கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரோனா 2.0 : ஒளிந்து வரும் ஆபத்து! எச்சரிக்கை அவசியம்!

 கரோனா 2.0 : ஒளிந்து வரும் ஆபத்து! எச்சரிக்கை அவசியம்!

- டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம். 



நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு வழக்கமான ரத்தப் பரிசோதனைகளோடு, ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ மூக்குச் சளிப் பரிசோதனையும், நுரையீரல் சி.டி.ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவது இன்றைய நடைமுறை. இனிமேல் அவர்களுக்கு ‘பிராங்காஸ்கோப்’ (Bronchoscope) மூலம் மேற்கொள்ளப்படும் ‘பி.ஏ.எல்’ (B.A.L.) எனும் பரிசோதனையும் தேவைப்படலாம். காரணம், இப்போது நாடு முழுவதும் வேகமெடுக்கும் கரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தப் பரிசோதனையும் தேவைப்படுவதாக கடந்த வாரம் தெரியவந்திருக்கிறது.


மரபணு மாறிய வைரஸ்கள்


கரோனா முதல் அலையில் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பரவிய ‘சார்ஸ் கரோனா வைரஸ் – 2’ என்பது 29 புரதங்களால் ஆன ‘ஆர்.என்.ஏ.’ வைரஸ். அந்த அமைப்பு அப்படியே இப்போது இல்லை. அதன் புரதக்கூறு மரபணு வரிசையில் (Genome) இதுவரை உலக அளவில் 6,888 வித மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் மட்டும் ஒற்றை மரபணு மாற்றம் மற்றும் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த 61 புதிய கரோனா வைரஸ்கள் பரவியுள்ளன. இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுபவை பிரிட்டன் வைரஸ் B.1.1.7, தென்னாப்பிரிக்கா வைரஸ் B.1.351, பிரேசில் வைரஸ் P.1. இந்தியாவில் இப்போது அறியப்பட்டுள்ள  B.1.617. இரட்டை மரபணு மாற்ற வைரஸ்கள்.


இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்த புதிய மரபணு மாற்றங்கள் பெரும்பாலும் கரோனா வைரஸின் கூர்ப் புரதங்களில் (Spike proteins) ஏற்பட்டுள்ளன. நம் உடலில் மூக்கு, தொண்டை, நுரையீரல், சிறுநீரகம், குடல், மூளை, இதயம் மற்றும் ரத்தக் குழாய்  செல்களின் மேற்பரப்பில் ‘ஏ.சி.ஈ.2’ (ACE2) எனும் புரத ஏற்பிகள் காணப்படுகின்றன. இந்தப் புரத ஏற்பிகளோடு புதிய கரோனா கூர்ப் புரதங்கள் பூட்டில் சாவி நுழைவதுபோல் இணைந்து, செல்களுக்குள் புகுந்து, கரோனா தொற்றையும், கோவிட்-19 நோயையும் உண்டாக்குகின்றன.


ஆபத்து என்னவென்றால், இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய மரபணு மாற்றங்களால் கரோனா கூர்ப் புரதங்கள் முன்பைவிட வேகமாக செல்களுக்குள் நுழையும் தன்மையைப் பெற்றுள்ளன. அதனால்தான் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை பரவுவது வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் ஒரு உச்சம் தொடுகிறது.


முக்கியமாக, 20க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினரைத்தான் இது அதிகமாகக் குறிவைக்கிறது. இவர்களுக்கு நோயின் அறிகுறிகளும் முன்பைவிட மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகின்றன. நோயின் தீவிரத்தையும் கடுமையாக்கிவிடுகின்றன. பத்து சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் தேவைப்படுகின்றன. வட மாநிலங்களில் அந்தப் படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் திணறுகின்றன.


மேலும், இந்தப் புதிய மாற்றங்களால் கரோனாவின் நோய் அறிகுறிகளும் மாறியுள்ளன. முதல் அலையில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, வாசனை தெரியவில்லை ஆகிய அறிகுறிகள் பிரதானமாக இருந்தன. இப்போது இந்த அறிகுறிகளைக் காட்டிலும் கடுமையான உடல் வலி, உடல் அசதி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, சிவந்த கண்கள், கை, கால் விரல்களில் சிவப்புத் திட்டுகள் தோன்றுவது ஆகியவை முதன்மை அறிகுறிகளாகின்றன. இதனால் ஆரம்பத்தில் இதை அறிய முடியாமல், தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகின்றன.


இவை மட்டுமல்லாமல், மரபணு மாறிய கரோனா வைரஸ்கள் இப்போது ஒரு ‘திருட்டுத்தனம்’ செய்யவும் ஆரம்பித்துள்ளன. இதுதான் இன்றைய தேதியில் வந்துள்ள கவலை தரும் செய்தி.


ஒளிந்து தாக்கும் கரோனா!


புதுதில்லியில் சென்ற வாரம் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வந்த 100ல் 20 பேருக்கு ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ சளிப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்றே முடிவுகள் கூறின. அவர்களுக்கு ஒரு வாரம் முடிந்த பிறகும்கூட நோயின் அறிகுறிகள் குறையவில்லை. ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ சளிப் பரிசோதனை மறுபடியும் மேற்கொள்ளப்பட்டது. ‘தொற்று இல்லை’ என்றே முடிவு சொன்னது. அதேநேரம், அந்த நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய் கடுமையானது. அவர்களின் நுரையீரல்களை சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள்.  சிலருக்கு தொற்று இருப்பது தெரிந்தது. இன்னும் சிலருக்கு சி.டி. ஸ்கேனிலும் தொற்று இருப்பது தெரியவில்லை.


எனவே, தொற்றை உறுதி செய்வதற்காக ‘பிராங்காஸ்கோப்’ எனும் கருவி மூலம் ‘பி.ஏ.எல்’ பரிசோதனையை மேற்கொண்டனர். இது நுரையீரலில் இருந்து நேரடியாக சளியை வெளியில் எடுத்துப் பரிசோதிக்கும் முறை. இந்தப் பரிசோதனையில் அவர்கள் எல்லோருக்கும் கரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. அப்படியானால், முன்னர் மேற்கொள்ளப்பட்ட ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ மூக்குச் சளி பரிசோதனையில் அவை ஏன் தெரியவில்லை? 


முதல் அலையில் கரோனா கிருமிகள் மூக்குப் பகுதியிலும் தொண்டையிலும்தான் வழக்கமாக தங்கும். ஆனால், கரோனா கூர்ப்புரதங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களால், மூக்கில் தங்காமல், நேரடியாக அவர்களின் நுரையீரல்களுக்குச் சென்று ஒளிந்துகொள்கின்றன.


இங்கேதான் பேராபத்து தொடங்குகிறது. ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ சளிப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் கூறிவிடுவதால், அவர்களுக்கு தொற்றுக்கான சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்களோ தங்களுக்கு தொற்று இருப்பது தெரியாமல் முகக்கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளி இல்லாமலும் பொதுவெளிகளில் நடமாடுகின்றனர். இதனால் அடுத்தவர்களுக்கும் கரோனா வைரஸை பரப்பிவிடுகின்றனர்.


ஒருவர் 60 பேருக்கு பரப்புவார்


‘சைலன்ட் சூப்பர் ஸ்பிரட்டர்’ என அழைக்கப்படும் இவர்களால் தொற்று பரவும்போது அந்தத் தொற்றாளர்களுக்கு கொரோனா வைரஸ் எண்ணிக்கை (வைரல் லோடு) எகிறிவிடுகிறது. கரோனா முதல் அலையில் ஒருவர் 20 பேருக்கு தொற்றைப் பரப்புவார் என்றால், இதன் இரண்டாம் அலையில் 60 பேருக்கு பரப்பிவிடுகின்றார். அப்படிப் பரவியவர்களுக்கும் கரோனா தொற்று ‘திருட்டுத்தனம்’ காட்டிவிடுவதால் அவர்களுக்கும் உரிய சிகிச்சை கிடைப்பது தாமதமாகிறது.


மேலும், அவர்கள் நோய் அறிகுறிகள் கடுமையாகி, மருத்துவமனைக்குத் தாமதமாக வருவதாலும்,  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருவதாலும் அவர்களைக் காப்பாற்ற ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் போன்றவற்றின் துணையுடன் தீவிர சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. அதற்கான மனித ஆற்றல்கள் குறையும்போது அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இப்போது நாட்டில் பல கரோனா சிறப்பு மருத்துவமனைகள் நிரம்பிவருவதும், ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் இதைத்தான் சுட்டுகின்றன.


மருத்துவக் கட்டமைப்புகளுக்கு சிக்கல்!


இனி, கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய ‘பி.ஏ.எல்’ பரிசோதனையும் அவசியம் எனும் நிலைமை உருவானால், இப்போதுள்ள மருத்துவக் கட்டமைப்புகளுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கிவிடும். காரணம், இந்தப் பரிசோதனையை நுரையீரல் நல சிறப்பு மருத்துவர் (Pulmonologist) மட்டுமே மேற்கொள்ள முடியும். அவருக்குத் துணை செய்ய அறுவை சிகிச்சை அரங்கம், மயக்கவியல் மருத்துவர் உட்பட்ட ஒரு தனி குழு தேவைப்படும்.


இப்போது நாட்டில் நுரையீரல் நல சிறப்பு மருத்துவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இந்தப் பரிசோதனை வசதி உள்ள மருத்துவமனைகளும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன. இந்தக் கட்டமைப்பு எல்லா மாவட்ட அரசு மருத்துவமனைகளில்கூட இல்லை. இதற்கு ஆகும் செலவும் அதிகம். இதனால், ஏழை, எளியவர்களுக்கு இந்தப் பரிசோதனை வசதிகள் கிடைப்பது அரிதாகிவிடும். இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும்போது மருத்துவக் குழுவுக்கும் கரோனா பரவலாம். அப்போது நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பையும் அது ஆட்டம் காண வைத்துவிடும்.


 முன்னெச்சரிக்கைகளில் கவனம்


ஆகவே, கரோனாவுக்குக் ‘கடிவாளம்’ போடுவதைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே இந்த நிலைமையைத் தவிர்க்க முடியும். அதற்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளி காப்பது, சுத்தம், சுகாதாரம் பேணுவது போன்றவற்றை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை வீட்டில் இருப்பது, கூட்டம் கூடாமல் இருப்பது, வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.


இல்லாவிட்டால், அரசு இயந்திரங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாகப் பொது முடக்கம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  மரபணு மாற்ற கரோனா வைரஸ்கள் நமக்கு விடுத்துள்ள எச்சரிக்கை இது மக்களே, கவனம்!



‘பி.ஏ.எல்’ பரிசோதனையை எப்படிச் செய்கிறார்கள்?


‘பி.ஏ.எல்.’ (Bronchoalveolar Lavage - BAL) பரிசோதனை ‘பிராங்காஸ்கோப்’ எனும் கருவியின் துணைகொண்டு செய்யப்படுவது. நுரையீரலின் உள்ளமைப்பை நேரடியாகப் பார்த்து அங்குள்ள பாதிப்புகளைக் கணிக்கும் உள்ளார்ந்த பரிசோதனை இது. நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் நோய்களுக்கு சிகிச்சை தரவும் திசுப் பரிசோதனைக்கும் (Biopsy) இது மேற்கொள்ளப்படுவதுண்டு.


பயனாளிக்கு மயக்கம் கொடுத்து, அவரது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் ‘பிராங்காஸ்கோப்’ கருவியை உள்ளே நுழைப்பார்கள். அதில் நுரையீரலுக்குள் சில திரவங்களைச் செலுத்தவும், உறிஞ்சவும் குழாய்கள் இருக்கும். அதன் உள் முனையில் ஒரு கேமிராவும் ஒளி தரும் கருவியும் இருக்கும். அந்த வெளிச்சத்தில் நுரையீரல் நல சிறப்பு மருத்துவர் நுரையீரலின் உள் பகுதிகளைப் பார்த்துக்கொண்டே திசுப் பரப்புகளைக் கழுவுவது, சளியை வெளியில் எடுப்பது, அடைப்புகளை நீக்குவது, கட்டிகளை அகற்றுவது, ரத்த ஒழுக்கைச் சீராக்குவது போன்ற பணிகளை வெளியில் இருந்தே மேற்கொள்வார். இது பொதுவானது.


கரோனா பரிசோதனையில் ‘பிராங்காஸ்கோப்’ கருவி நுரையீரலுக்குள் சென்றதும் மருத்துவர் சிறிதளவு சலைன் திரவத்தை உள்ளே பீய்ச்சுவார். அங்கு சளி சேர்ந்துள்ள திசுப் பரப்புகளை அது கழுவிவிடும். அப்படிக் கழுவிய சளி திரவத்தை உறிஞ்சி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புவார். அதில் கரோனா கிருமிகள் இருப்பது தெரியும். இம்மாதிரியாக கரோனா தொற்று உறுதி செய்யப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Central Bank of India Recruitment 2025

Central Bank of India Recruitment 2025  வேலைவாய்ப்புகள் - Job Notification  ✅ காலி இடங்கள்: 266 Zone Based Officer- JMGS- I Posts ✅ கல்வி தக...