அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?
மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை 26 அக்டோபர் 2020 இல் கூடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தீர்மானம் நிறைவேற்றி, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
ஆளுநர் கிரண்பேடி இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பினார். மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காததால், துணைநிலை ஆளுநரின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேருகின்ற வாய்ப்பு மத்திய பா.ஜ.க. அரசால் பறிபோய் இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் புதுச்சேரி அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு நேற்று (21.01.2021) நீதியரசர் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில், “‘ஒரே நாடு; ஒரே மெரிட்’ என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் தரவரிசை மேற்கொள்ளப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இடஒதுக்கீடு வழங்கினால் அது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்று கூறி இருக்கின்றார்.
இதுமட்டுமல்லாமல், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை” என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுள்ள 7.5 இடஒதுக்கீட்டையும் பறிக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது.
இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு, இடஒதுக்கீடு கொள்கையில் பின்பற்றும் மோசடி தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்டது. சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பி வரும் பா.ஜ.க. அரசின் மனப்பான்மையும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார அளவுகோலைத் திணித்து, “பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதிகள்” என்று ஒரு பிரிவை உருவாக்கி, 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து சட்டத் திருத்தம் செய்து, தகுதி, தரம், திறமை பற்றி கவலைப்படாமல் அதனை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட்ட பா.ஜ.க. அரசு, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினால் தகுதி, தரம் குறைந்துவிடும்” என்று கூச்சலிடுவது ஆதிக்க ஆணவப்போக்கு ஆகும்.
சமூகநீதிக் கோட்பாட்டை நீர்த்துப்போகச் செய்து, இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
புதுச்சேரி அரசின் தீர்மானப்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசுக்குப் பாதம் தாங்கியாகச் செயல்படும் அ.தி.மு.க. அரசுக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.01.2021