JEE & NEET நுழைவுத்தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அதிகாரி தகவல்...
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டு வருவதாக என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில்தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு முதல் ஜேஇஇ தேர்வானது ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் 2 கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்பின் கரோனா பரவல்காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ 3, 4-ம் கட்ட முதல்நிலைத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. அதேபோல், ஜூலை 3-ம் தேதி நடத்தப்படவிருந்த ஜேஇஇ பிரதானத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.
அதேநேரம் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து இதுவரை எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் நீட், ஜேஇஇதேர்வுகளை நடத்துவதுதொடர்பான ஆலோசனைகளில் என்டிஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வை செப்டம்பர் மாதமும், ஜேஇஇ தேர்வை ஆகஸ்ட் மாதமும் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக என்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகளை ஆகஸ்ட் மாதமும், நீட் நுழைவுத்தேர்வை செப்டம்பரிலும் நடத்துவது குறித்து பரிசீலனை செய்துவருகிறாம். இதற்காக நாடு முழுவதும் கரோனா பரவல் நிலைமையை பகுப்பாய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே தேர்வுகள் நடத்தப்படும்’’ என்றனர்.