மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் வெபினாரில் உரையாடி மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.
சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வர இருக்கும் பொதுத்தேர்வுகள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுமா? என்ற மாணவர்களின் கேள்விக்கு, மாணவர்கள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பொதுத்தேர்வுகளுக்கு படிக்க வேண்டும். நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து எந்த கேள்விகளும் நீட் தேர்விற்கு கேட்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார்.
மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்தும் ஒரே கட்டமாக மீண்டும் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார். மாணவர்கள் கொரோனா காலமான தற்போதைய கால கட்டத்தில் தேர்வு மையங்களுக்கு பயணிப்பது தொடர்பாக பயம் ஏதும் கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.
தொற்று நோய் பரவி வந்த 2020ம் ஆண்டிலேயே நாடு முழுவதும் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் மத்திய அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திறம்பட எதிர்கொண்டதாக பாராட்டினார்.
மேலும் மாணவர்கள் கொரோனா காலத்தில் நீண்ட நேரம் வீட்டிலேயே இருந்ததன் விளைவால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் மன ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள மனோதர்பன் தளத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.