கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புதிய குடும்ப அட்டை இப்போது இல்லை : இரண்டாண்டுக்கு கூடுதல்தாள் ஒட்ட நடவடிக்கை

தற்போதுள்ள குடும்ப அட்டையை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில், கூடுதல் தாள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2005 ம் ஆண்டு தயாரானவை. அவை, 2009 ம் ஆண்டு வரை பயன்படுத்தும் விதத்தில் அச்சிடப்பட்டிருந்தன. அதில், கூடுதலாக இருந்த பக்கம் 2010 ம் ஆண்டுக்கு பயன்படுத்தப் பட்டது. குடும்ப அட்டைகளை மாதந்தோறும் அத்தியாவசியமாக பயன்படுத்துவதால் சேதமடைந்துள்ளன. உரிய காலம் முடிந்து மேலும் ஓராண்டு பயன்படுத்திய பின்னும், பொது வினியோகத்துறை புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, 2012 ம் ஆண்டுவரை பயன்படுத்தும் வகையில் பழைய அட்டையில் கூடுதல் தாள் இணைக்கப்பட்டது. இந்த அட்டைகள்தான் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
தமிழகத்தில், 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட காலம் பயன்படுத்துவதால் பல அட்டைகள் அழுக்கடைந்து, சிதைந்து தெளிவில்லாமல் உள்ளன. பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், விலையில்லா பொருள் வாங்கும் போது பதிக்கும் முத்திரை போன்றவற்றால், குடும்ப அட்டைகள் தெளிவற்ற நிலையில் உள்ளன. சென்னையில் வாடகை வீடுகளில் வசிப்போர் அடிக்கடி வீட்டை மாற்றுவதால், அட்டையில் திருத்தம் அதிகரித்து தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி மேலும் தள்ளிப்போகிறது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு இணைப்புத்தாளை பயன் படுத்த பொது வினியோகத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு பயன்படுத்துவதற்கான ஆவணங்களை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி துவங்கியுள்ளது.
குடும்ப அட்டை ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கிய ஆவணமாக உள்ளது. முகவரியை உறுதிபடுத்துவது உட்பட முக்கிய ஆவணங்களுக்கு இதுவே சான்றாக உள்ளது. இந்த நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட குடும்ப அட்டையில் மங்கலான போட்டோ, தெளிவில்லாத முகவரி, சேதமடைந்த அட்டை போன்ற காரணங்களால், சான்றாதரமாக சமர்ப்பிக்கும் போது பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.
மத்திய அரசு வழங்கிவரும் ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்ட் வடிவில் வழங்கப்படும் என்று பொது வினியோகத்துறை அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் மாவட்ட வாரியாக நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களிலும் பணி துவங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஆதார் அடையாள அட்டை பணியே முழுமையாக நடக்கவில்லை. இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி எப்போது துவங்கும் என்று தெரியவில்லை.
ஸ்மார்ட் கார்டு தயார் செய்ய, பத்து விரல் ரேகை பதிவு, கண்கருவிழி, போட்டோ பெயர், முகவரி போன்றவற்றை கணினியில் பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகளை முடிக்க நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த பணி துவங்கும் வரை குடும்ப அட்டையில் கூடுதல் இணைப்பு பயன்படுத்துவதற்கு பதில், நகல் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று பொது நலச் சங்கங்கள் கோரியுள்ளன.
இது குறித்து பொது வினியோகத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ""தற்போது உள்ள குடும்ப அட்டையை, பல ஆண்டுகள் பயன்படுத்துவதால், தெளிவற்ற நிலையில் உள்ளது உண்மைதான். இந்த அட்டையை மாற்றி கேட்டு தினம் ஏராளமானோர் புகார் கொடுக்கின்றனர். அட்டை தொலைந்தால்தான் நகல் அட்டை கொடுக்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கும் வரை நகல் அட்டை வழங்குவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
தத்கால் அட்டை பெறுவது எப்படி : ரேசன் பொருள் வழங்காமல், இருப்பிட ஆதாரத்துகாக குடும்ப அட்டை தத்கால் முறையில், பொது வினியோகத்துறை, 20 நாளில் வழங்குகிறது. சென்னையில், உணவு பொருள் வழங்கல் மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். உரிய சான்று இணைத்து விண்ணப்பம் செய்து, மஞ்சள் கலரில் ஆன, பொருள் இல்லா குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை : தமிழகம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டையில், பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்
இரண்டு ஆண்டிற்கு மேல் குடியிருந்தற்க்கான, வங்கி புத்தகம், வாக்காளர் அட்டை, எரிவாயு இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட் போன்ற ஆவணத்தை ஆதார ஆவணமாக இணைக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும். உரிய அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், குடியிருப்பு முகவரியில் வந்து விசாரணை நடத்தி, 20 நாளில் பொருள் இல்லா குடும்ப அட்டை வழங்குவர். இந்த அட்டையை பயன்படுத்த குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த அட்டை முகவரி சான்றுக்கு மட்டுமே பயன்படும். வேறு குடும்ப அட்டையில் பெயர் இருப்பதை மறைத்து விண்ணப்பித்தால், பொருள் இல்லா குடும்ப அட்டை ரத்து செய்யப்படும்.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns