தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான 2144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் 2020 ஆம் ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அந்த பணியிடங்கள் பின்னடை பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மறுதேர்வு வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு தேர்வு வாரியம் 1:2 விகிதத்தில் நடைமுறைப்படுத்தியது. அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அடுத்துள்ள நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே அவர்கள் பள்ளிக்கல்வித்துறையை முற்றுகையிட்டனர். அப்போது 2019-20 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தனர். ஆனால் 10 மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது வரை பணிநியமன ஆணை வழங்கப்படாததால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக 2019 -2020 கல்வியாண்டிற்கான பணியிடங்கள் 1910 உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அந்த பணியிடங்களை சான்றிதழ் சரிபார்த்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை 2018-19 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சந்தித்து 2019-20 ஆம் ஆண்டு அறிவித்துள்ள பணியிடங்களை வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் 2018-19 ஆம் ஆண்டு அறிவித்த பணியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு மறுபடியும் தேர்வு வைத்தே நிரப்பப்படும் என கூறினார்.
இதனால் சான்றிதழ் சரிபார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதால் அதிகப்படியான எண்ணிக்கையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே அந்த பணிகளுக்கு உடனே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.