மாநில அளவிலான கலா உத்சவ் நிகழ்ச்சிக்குக் கோவை பள்ளி மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவித்து பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், கலா உத்சவ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டிகள் கோவை கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் முடிந்து, மாநில அளவில் நடைபெற உள்ளன. மாநில அளவிலான போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில், நடுவர் குழுவினர் தேர்ந்தெடுத்த மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் கண்ணன் கூறியதாவது:
''குரலிசைப் போட்டி கிளாசிக் பிரிவில் சிஎஸ் அகாடமி பள்ளி மாணவர் சங்கல்ப், அல்வேர்னியா கான்வென்ட் மாணவி ஹிருத்திகா, நாட்டுப்புறப் பாடல் பிரிவில் ஆர்.கே.ரங்கம்மாள் பள்ளி மாணவர் யஷ்வந்த், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இசைக் கருவிகள் இசைத்தல் கிளாசிக் பிரிவில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீரஞ்சனி, பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவர் அகிலேஷ், நாட்டுப்புறக் கருவிகள் இசைத்தல் பிரிவில் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மதன்குமார், ஒண்டிபுதூர் ஆர்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தனுஷ்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
கிளாசிக் நடனப் பிரிவில் பெ.நா.பாளையம் சிவானந்தா பள்ளி மாணவி புவனேஷ் ராஜமாணிக்கம், வித்ய விகாஷினி பள்ளி மாணவி மானசா, நாட்டுப்புற நடனப் பிரிவில் சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ராகவா, மாணவி பூமாதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மணற்சிற்பங்கள் உருவாக்கும் பிரிவில் அசோகபுரம் அரசுப் பள்ளி மாணவர் கைலாஷ், பிரசென்டேஷன் கான்வென்ட் மாணவி விஷ்ணு தீபா, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்துரு, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா, பொம்மலாட்டம் பிரிவில் விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் லோகநாதன், மாணவி பூவிழி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்''.
இவ்வாறு கண்ணன் கூறினார்.