கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மின் தடங்கலின்றி தேர்வு எழுத ஏற்பாடு!

 
பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ தேர்வுகள் நடைபெறும் 2,000 பள்ளிகளில் தேர்வுஎழுதும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வுசெய்து அதற்கேற்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து தேர்வு மையங்களில் அமைத்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

>>>மேரி லீகே எனும் சாகசக்காரி!

 
மேரி லீகே எனும் இணையற்ற தொல்பொருள் ஆய்வாளரின் நூறாவது பிறந்தநாள் (பிப்.6). இவரின் அப்பா அற்புதமான ஓவியர். ஊர் ஊராகச் சென்று தேடித்தேடி ஓவியங்கள் தீட்டும் அவருடன் இவரும் பயணம் போவது வழக்கம்.

அப்படி ஒரு ஜாலியான பயணம் போயிருந்தபொழுது அப்பாவின் நண்பரொருவர் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தபொழுது ஜாலியாக பார்த்துக்கொண்டு இருந்தவர் குப்பையை நோண்ட ஆரம்பித்து, அதிலிருந்து சில பொருட்களை தான் எண்ணியவாறு வகைப்படுத்திக்கொண்டபொழுது இவருக்கு வயது 12!

படிப்பில் கவனம் போகவே இல்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலை. இவருக்கு சீட் இல்லை என கைவிரித்து விட்டது. இவர் மேலும் மேலும் கற்காலம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். பல ஆய்வாளர்களின் கீழே வேலை பார்த்து தனக்கென்று ஒரு தனித்துவமான வரையும் பாணியை உருவாக்கிக்கொண்டார்.

அப்பொழுதுதான் லூயிஸ் லீகேயை சந்தித்தார்; அவரின் நூலுக்கு படம் வரையப்போனவர் காதல் பூண்டார்; திருமணம் செய்து கொண்டார்கள். அவரின் வெவ்வேறு தொல்பொருள் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தார்.

உலகம் முழுக்க சுற்றினார். டான்சானியாவில் 20 லட்சம் ஆண்டுகள் பழமையான கோடரிகள், ஸ்வான்ஸ்கோம்பெவில் ஆதிகால யானையின் பல் என ஆய்வு நீண்டது. இரண்டு முறை நிமோனியா தாக்கியபின்பும் மனந்தளராமல் 1948 இல் மனிதனுக்கு மூதாதையராக கருதப்படும் சுமார் 17 மில்லியன் ஆண்டுகள் பழமையான குரங்கின் மண்டையோட்டை கண்டுபிடித்தார். அதிலும் பல்வேறு பாகங்களாக சிதறிக் கிடந்ததை போராடி ஒன்று சேர்த்தார்.

கணவரின் மறைவுக்கு பின் மிக மிக பழமையான அவற்றின் காலடிகளை பல வருட தேடலுக்குப்பின் கண்டறிந்தார். தனித்துவமான வகைப்பாட்டியலை உருவாக்கினார். அவருக்கு எந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இடமில்லை என சொன்னதோ அதுவே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

எண்பத்தி மூன்று வயதிலும் அவர் தான் கண்டுபிடித்த காலடித்தடத்தை அரசாங்கம் பாதுகாக்கப்போகிறது என தெரிந்ததும் அதை குழந்தையின் துள்ளலோடு இறுதி முறை ஆவலோடு போய் பார்த்துவிட்டு வந்தார். தன் மகனையும் இத்தகு அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுத்தினார்.

"இடையறாத ஆர்வம் என்னை தொடர்ந்து செலுத்தியது; நான் வீடுகளில் ஒடுங்கிப்போவதை விட உலகம் முழுக்க கூடாரங்களில் தங்கி ஆய்வு செய்யவே ஆசைப்படுகிறேன் !" என்ற சாகசக்காரரின் நூற்றாண்டு
பிப்.6-2013.

>>>சார்ல்ஸ் வீட்ஸ்டோன்...

 
சார்ல்ஸ் வீட்ஸ்டோன்... ஓர் இணையற்ற இயற்பியல் அறிஞர். அப்பா இசைக்கருவிகள் விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கோ இலக்கியத்தின் மீது நாட்டம் போனது. சில கவிதைகள் எழுதினார்.

மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த பொழுது வோல்டாவின் பரிசோதனைகள் எனும் பிரெஞ்சு மொழி புத்தகம் இவருக்கு கிடைத்தது. ஆங்கிலேயரான இவர் சிறுக சிறுக பணம் சேர்த்து ஒரு அகராதியை வாங்கி அதைக்கொண்டு அந்த நூலை படித்து முடித்தார். அதில் சொன்னபடி ஒரு பேட்டரியை வடிவமைத்து முடித்ததும் அவர் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

மனிதர் வசிய யாழ் என சொல்லிக்கொண்டு ஒரு கருவியை உருவாக்கினார். அது பியானோ உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளின் இசைக்குறிப்புகளை எழுப்பியது. ஒலியும் ஒளி போலவே பயணம் செய்கிறது என்றும் அதைகொண்டு செய்திகளை கடத்த முடியும் எனவும் சொன்னார்.

கலைடோபோன் என ஒரு கருவியை உருவாக்கினார். ஒலிக்குறிப்புகளை வெளிச்ச உருவங்களாக அது வரைந்து காட்டியது. ஒளியின் திசை வேகத்தை கண்டறியவும் முயன்றார்.

முதன்முதலாக நிறப்பிரிகை உமிழ்வு கோடுகளை கண்டறிந்து ஒளிக்கதிர் ஆய்வுகளில் புரட்சி செய்தார். மின்சார சக்தியால் இயங்கும் ஐந்து ஊசி டெலிகிராப் கருவியை வடிவமைத்தார். இதற்கு ஷில்லிங் எனும் அறிஞரின் கருவியை ஒத்திருந்தாலும் அதை சந்தைப்படுத்தி பலரும் பயன்படுத்தும் வகையில் இவரே மாற்றினார். 1837 இல் இரண்டரை கிலோமீட்டர் தூரத்துக்கு முதல் செய்திக்குறிப்பு இதன் மூலம் அனுப்பப்பட்டது.

இது அவ்வளவாக முதலில் பிரபலமடையவில்லை. பின் 7,500 கிலோமீட்டர் தூரத்துக்கு செய்தி குறிப்புகளை செலுத்தும் அளவுக்கு பிரபலமானது. முக்கிய காரணம் ஜான் டாவெல் எனும் கொலைகாரனை கண்டுபிடிக்க இக்கருவி உதவி இருந்தது.

எந்த கண்டுப்பிடிப்பிலும் பணம் ஈட்ட எண்ணாத இவர் இந்த டெலிகிராப்பில் மட்டும் பணம் பார்த்தார்; அவர் ஆட்டோமாடிக் ட்ரான்ஸ்மீட்டரை உருவாக்கினார். மூளை இரண்டு வெவ்வேறு படங்களை இரண்டு கண்கள் வழியாக வாங்கி அதை முப்பரிமாண படமாக தருகிறது என விளக்கி அதைக்கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கும் ஸ்டீரியோஸ்கோப் கருவியை உருவாக்கினார். -இதுவே இன்றைய முப்பரிமாண படக்கருவிகளுக்கு முன்னோடி. ஏற்கெனவே ஹன்டர் கிறிஸ்டி கண்டுப்பிடித்திருந்த மின்பால அமைப்பை மேம்படுத்தி எளிமையாக்கி அதன் மூலம் மின்சாரம் மற்றும் மின்தடையை ஓம் விதிப்படி எளிமையாக கண்டுபிடிக்கும் வீட்ஸ்டோன் பாலத்தை உருவாக்கினார்.

மின்தடையை கொண்டு கடத்தியின் நீளத்தையும் இந்த அமைப்பில் அளவிட முடியும். மேடையில் பேச வராத இவரின் கண்டுப்பிடிப்புகள் காலத்தை கடந்தும் அவருக்காக பேசுகின்றன என்றால் அது மிகையில்லை. பிப்.6 : அவரது பிறந்த நாள்.

>>>சார்லஸ் டிக்கன்ஸ்.

 
நெகிழவைத்த நாயகன்!

ஒரு கதாசிரியன் எப்படி இருக்க வேண்டும்? இப்படியெல்லாம் இருக்க கூடாது என பாடம் நடத்திய பலபேரை பார்த்து இருப்போம்! ஆனால், அவனுள் மனிதநேயம் பொங்கிப்பாய வேண்டும் என சொல்லாமல் சொல்லியவர் சார்லஸ் டிக்கன்ஸ்.

இளம் வயதில் அப்பாவை கடனால் சிறைக்கு தாரைவார்த்து விட்டு வறுமையில் உழன்ற இவர் தன் எழுத்தின் வரும்படியை குழந்தை தொழிலாளர்களுக்கு செலவு செய்தார். எழுத்திலும் அவர்களின் இன்னல்களை வடித்தார்.

வாசகனின் விருப்பங்களை அன்றைக்கு எழுத்தாளர்கள் சட்டை செய்வதில்லை என்பதை உணர்ந்த இவர் தொடர் கதை பாணியை பிரபலப்படுத்தி ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பிறகும் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை மாற்றி நெகிழவைத்த நாயகன்!

ஏகத்துக்கும் சம்பாதித்த இவர் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் நலிவுற்ற பெண்களுக்கும் ஏகத்துக்கும் உதவினார். தொடர்வண்டி விபத்தில் இவருக்கு பின் இருந்த பலபேர் காயமுற அவர்களை காப்பாற்றி விட்டு தன் பிரபலமான நாவலை ஆரமர விபத்துப் பகுதியில் இருந்து தேடி எடுத்துக்கொண்டு கிளம்பினார்!

கண்ணீரில் அவர் வாழ்க்கை தோய்ந்தாலும் அவரின் எழுத்தின் தரம்தான் அவரை காலங்களைக் கடந்து நிற்க வைக்கிறது!

வாழ்ந்த வாழ்க்கையை எழுத்தில் வடிக்க வரம் வேண்டும் அல்லவா?

அவரின் பிறந்தநாள் இன்று (பிப்.7)

>>>ஸ்ரீனிவாச ராமானுஜனின் ஆசான்!

 
மிகச்சிறந்த மேதைகள் தனக்கு இணையான வல்லுனர்களை புகழ்வது அரிதிலும் அரிது. அந்த அரிய வகையை சேர்ந்தவர் காட்பிரே ஹரால்ட் ஹார்டி. அவர் கண்டறிந்த பொக்கிஷம் ஸ்ரீனிவாச ராமானுஜன்!

ஹார்டி இளம்வயதிலேயே அதுவும் இரண்டு வயதிலேயே பத்து லட்சம் வரைக்கும் எழுதும் ஆற்றல் படைத்த மேதை. எளிய மனிதனுக்கும் புரியும் வகையில் கணிதம் விளக்கப்பட வேண்டும் என்பது இவரின் உறுதியான எண்ணம். அதைசார்ந்தே ஒரு கணிதவியலாளரின் மன்னிப்பு எனும் நூலை எழுதினார்.

கணிதத்தை போர் மற்றும் ராணுவத்தில் பயன்படுத்துவதை அமைதி விரும்பியான இவர் வெறுத்தார். இங்கிலாந்தில் கணிதத்தை வளர்த்ததில் இவருக்கு மிகப்பெரும் பங்குண்டு.
ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக இருந்தபொழுது அந்நிறுவனத்தின் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் மற்றும் மேலாளரும் இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் ஆகியோரும் ராமானுஜத்தின் ஒப்பற்ற கணித மேதமையை உணர்ந்து அவரின் கணிதப் படைப்புகளை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

சென்னைப் பல்கலைக் கழகமும், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க கப்பலேறினார் ராமானுஜன். ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய அவர் எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் என்றார்.

ஒரு டேக்சியை காட்டி 1729 அதிர்ஷ்டமில்லாத எண் என இவர் சொல்ல, அதன் சிறப்பை ராமானுஜன் விளக்க அதுவே ராமானுஜன் எண் ஆனது.

நாற்பதாண்டு காலம் கணிதத்துக்கு ஒப்பற்ற சேவைகள் செய்த இவர், அவரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்ன எனக்கேட்டபொழுது, "கண்டிப்பாக ஸ்ரீனிவாச ராமானுஜன் தான்" என்றார் கம்பீரமாக.

கூச்ச சுபாவம் கொண்டிருந்த அவர் தன் வாழ்நாளின் ஒரே ரொமான்டிக்கான நிகழ்வு ராமானுஜனின் சந்திப்பே என்று சிலாகித்தார்.

ஒரு இந்திய கிளார்க் தானே என்று ஒதுக்காமல் திறமையை திக்கெல்லாம் தெரியும் வண்ணம் வெளிச்சம் பாய்ச்சிய ஒப்பற்ற ஹார்டியின் பிறந்தநாள் இன்று (பிப்.7).

>>>பிப்ரவரி 07 [February 07]....

நிகழ்வுகள்

  • 1238 - மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
  • 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.
  • 1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
  • 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.
  • 1845 - Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
  • 1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.
  • 1962 - கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தாது.
  • 1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
  • 1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.
  • 1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
  • 1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
  • 1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.
  • 1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
  • 1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.
  • 1991 - ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
  • 1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
  • 1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
  • 2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1812 - சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870)
  • 1902 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
  • 1905 - ஊல்ஃப் வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1983)
  • 1965 - கிரிஸ் ராக், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், நடிகர்
  • 1974 - ஸ்டீவ் நேஷ், கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1937 - எலிஹூ ரூட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)

சிறப்பு நாள்

  • கிரனாடா - விடுதலை நாள் (1974)

>>>பிப்ரவரி 06 [February 06]....

நிகழ்வுகள்

  • 1658 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.
  • 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
  • 1840 - நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது.
  • 1863 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
  • 1938 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
  • 1951 - நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
  • 1952 - இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.
  • 1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • 1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.
  • 2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1465 - டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
  • 1892 - வில்லியம் மேர்ஃபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1987)
  • 1911 - ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)
  • 1912 - இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
  • 1945 - பாப் மார்லி, யமேக்கா பாடகர் (இ. 1981)
  • 1983 - ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் வீரர்

இறப்புகள்

  • 1827 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
  • 1931 - மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் பி. 1861)
  • 1952 - ஆறாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1895)
  • 1985 - ஜேம்ஸ் சேஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1906)
  • 1991 - சல்வடோர் லூரியா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
  • 2002 - மாக்ஸ் புருட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...