தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்விக்கான பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் அச்சிடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
தமிழில் உயர்கல்வி பாடநூல்கள் :
தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாடநூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனால் தமிழ் வழியில் கல்வி பயின்று கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 12ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்து விட்டு கல்லூரியில் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவர்களால் கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை, இதனால் கற்றலில் பாதிப்பு ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாட திட்டங்களை தமிழில் மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி எளிதாக இருக்கும் என கழகத் தலைவர் தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் உயர் கல்விக்கான பாடபுத்தகங்கள் தமிழில் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.