

ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில், இரண்டரை ஆண்டுகள், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், இப்படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைய இருந்தது. தற்போது, இக்காலகெடு, வரும், 28ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org, www.tn.gov.in இணையதளங்களில் பெறலாம்.

>>>வீட்டுக் கடன் பெற ஆண்டு வருவாய் உச்சவரம்பு அதிகரிப்பு

பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருவாய் உடையவர்கள் ஆகியோருக்கு, வீட்டுக் கடன் பெறுவதற்கான, ஆண்டு வருவாய் உச்சவரம்பை, ஒரு லட்சம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டில்லியில், "ஹட்கோ' சார்பில் நடைபெற்ற "பில்ட்டெக்' 2012 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் அஜய் மக்கான், கூறியதாவது: ""பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளவர்களுக்கு, தற்போது, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடன் பெற, ஆண்டு வருவாய், 60 ஆயிரம் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு உள்ளது. இனி, இந்த உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். அதுபோல், குறைந்த வருவாய் பெறுபவர்களுக்கு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் பெறுபவர்கள், "ராஜிவ் அவாஸ் யோஜனா' என்ற இத்திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் பெறலாம். இதன் மூலம், போலியான வருவாய் சான்றிதழ்கள் சமர்ப்பித்து, வங்கிகளில் கடன் பெறுவது தவிர்க்கப்படும். இத்திட்டம் மூலம், 20 லட்சம் பேர், பயன்பெறுவார்கள். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இப்புதிய உச்சவரம்புகள் குறித்து, வங்கிகள் மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படும். இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...