கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

OBC பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...


 ஓ.பி.சி., பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...


கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி வருகிறது. எந்தெந்த ஜாதியினர், இப்பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறித்து, மத்திய அரசே இதுவரை முடிவு செய்தது. இனி, மாநில அரசுகள் முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கும் வகையில், விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.


இட ஒதுக்கீடு

இதுகுறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:கடந்த, 2018ல், மஹாராஷ்டிராவில் அதிகமாக இருக்கும் மராத்தா ஜாதியினருக்கு, அம்மாநில அரசு, 16 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, '50 சதவீதத்திற்கு மிகாமல், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.


'இப்படி, ஒரு ஜாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடாக, 16 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும்' எனக் குறிப்பிட்டு, மராத்தா ஜாதியினருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மராத்தா ஜாதியை போல, நாடு முழுதும் பல ஜாதிகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.


அவற்றுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதில் தவறில்லை என்று, மத்திய அரசு கருதுகிறது. அது, அரசியல் ரீதியிலும், தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறது. இதனால், ஓ.பி.சி., பட்டியலில் யாரை சேர்க்கலாம் என, தான் வைத்திருக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளது. இதனால், மராத்தா உள் ஒதுக்கீடு போன்ற, பல குழப்பங்கள் தீர வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு நினைக்கிறது.


ஏற்கனவே, திருத்தப்பட்ட சட்டமாக இருக்கும் அரசியல் சட்டம், 102ல், மேலும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து, அதை சட்டமாக்க, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, 27 சதவீத ஓ.பி.சி., பட்டியலில், யார் இடம்பெற வேண்டும் என்பதை, இனி மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நன்குடி வேளாளர் போன்ற பல ஜாதிகள், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெறாமல் இருந்தன.


இனிமேல், அவர்களும் ஓ.பி.சி., பட்டியலுக்குள் வரலாம். ஆனால், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் இடையே, இடஒதுக்கீடு விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், மொத்த இடஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என, தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு என, மத்திய அரசு புதிதாக அளித்துள்ள, 10 சதவீதத்தை சேர்த்தால், மொத்த இடஒதுக்கீட்டின் அளவு, 59.5 சதவீதமாகிறது.


குழப்பம் இருக்காது

அதை எதிர்த்தும் பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அது நிலுவையில் இருக்கிறது. ஓ.பி.சி., பட்டியலில், எந்த ஜாதிகள் இடம் பெறும் என்பதை, இனி மாநில அரசே முடிவு செய்யும் என்ற, சட்டத் திருத்தம் வருவதால், மாநில பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் ஜாதியில் இருந்தும், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெற முடியாத குழப்பம் இருக்காது. ஆனால், மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற குழப்பங்கள் தீருமா என, தெரியவில்லை.


மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட தனி உள் ஒதுக்கீடு போலவே, தமிழகத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இனி, அந்த இட ஒதுக்கீடு செல்லுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டுக்கும் பிரச்னை வரலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...