ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் ஆப் நீக்கம்.. கூகுள் அதிரடி! பயனாளர்கள் வாலட் பணம் என்னவாகும்??
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். ப்ளே ஸ்டோரில் சூதாட்ட ஆப்களுக்கு இடமில்லை என்று கூகுள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதே நேரம் ஐஓஎஸ் பயனாளிகள், ஆப்பிள் ப்ளே ஸ்டோர் மூலம் பேடிஎம் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற தடையை விதிக்கவில்லை.
சமீபத்தில் கிரிக்கெட் பேண்டஸி என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுடன் ஆப் அறிமுகம் செய்தது. இப்படி விளையாடும்போது, பணமும் வெல்ல முடியும் என்ற வாய்ப்பை பேடிஎம் வழங்கியது. இதுபோன்ற சூதாட்டத்திற்கு பிளே ஸ்டோரில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது கூகுள்.
இதையடுத்து பேடிஎம்மை, ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.
இந்த ஆப் மத்திய அரசால் தடை செய்யப்படவில்லை என்பதால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்துள்ள பயனாளர்கள் அதை பயன்படுத்த முடிவதாக தெரிவிக்கிறார்கள். டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட சீன செயலிகள் பலவற்றை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து அந்த ஆப்கள் செயலற்று போயின. ஆனால் பேடிஎம் புதிதாக டவுன்லோடு செய்ய முடியாதே தவிர ஏற்கனவே பயன்படுத்துவோர் தொடர்ந்து பயன்படுத்த முடியும். வேலட்டிலுள்ள பணம் குறித்து பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.