தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த பிப்ரவரி கடைசியில் தினசரி பாதிப்பு 450 என்ற நிலை மாறி, தற்போது தினமும் 27 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 27,397. கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி, 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தொற்றை கட்டுப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை.
ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்றிதழ்கள் அவசியம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் இபாஸ் எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போக்குரவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காகவும், திருமணத்திற்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறப்பு மற்றும் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காகவும் மட்டுமே வாகனங்களில் பயணிக்க போலீசார் அனுமதிப்பார்கள். அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.