கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ( Contributory Pension Scheme - CPS ) - தொடக்கம் முதல் தற்போது வரை - இனி அரசு செய்ய வேண்டியது என்ன..?

 


  •  CPS திட்டத்தை ரத்து செய்தால் அரசின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு...
  • CPS திட்டத்தால் அரசுக்கு செலவினமே தவிர வருமானம் இல்லை.
  • CPS திட்டத்தை இரத்து செய்தால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியாக சேர வாய்ப்பு.  இத்திட்டத்தை இரத்து செய்தால் வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து அரசின் நிதி சுமை குறைய வாய்ப்பு ஏற்படும்.
  • அன்று முதல் இன்று வரை இத்திட்டத்தால் அரசால்  ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் விவரம்....

ஓய்வூதியத் தொகை கிடைக்குமா?

- ஆ.நங்கையார் மணி...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் சுமார் 60 சதவீத ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் கடந்த 2003 ஏப்ரல் மாதத்திற்குப் பின்பு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், நாட்டிலேயே புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழகம் மாறியது.  

அப்போது  முதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகையை அரசு பிடித்தம் செய்து வருகிறது. ஆனாலும் 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று  - மேம்பாட்டு ஆணைய சட்டம்' (பிஃஎப்ஆர்டிஏ) அமலுக்கு கொண்டு வரப்பட்டது.        

2003 டிசம்பர் இறுதியில் இடைக்கால பிஃஎப்ஆர்டிஏ அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களும் பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டத்தில் இணைவது கடந்த 2004 ஜனவரி முதல்  கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் (மேற்கு வங்கம் நீங்கலாக), ஒன்றன்பின் ஒன்றாக புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துவிட்டன. 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்களான பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம்,  வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புதிய  ஓய்வூதியத்  திட்டத்திற்கு நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் எதிர்ப்பு  தெரிவித்து  போராட்டங்கள் நடைபெற்றன. 

அதன் காரணமாக,  2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழுவை அமைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.   

இக்குழு நான்கு மாதங்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.  பின்னர், மூன்று முறை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், வல்லுநர் குழுவின் தலைவராக இருந்த சாந்தஷீலா நாயர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அதன் பின்னர் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். அப்போதும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், மேலும் மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

கடந்த 2018}ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அதே காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், நீதிமன்றம் தலையிட்டு ஆய்வு அறிக்கை தொடர்பான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியது. அதனால், நீதிமன்றத்திலும் ஆய்வு அறிக்கை தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டன.  

கடந்த 2003-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோதிலும், 2016 வரை அத்திட்டத்தில் இணைந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கோ மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கோ பிடித்தம் செய்யப்பட்ட எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை. 

2016 பிப்ரவரி 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரொலியாக, இறந்த ஊழியரின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் அரசின் பங்களிப்புத் தொகையும் ஒரே தவணையில் வழங்கப்பட்டன. ஆனாலும் 17 ஆண்டுகாலமாக பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குவது குறித்து இதுவரை விதிகள் உருவாக்கப்படவில்லை.     

வல்லுநர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த போதிலும், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை தமிழக அரசின் பொது கணக்கில் வைக்கப்பட்டு, மத்திய கருவூலப் பட்டியில் தொடர் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது வரை சுமார் ரூ. 40ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய நிலவரப்படி இந்த முதலீடு பணத்திற்காக 3.17 சதவீதம் வட்டி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சுமார் ஆறு லட்சம்  ஊழியர்களின் பணத்திற்கு வட்டியாக தமிழக அரசு 7.1 சதவீதம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.1500 கோடி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய கருவூலப்பட்டியில் முதலீடு செய்யப்பட்ட தொகை மூலமாக மட்டும் ரூ.797 கோடி தமிழக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்புத் தொகையினை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோல பங்களிப்புத் தொகை சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில் அரசுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதிச் சுமை ஏற்படும். அதே நேரத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தால் சுமார் ரூ.20ஆயிரம் கோடி அரசின் கணக்கில் உபரி நிதியாக சேர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். 

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தால், வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து, அரசின் நிதிச் சுமை குறைய வாய்ப்பு ஏற்படும்.

நன்றி: தினமணி 08-12-2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...