பள்ளிகள் திறப்பு, ஜேஇஇ தேர்வு, ஆன்லைனில் நீட் தேர்வு உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, 2019- 20ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால் 2020- 21ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் இவை குறித்த சந்தேகங்களைப் போக்க, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் இன்று கலந்துரையாடினார்.
அதில் அவர் கூறியதாவது:
''ஆண்டுதோறும் இரண்டு முறை பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும். இந்த முறை 3 அல்லது 4 முறைகள் நடத்துவது குறித்துத் திட்டமிடப்பட்டு வருகிறது.
ஜேஇஇ பாடத்திட்டத்தைப் பல்வேறு வாரியங்கள் குறைத்திருக்கின்றன. சில மாநில வாரியங்கள் பாடத்திட்டக் குறைப்பு அவசியமில்லை என்று முடிவெடுத்துள்ளன. மத்திய அரசும் இதுகுறித்தும் ஆலோசித்து வருகிறது.
இதுவரை நீட் தேர்வுகள் ஆஃப்லைன் முறையிலேயே நடந்து முடிந்திருக்கின்றன. மாணவர்கள் கோரிக்கையைப் பொறுத்து ஆன்லைனில் 2021 நீட் தேர்வை நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
பொதுத் தேர்வுகளுக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுக்கப்படும்.
இதுவரை 17 மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. கோவிட்-19 சூழல் மேம்பட்டவுடன் விரைவில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பலாம்''.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.