அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை மீண்டும் ஆன்லைனில் தொடர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு கரோனா பரவலால் நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த நவ.9 முதல் ஜன.12 வரை இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையே, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்தது. இத்தேர்வு முடிந்த பிறகு ஜூன் மாதம் முதல் நேரடி முறையில் நீட் பயிற்சியை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இந்நிலையில், கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மீண்டும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடர கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,
‘‘பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு நேரடி நீட் பயிற்சி நிறுத்தப்பட்டு, வழிமுறை தொடர்பான காணொலிகள் மட்டும் மார்ச் மாத இறுதிவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில், பொதுத் தேர்வு தள்ளிப்போனதால் மீண்டும் நேரடி பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் மூலம்மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி, பயிற்சியில் அவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.