கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிட் 19: தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்களா ஆசிரியர்கள்? - உண்மை என்ன? - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் விளக்கம்...

 


கோவிட் 19: தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்களா ஆசிரியர்கள்? - உண்மை என்ன? - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் விளக்கம்... (நன்றி: விகடன்)

பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான் சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை." என்கிறார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்.


கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் பிரதானமானது தடுப்பூசி. பொது மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்திருக்கும் தமிழக அரசு, செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்பவர்கள், மருந்தகப் பணியாளர்கள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சித்துறை பணியாளர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்துள்ளது.


கொரோனாவின் வேகம் அதிகரித்ததையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள். மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சூழலில், `பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் வலியுறுத்துவதாகவும் அது சரியான நடைமுறை இல்லை என்றும் சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள், போடாதவர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.


முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி விவரங்களையும் தனியாகக் குறிப்பிட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அது சர்ச்சையாகியிருக்கிறது.


``தடுப்பூசி கட்டாயம் என்று அரசு நிர்பந்திக்க முடியுமா? விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்பதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்?” என்று ஆசிரியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர், ``அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஒரே வழி என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அனைவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் அது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்காது.


ஆனால், அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், போடாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதுதான் பதற்றத்தை உருவாக்குகிறது. ஏனெனில், சாதாரண காய்ச்சலுக்காகப் போட்டுக்கொள்ளும் ஊசிக்கே ஒவ்வாமை பிரச்னை உள்ள ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியானவர்கள், `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமோ?' என அச்சமடைகின்றனர். பயம்தான் பெரிய நோய் என்பார்கள்.


அந்த பயத்துடன் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு வேறு ஏதாவதொரு காரணத்தால் பின்விளைவுகள் ஏற்பட்டால்கூட, `தடுப்பூசியினால்தான் பின்விளைவு ஏற்பட்டது’ என்று சொல்வதற்குக் கூட வாய்ப்புள்ளது. ஆகையால், கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட வைக்காமல் அவர்களின் முழு விருப்பத்துடன் போடச் செய்வதே சிறப்பானதாக இருக்கும்.


இதய நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், நீண்ட நாள்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொள்பவர்களெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பெரிதும் அஞ்சுகின்றனர்.


எனவே, `எந்தெந்த நோயாளிகள் அந்த ஊசியைப் போடக் கூடாது. யார் யாரெல்லாம் போடலாம்’ என்று தெளிவுபடுத்துவதுடன், `தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று அரசு உறுதியளித்தால் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கும் சிலரும் நம்பிக்கையுடன் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள். 


ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று எங்கள் சங்கத்தின் சார்பாகச் சொல்லும்போது கூட, `நான் தொடர்ச்சியாக ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்கிறேன். நான் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? எனக்கு ஒவ்வாமை இருக்கிறது நான் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்? என்று சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலரோ, சென்ற முறை முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, `இந்த தடுப்பூசியை நான் மனமுவந்து சொந்த விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்கிறேன்' என்று கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.


தடுப்பூசியால் ஏதேனும் பின்விளைவுகள் நேர்ந்தால், உங்களது சொந்த விருப்பத்தின் பேரில்தானே தடுப்பூசி எடுத்துக்கொண்டீர்கள்… எங்களுக்குத் தெரியாது என்று அரசு ஒதுங்கிக்கொள்ளுமோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே இந்தக் குழப்பத்தையும் அச்சத்தையும் போக்கி அனைவரையும் அவரவர் முழு விருப்பத்தின் பேரில் கட்டாயப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதுதான் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் கேட்டோம், ``எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான் சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை. தடுப்பூசி விவகாரத்தில் எந்தக் குழப்பமும் வேண்டாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனை ஆசிரியர்கள் பின்பற்றினால் போதுமானது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.” என்றார்.


நன்றி: விகடன்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...