தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதியக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்?
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட வாய்ப்புள்ளது. அதேபோல், மக்கள் அதிகளவில் கூடும் பெரிய கடைகளும் மூடப்படலாம். இரவு நேர ஊரடங்கின் நேரத்தை அதிகரிக்கலாம். மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாரச் சந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம். ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்க அதிக வாய்ப்புள்ளது.
பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசின் உயர்மட்ட குழுவும் இதே கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, இந்தக் கரோனாவின் இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம் என்று மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.